ஆளுநர்கள் விளையாட்டு

By செய்திப்பிரிவு

ஆறு மாநில ஆளுநர்களைப் பதவி விலக்குவதில் பா.ஜ.க. காட்டிவரும் ஆர்வம் ஒன்றும் ஆச்சரியத்துக்குரியதல்ல. மத்தியில் ஆட்சி மாற்றம் நடக்கும்போதெல்லாம், அரசியல் கட்சிகளைச் சேர்ந்த ஆளுநர்களைப் பதவியிலிருந்து விலக்குவது ஒன்றும் புதிய நிகழ்வல்ல.

1977-ல் ஜனதா கட்சி ஆட்சிக்கு வந்தபோது, காங்கிரஸ் நியமித்த ஆளுநர்களைப் பதவி விலகச் சொன்னபோது நியாயமாகவே பட்டது. பிறகு, காங்கிரஸ் வெற்றிபெற்று, ஜனதா நியமித்த ஆளுநர்களை வலுக்கட்டாயமாக காங்கிரஸ் பதவிநீக்கம் செய்ததைப் பலராலும் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. பிறகு, வாஜ்பாய் தலைமையில் தே.ஜ.கூ. அரசு ஆட்சிக்கு வந்தபோது நியமிக்கப்பட்ட ஆளுநர்களை, காங்கிரஸ் மீண்டும் ஆட்சிக்கு வந்ததும் வெளியேற்றியபோதும் இதே கதைதான். பா.ஜ.க-வின் சிங்கால் அதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்து வெற்றியும் பெற்றார். ஆட்சி மாறியதும் ஆளுநர்களை மாற்றக் கூடாது என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

இப்போது மீண்டும் அதே காட்சி. மத்திய உள்துறைச் செயலாளர் அனில் கோஸ்வாமி ஆறு மாநில ஆளுநர்களைத் தொலைபேசி மூலம் அணுகி, பதவிவிலகுமாறு அறிவுறுத்தியிருக்கிறார். உத்தரப் பிரதேச ஆளுநர் பி.எல். ஜோஷி, சத்தீஸ்கர் ஆளுநர் சேகர்தத் தானாகவே விலகி விட்டனர். கர்நாடக ஆளுநர் எச்.ஆர். பரத்வாஜின் பதவிக்காலம் இந்த மாதமும், ராஜஸ்தான் ஆளுநர் மார்கரெட் ஆல்வாவின் பதவிக்காலம் ஆகஸ்ட்டிலும் முடிகிறது. அசாம் ஆளுநர் ஜே.பி. பட்நாயக் குடியரசுத் தலைவர் முகர்ஜியைச் சந்தித்திருக்கிறார். பதவிவிலக மறுத்துவிட்டதாகத் தெரிகிறது. கேரள ஆளுநராக அவசரஅவசரமாக நியமிக்கப்பட்ட ஷீலா தீட்சித், எழுத்துபூர்வமாக இந்த கோரிக்கையைத் தர வேண்டும் என்று கேட்டிருப்பதாகத் தகவல்.

குஜராத் முதல்வராக மோடி இருந்தபோது அவருடன் மல்லுக்கு நின்ற கமலா பேணிவாலும் இந்தப் பட்டியலில் இருக்கிறார். அகுஸ்டா ரக ஹெலிகாப்டர்களை வாங்க நடந்த பேரத்தின்போது லஞ்சம் கைமாறிய ஊழல் நடந்திருக்கிறது. இந்த ஹெலிகாப்டரை வாங்க முடிவுசெய்தபோது சிறப்புப் பாதுகாப்புப் படையின் (எஸ்.பி.ஜி.) இயக்குநராக இருந்த பி.வி. வாஞ்சு இப்போது கோவா ஆளுநராக இருக்கிறார். அப்போது தேசியப் பாதுகாப்பு ஆலோசகராக இருந்த எம்.கே. நாராயணன் இப்போது மேற்கு வங்க ஆளுநராக இருக்கிறார். இந்த விசாரணையைத் தீவிரமாக நடத்தவிருப்பதால், இவ்விருவரும் ஆளுநர்களாக இருப்பது பொருத்தமல்ல. அதேபோல், டெல்லி முதல்வராக ஷீலா தீட்சித் பதவி வகித்தபோது நடந்த காமன்வெல்த் ஊழல் சர்ச்சையில் அவரைத் தொடர்புபடுத்திப் பேசப்பட்டது. இந்த ஊழல் விசாரணைகளில் சிக்காமல் இருக்கவே ஷீலா தீட்சித் ஆளுநராக்கப்பட்டதாக அவர் நியமிக்கப்பட்டபோதே கூறப்பட்டது.

இந்தியாவில் எல்லா நியமனங்களிலும் அரசியல்தான் முக்கியப் பங்கு வகிக்கிறது. இரண்டு கட்சிகளும் மாறிமாறி இப்படி நடந்துகொள்வதால் யாருக்கும் யாரையும் குற்றம்சாட்டும் தகுதி இல்லை. கறைபடிந்தவர்கள் என்று கருதப்படும் ஆளுநர்கள் மீதான குற்றச்சாட்டுகளை ஆதாரங் களுடன் தயார்செய்துகொண்டு குடியரசுத் தலைவரை அணுகியிருந்தால், அவர்கள் விலகுவதைத் தவிர வேறு வழியே இருந்திருக்காதே?

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE