உச்ச நீதிமன்றத்தில் சமீபத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள அறிக்கையில், முன்னாள் மற்றும் இந்நாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் மீதான குற்ற வழக்குகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துக்கொண்டிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டிருக்கும் விவரங்கள் அதிர்ச்சியை ஏற்படுத்துகின்றன. டிசம்பர் 4, 2018 தொடங்கி நாடு முழுவதும் மக்கள் பிரதிநிதிகள் மீதான 2,775 வழக்குகள் முடித்துவைக்கப்பட்டுள்ளன என்றாலும் வழக்குகளின் மொத்த எண்ணிக்கை 4,122-லிருந்து 4,984-ஆக உயர்ந்துள்ளன. இந்த வழக்குகளில் 1,651 வழக்குகள் கடும் தண்டனைக்குரிய கொடுங்குற்றங்களாகும்.
வழக்குகள் விசாரணையில் இருப்பதைக் காரணம்காட்டி, அரசியல்வாதிகள் அரசியலில் தங்களைத் தக்கவைத்துக்கொள்ளவும் தொடர்ந்து தேர்தலில் போட்டியிடவும் செய்கின்றனர். அதைத் தடுக்கும் வகையில் முன்னாள் மற்றும் இந்நாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் மீதான குற்றவியல் வழக்குகளை விரைந்து விசாரிக்க சிறப்பு நீதிமன்றங்களை நிறுவவும் வழக்கு தாமதங்களைத் தவிர்க்க கண்காணிப்புக் குழுக்களை நியமிக்கவும் உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியது. என்றாலும், இன்னமும்கூட அவை அனைத்து மாநிலங்களிலும் முழு வேகம் பெறவில்லை. நிலுவையில் உள்ள வழக்குகளில் 1,899 வழக்குகள் ஐந்தாண்டுகளுக்கும் மேலாக விசாரணையில் இருக்கின்றன.
தற்போது நடக்கும் சட்டமன்றத் தேர்தல்களிலும்கூட குற்ற வழக்கு நிலுவையிலுள்ள வேட்பாளர்கள் பெரும் எண்ணிக்கையில் போட்டியிடுகின்றனர். உத்தர பிரதேச சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களில் 25% பேர், தங்கள் மீது குற்றவியல் வழக்கு பதிவுசெய்யப்பட்டுள்ளதாகத் தங்களது வேட்பு மனுக்களில் குறிப்பிட்டுள்ளனர். போட்டியிடும் மொத்த வேட்பாளர்களில் மொத்தம் 156 பேர் மீது குற்றவியல் வழக்குகள் நிலுவையில் உள்ளன. அவர்களில் 121 பேர் மீது கடும் தண்டனைக்குரிய குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.
பஞ்சாப் மாநில சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடுகின்ற தற்போதைய உறுப்பினர்களில் 16 பேர் மீது குற்ற வழக்குகள் விசாரணையில் உள்ளன. இது உறுப்பினர்களின் மொத்த எண்ணிக்கையில் 14%. கடுமையான குற்றங்கள் புரிந்ததாகக் குற்றம்சாட்டப்பட்டுள்ள உறுப்பினர்களின் எண்ணிக்கை 12.
பெருந்தொற்று காரணமாகச் சுணக்கம் கண்டிருக்கும் சிறப்பு நீதிமன்ற நடைமுறைகளை இன்னும் விரைவுபடுத்த வேண்டும்.
அதே நேரத்தில், குற்றப் பின்னணி உள்ளவர்கள் சட்டமியற்றும் அவைகளில் இடம்பெறுவதைத் தடுக்கும் பொறுப்பு அரசியல் கட்சிகளுக்கும் உண்டு. குற்றப் பின்னணி உள்ளவர்கள் கட்சியின் சார்பில் போட்டியிடுவதற்கான வாய்ப்பு மறுக்கப்படும்பட்சத்தில், அவர்களே தங்களைத் திருத்திக்கொள்வதற்கான வாய்ப்பு உருவாகும். மேலும், அரசியல்ரீதியில் பழிவாங்கும் நோக்கத்துடன் எதிர்க்கட்சியினர் மீது வழக்குகள் தொடர்வதும் ஆட்சி மாற்றத்துக்குப் பின்பு அவ்வழக்குகள் திரும்பப்பெறுவதும் தவிர்க்கப்பட வேண்டும்.
குற்றம்சாட்டப்பட்டவருக்கான சட்டபூர்வ சலுகைகள் சாதாரண குடிமக்களுக்கான உரிமைகள், அவற்றைச் சட்டம் இயற்றுபவர்கள் தங்களது பாதுகாப்பு அரணாக மாற்றிக்கொள்ளக் கூடாது. அனைத்துக்கும் மேலாக, குற்றப் பின்னணி உள்ளவர்களைத் தங்களது நாடாளுமன்ற, சட்டமன்றப் பிரதிநிதியாகத் தேர்ந்தெடுக்கக் கூடாது என்ற மன உறுதியும் வாக்காளர்களிடம் உருவாக வேண்டும்.
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
13 hours ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
4 days ago
கருத்துப் பேழை
4 days ago