அண்மையில் வெளிவந்திருக்கும் ஐநாவின் சுற்றுச்சூழல் ஆய்வறிக்கை ஒன்று, உலக அளவில் கரோனா பெருந்தொற்றால் ஏற்பட்ட உயிரிழப்புகளைக் காட்டிலும் சுற்றுச்சூழல் மாசுபாட்டால் அதிக உயிரிழப்புகள் ஏற்படுவதைக் கவனப்படுத்தியிருக்கிறது.
பூச்சிக்கொல்லிகள், பிளாஸ்டிக், மின்சாதனக் கழிவுகள் ஆகியவை சுற்றுச்சூழலில் ஏற்படுத்தும் மாசுபாட்டின் காரணமாக, ஆண்டொன்றுக்குக் குறைந்தபட்சம் 90 லட்சம் பேர் இறந்துள்ளனர் என்றும் ஆனால் அது குறித்து பெரிதும் விவாதிக்கப்படவில்லை என்றும் கூறுகிறது இந்த அறிக்கை. உத்தேசமான மதிப்பீட்டின்படி, கரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 59 லட்சம். உண்மையான எண்ணிக்கை இன்னும் அதிகமாக இருக்கும். என்றாலும், பெருந்தொற்றுப் பரவலைத் தடுப்பதுபோலவே சுற்றுச்சூழல் மாசுபாடுகளைக் கட்டுப்படுத்துவதற்கான அவசரத் தேவையும் உள்ளது என்பதை உணர முடிகிறது.
உலக அளவில் சராசரியாக ஆறில் ஒரு உயிரிழப்புக்குச் சுற்றுச்சூழல் மாசுபாட்டின் பாதிப்புகள் காரணமாக இருக்கின்றன. குறிப்பாக, காற்று மாசுபாட்டின் விளைவான உயிரிழப்புகளே எண்ணிக்கையில் அதிகம். ஆண்டொன்றுக்கு 70 லட்சம் பேர் காற்று மாசுபாட்டின் காரணமாக முன்கூட்டியே உயிரிழக்கிறார்கள். மாசுபாட்டின் விளைவான உயிரிழப்புகளைக் குறைவான மற்றும் மிதமான வருமானம் கொண்ட நாடுகளே மிகப் பெரிய அளவில் சந்திக்கின்றன. முன்களப் பணியாளர்கள் பாதிக்கப்படுவதற்கான அபாயங்களும் நிறையவே இருக்கின்றன. காற்றும் நீரும் மாசுபடுவதால் மனிதர்கள் மட்டுமின்றி விலங்குகள், பூச்சிகள், பறவைகள், நன்னீர் மற்றும் கடல்வாழ் உயிரினங்கள் உள்ளிட்ட பன்மைச் சூழலும் பாதிப்புக்கு உள்ளாகின்றன.
மாசுபாடு அதிகரிப்பதற்கு அரசாங்கங்களும் நிறுவனங்களும் காரணமாக இருப்பதைச் சுட்டிக்காட்டியிருக்கும் ஐநாவின் இந்த அறிக்கை, சில அபாயகரமான வேதியியல் பொருட்களுக்கு உடனடியாகத் தடைவிதிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டிருக்கிறது. மேலும், மாசுபட்ட பகுதிகளைச் சுத்தம்செய்ய வேண்டும் என்றும் அந்தப் பகுதிகளில் வசிக்கும் ஏழை மக்களைப் பாதுகாப்பான வேறு பகுதிகளில் குடியமர்த்த வேண்டும் என்றும் பரிந்துரைத்துள்ளது. இந்த அறிக்கையின் வரைவாளரான சூழலியல் ஆர்வலரும் மனித உரிமைச் செயல்பாட்டாளருமான டேவிட் பாய்ட், மாசுபாடு மற்றும் நச்சுக் கூறுகள் ஆகியவற்றால் ஏற்படும் பாதிப்புகளைக் கட்டுப்படுத்துவதில் தற்போது பின்பற்றப்பட்டுவரும் அணுகுமுறை தோல்வியடைந்துவிட்டது எனக் குறிப்பிட்டிருக்கிறார். சுற்றுச்சூழலுக்கான உரிமை தொடர்ந்து மீறப்பட்டுவருவதாகவும் அவர் கவலை தெரிவித்துள்ளார்.
அடுத்த மாதம் நடக்கவிருக்கும் ஐநா மனித உரிமை கவுன்சில் கூட்டத்தில் இந்த அறிக்கை விவாதிக்கப்படவிருக்கிறது. அக்கூட்டத்தில் பாதுகாப்பான, தூய்மையான, நிலையான சுற்றுச்சூழலும் அடிப்படை மனித உரிமைகளில் ஒன்றாக ஏற்றுக்கொள்ளப்பட உள்ளது. தூய்மையான காற்று, பாதுகாப்பான பருவநிலை, சுகாதாரமான உயிர்க்கோளம், போதுமான நீர், நிறைவான உணவு, நச்சுத்தன்மையற்ற சுற்றுச்சூழல் ஆகியவை அந்த உரிமையின் உட்கூறுகளாக அமையும். சுற்றுச்சூழல் பிரச்சினைகளை மனித உரிமைச் சிக்கலாகவும் ஏற்றுக்கொள்ளும்பட்சத்தில், அதற்கான தீர்வுகள் இனிவரும் காலத்திலாவது சாத்தியமாகும் என்று நம்பலாம்.
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
2 hours ago
கருத்துப் பேழை
23 hours ago
கருத்துப் பேழை
23 hours ago
கருத்துப் பேழை
23 hours ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago