ஆப்கானிஸ்தானுக்கு இந்தியாவின் உணவு உதவி: மனிதநேயத்தின் அடையாளம்!

By செய்திப்பிரிவு

பாகிஸ்தானுடனான நான்கு மாதப் பேச்சுவார்த்தைக்குப் பிறகு, அட்டாரி-வாகா எல்லையிலிருந்து ஆப்கானிஸ்தானுக்கு 2,500 டன் கோதுமையுடன் 50 சரக்குந்துகள் அனுப்பப்பட்டுள்ளன. பாகிஸ்தான் வழியாக இந்த சரக்குந்துகள் மூன்று நாட்களில் ஆப்கானிஸ்தானைச் சென்றடையும். உலக உணவுத் திட்டத்தின் கீழ் முதல் தவணையாக அனுப்பப்பட்டிருக்கும் இந்தச் சரக்குந்துகள், இந்தியாவின் மனிதநேயத்தை உலகுக்குத் தெரிவிக்கும் மகத்தான ஓர் உதாரணம். இந்த உணவு உதவி 50,000 டன்களுக்குத் திட்டமிடப்பட்டுள்ளது. மொத்தம் 2,500 சரக்குந்துகள் ஆப்கானிஸ்தானுக்கு அடுத்தடுத்துப் புறப்படவுள்ளன. உணவுப் பற்றாக்குறை உட்பட இக்கட்டான பொருளாதார நெருக்கடியிலிருக்கும் ஆப்கானிஸ்தானுக்கு வேறெந்த நாடுகளைக் காட்டிலும் இந்தியாதான் அதிகபட்ச உணவு உதவியை அளிக்க முன்வந்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

அமிர்தசரஸில் உள்ள இந்திய உணவுக் கழகத்தின் வைப்புக் கிடங்குகளிலிருந்து அனுப்பப்பட்டுள்ள கோதுமை மூட்டைகள், தரநிர்ணயச் சான்றிதழ்களுடன் ஓராண்டு காலத்துக்குப் பாதிக்கப்படாதவகையில் பாதுகாப்புடன் அனுப்பிவைக்கப்பட்டுள்ளன. கோதுமை மூட்டைகள் ஒவ்வொன்றிலும், ‘ஆப்கானிஸ்தான் மக்களுக்கு இந்திய மக்களின் அன்பளிப்பு’ என்று ஆங்கிலத்திலும் பாஷ்டோ, டாரி மொழிகளிலும் அச்சிடப்பட்டுள்ளன. இந்திய - பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் சரக்குந்துகளை வழியனுப்பிவைத்த நிகழ்வில், இந்தியாவுக்கான ஆப்கானிஸ்தான் தூதுவர் பரீத் மமுந்த்ஸாய் கலந்துகொண்டார்.

தாலிபான்கள் மீண்டும் ஆப்கானிஸ்தானைக் கைப்பற்றியதையடுத்து, தான் கலந்துகொண்டிருக்கும் முதல் நிகழ்வு இது என்று மனம் நெகிழ்ந்துள்ளார். அமிர்தசரஸ், வரலாற்றுச் சிறப்புகளும் பண்பாட்டுச் செழுமையும் கொண்ட நகரம் மட்டுமல்ல 2,500 ஆண்டுகளுக்கும் மேலாக இந்தியத் துணைக்கண்டத்தை மத்திய ஆசியாவுடன் இணைத்த வணிக வழிப் பாதையில் அமைந்த நகரமும்கூட என்று மமுந்த்ஸாய் நினைவுகூர்ந்துள்ளார். இந்த வரலாற்று நினைவுறுத்தல் இந்திய – பாகிஸ்தான் - ஆப்கானிஸ்தான் நாடுகளிடையே நட்புறவு வலுப்பட்டால், சாத்தியமாகக்கூடிய உலகளாவிய வணிக வாய்ப்புகளைச் சுட்டிக்காட்டுவதாகவும் அமைந்துள்ளது.

இந்தியாவின் உணவு உதவி நிரந்தரத் தீர்வு அல்ல என்பதையும் குறிப்பிட்டிருக்கும் மமுந்த்ஸாய், வணிகப் போக்குவரத்தை அனுமதிக்கும்வகையில் ஆப்கானிஸ்தான் தனது எல்லைகளைத் திறந்துவைத்தால் மட்டுமே அதனால் பொருளாதாரத்தை மேம்படுத்திக்கொள்ள முடியும் என்று வலியுறுத்தியிருக்கிறார். ராணுவ பலத்தால் உருவாக்க முடியாத பிராந்திய அமைதியை, சில சமயங்களில் மனிதநேய முன்னெடுப்புகளாலும்கூட உருவாக்க முடியும். ஏற்கெனவே, ஆப்கானிஸ்தானில் அணைக்கட்டுகள், சாலை வசதிகள் என்று பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளை இந்தியா மேற்கொண்டுள்ளது.

பிராந்திய அமைதியில் இந்தியா கொண்டிருக்கும் அக்கறையை பாகிஸ்தான், சீனா, ரஷ்யா ஆகிய அருகமை நாடுகளும் கடைப்பிடித்தால் ஆப்கானிஸ்தானில் மத அடிப்படைவாதத்தின் காரணமாக நிலவிவரும் பதற்றம் தணிவதற்கான வாய்ப்புகள் உண்டு. தெற்காசிய நாடுகளுக்கிடையே நல்லிணக்கம் நிலவும்பட்சத்தில், அது அனைத்து நாடுகளுக்குமே வணிகரீதியான வாய்ப்புகளை உருவாக்கி, பொருளாதாரத்தை வளப்படுத்த உதவும். காலம் கனியட்டும்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கருத்துப் பேழை

8 hours ago

கருத்துப் பேழை

8 hours ago

கருத்துப் பேழை

8 hours ago

கருத்துப் பேழை

6 hours ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

மேலும்