உக்ரைனில் சிக்கித் தவிக்கும் தமிழ்நாட்டு மாணவர்கள்

By செய்திப்பிரிவு

உலகின் எந்தப் பகுதியில் போர் நடந்தாலும், அது எல்லா நாடுகளின் அரசியல் உறவுகளில் மட்டுமின்றி, அன்றாட வாழ்க்கையிலும் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்துகிறது. தற்போது உக்ரைன் மீது ரஷ்யா நடத்திவரும் தாக்குதல்களால், கச்சா எண்ணெய் கடுமையான விலை உயர்வைச் சந்தித்திருக்கிறது. போர் நடக்கக்கூடும் என்ற பதற்றம் உருவானபோதே, கச்சா எண்ணெயின் விலையும் அதிகரிக்கத் தொடங்கிவிட்டது. இது இந்தியா போன்ற ஒரு வளரும் நாட்டின் பொருளாதாரத்தில் பணவீக்கம், நிதிப் பற்றாக்குறை உள்ளிட்ட நீண்ட கால அளவிலான பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடியது.

இந்தியா தனது கச்சா எண்ணெய் தேவையில் சுமார் 80%-ஐ இறக்குமதியின் வாயிலாகவே ஈடுசெய்துவருகிறது. இந்தியாவின் மொத்த இறக்குமதி மதிப்பில், கச்சா எண்ணெய் மட்டுமே சுமார் 25% வகிக்கிறது. இந்தியாவுக்கு சூரியகாந்தி எண்ணெய் ஏற்றுமதி செய்யும் நாடுகளில் ரஷ்யா, உக்ரைன் இரண்டும் முதன்மையானவை. எனவே, சூரியகாந்தி எண்ணெய் விலையும் உயரக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தவிர, உக்ரைனில் நீடித்துவந்த போர்ப் பதற்றத்தின் காரணமாக, இந்த ஆண்டின் முதலிரு மாதங்களில் மட்டுமே இந்திய பங்குச் சந்தையில் முதலீடு செய்யப்பட்ட அந்நிய முதலீடுகள் பெருமளவில் திரும்பப் பெறப்பட்டுள்ளன.

உக்ரைன் போரால் இந்தியா சந்தித்துள்ள நேரடியான உடனடிப் பாதிப்பு, அங்கு உயர்கல்வி பயிலும் இந்திய மாணவர்களின் பாதுகாப்புதான். ஏறக்குறைய 20,000 இந்திய மாணவர்கள் உக்ரைனில் தங்கிப் படித்துவருகின்றனர். அவர்களது பெற்றோர்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர். தமிழ்நாட்டிலிருந்து மட்டும் சுமார் 5,000 மாணவர்கள் உக்ரைனில் மருத்துவம் படித்துவருகின்றனர். அவர்களைச் சாலை மார்க்கமாக ருமேனியா அழைத்துவந்து, அங்கிருந்து இந்தியாவுக்கு விமானத்தில் அனுப்பும் முயற்சிகள் நடந்துவருகின்றன.

இப்படியொரு பதற்றச் சூழலில், தமிழ்நாட்டு மாணவர்களுக்கான விமானச் செலவை அரசே ஏற்கும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருப்பது ஆறுதல் அளிக்கிறது. உக்ரைனில் சிக்கித் தவிக்கும் மாணவர்களுக்குத் தேவையான உதவிகளையும் தகவல்களையும் பெறுவதற்காக சென்னையில் அவசரக் கட்டுப்பாட்டு மையம் ஒன்றும் தொடங்கப்பட்டுள்ளது.

உக்ரைன் செல்லும் இந்திய மாணவர்களில் பெரும்பாலானவர்கள் மருத்துவப் படிப்புக்காகவே செல்கின்றனர். மருத்துவப் படிப்புகளுக்கான கல்விக் கட்டணங்களை வரைமுறைப்படுத்தும் நோக்கத்திலேயே நீட் தேர்வு நடைமுறைப்படுத்தப்பட்டது. ஆனால், அதற்குப் பிறகும்கூட இந்தியாவைக் காட்டிலும் கல்விக் கட்டணங்கள் குறைவாக இருக்கின்றன என்பதாலேயே இந்திய மாணவர்கள் உக்ரைனுக்கு மருத்துவம் படிக்கச் செல்கின்றனர்.

இந்திய மருத்துவக் கல்லூரிகள் ஒவ்வொன்றிலும் உள்ள பேராசிரியர்களைக் கொண்டு ஆண்டுதோறும் மேலும் கூடுதலான மாணவர்களை உருவாக்குவதற்கான வாய்ப்புகளைக் குறித்து ஏற்கெனவே விவாதிக்கப்பட்டுவருகிறது. உக்ரைன் போர் விளைவித்துள்ள உயிரச்சத்தைக் கருத்தில்கொண்டு, இனிமேலாவது மருத்துவக் கல்லூரிகளில் கூடுதல் மாணவர் சேர்க்கைகளைக் குறித்து பரிசீலிக்க வேண்டும்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE