அடுத்து வரவிருக்கும் மக்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு எதிரான ஒரு வலுவான கூட்டணியை உருவாக்குவதற்கான முயற்சிகள் தொடங்கியிருக்கின்றன. ஆனால், அந்தக் கூட்டணிக்கு யார் தலைமை வகிப்பது என்பது குறித்து இன்னும் தெளிவு பிறக்கவில்லை. காங்கிரஸ் கட்சி தலைமையிலான கூட்டணி என்பது எல்லோரையும் உள்ளடக்கக்கூடியதாக இருக்கும் என்று கூறப்பட்டாலும் பிராந்தியக் கட்சிகள் தங்களுக்குள் ஒரு கூட்டணியை உருவாக்குவதற்கான முயற்சிகளிலும் தீவிரமாக இறங்கிவிட்டன.
மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவார் உதவியுடன் காங்கிரஸைத் தவிர்த்துவிட்டு, பிராந்தியக் கட்சிகளின் கூட்டணி ஒன்றை உருவாக்கும் முயற்சியில் இருக்கிறார். அதுபோல, தெலங்கானா முதல்வர் கே.சந்திரசேகர ராவும் பிராந்தியக் கட்சிகளின் கூட்டணியை ஒருங்கிணைக்க முயன்றுவருகிறார். இந்நிலையில், காங்கிரஸுடனான கூட்டணியைத் தொடர்ந்துவரும் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினும் இத்தகைய ஒரு முயற்சியில் இறங்கியிருக்கிறார்.
விரைவில் சென்னையில் நடக்கவிருக்கும் அவரது புத்தக வெளியீட்டு விழாவில் பாஜக அல்லாத மாநில முதல்வர்களும் சிறப்பு அழைப்பாளர்களாகக் கலந்துகொள்ளவிருக்கிறார்கள். மம்தா, கே.சி.ஆர். ஆகியோருடன் ஸ்டாலினும் இப்போது தேசிய அரசியலில் கவனத்தை ஈர்த்துவருகிறார். காங்கிரஸுடன் கூட்டணியில் இருந்துகொண்டே பிராந்தியக் கட்சிகளின் முதல்வர்களோடும் அவர் அரசியல் நட்புறவைப் பேணிவருகிறார் என்பது அவரது அரசியல் நகர்வுகள் எதிர்பார்ப்பை உருவாக்கியிருக்கின்றன.
தேசியக் கட்சியான காங்கிரஸ் தலைமையில் பிராந்தியக் கட்சிகள் ஒன்றிணைந்து நின்றால்தான் பாஜகவை வீழ்த்துவதற்கான வாய்ப்பு உண்டு, பிராந்தியக் கட்சிகள் தங்களுக்கிடையில் உருவாக்கும் கூட்டணி பலவீனமடைய நேரலாம் என்று திருமாவளவன் போன்றவர்கள் வெளிப்படையாகவே எச்சரித்துவருகிறார்கள். தங்களது அன்புக்கும் வார்த்தைக்கும் கட்டுப்பட்டவன் என்று மு.கருணாநிதி பாணியில் ஸ்டாலினும் பதில்சொல்வது திமுகவின் கூட்டணிக் கட்சிகளைப் பதற்றநிலையிலேயே வைத்திருக்கிறது.
காங்கிரஸ் தனது வலுவையும் செல்வாக்கையும் இழந்துநிற்கும் வேளையில், பிராந்தியக் கட்சிகள் தங்களுக்கான கூடுதல் வாய்ப்புகளைக் கேட்டுப் பெறுவதற்கு இது ஒரு வாய்ப்பு. ஆனால், பிராந்தியக் கட்சிகள் பாஜக எதிர்ப்பு என்ற ஒற்றை அடையாளத்தை மட்டும் வைத்துக்கொண்டு கூட்டணி அமைத்தால், மக்களின் நம்பிக்கையைப் பெற்றுவிட முடியுமா என்றொரு சவாலும் அவற்றின் முன்னால் நிற்கிறது. இந்தக் கட்சிகளிடம் குறைந்தபட்சச் செயல்திட்டம்கூட இன்னமும் உருவாகவில்லை. மத்திய - மாநில உறவுகளை விவாதிக்கும் இக்கட்சிகள், மாநிலங்களுக்கு இடையிலான உறவைக் குறித்துப் பேசுவதில்லை.
திமுகவுடன் கொள்கை உறவு பேணும் கேரள இடதுசாரிக் கூட்டணி, பெரியாறு அணை விவகாரத்தில் தமிழ்நாட்டு விவசாயிகளின் நலன்களைக் கருத்தில் கொள்வதில்லை என்பது ஓர் உதாரணம். பாஜக அல்லாத மாநில முதல்வர்களுக்கு இடையில் நட்புறவு உருவாகிவந்தாலும் தற்போது நடந்துகொண்டிருக்கும் ஐந்து சட்டமன்றங்களுக்கான தேர்தல் முடிவுகளுக்குப் பிறகே அதன் போக்கு உறுதிப்படும். பஞ்சாபில் ஆட்சியைத் தக்கவைத்துக்கொண்டு கோவாவிலும் உத்தராகண்டிலும் ஆட்சியைக் கைப்பற்றினால் மட்டுமே காங்கிரஸால் எதிர்க்கட்சிகளின் கூட்டணிக்குத் தலைமை தாங்க முடியும். நடைபெற்றுவரும் தேர்தலின் முடிவுகள் தேசிய அரசியலின் திசைவழியைத் தீர்மானிக்கக்கூடும்.
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
5 hours ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
4 days ago
கருத்துப் பேழை
4 days ago