அரசுப் பணிகளில் பதவி உயர்வில் பட்டியல் சாதியினர் மற்றும் பழங்குடியினருக்கான இடஒதுக்கீடு குறித்து உச்ச நீதிமன்றத்தின் சமீபத்திய தீர்ப்பு, கவனத்துக்குரியது. இடஒதுக்கீடு தொடர்பில் மிகவும் பிரபலமான இந்திரா சஹானி வழக்கில் (1992) உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பில் பணிநியமனத்தில் மட்டுமே இடஒதுக்கீட்டை ஏற்றுக்கொண்டது, பதவி உயர்வில் இடஒதுக்கீட்டை ஏற்றுக்கொள்ளவில்லை. இதையடுத்து, பட்டியல் சாதியினருக்கும் பழங்குடியினருக்கும் அரசுப் பணிகளில் போதிய பிரதிநிதித்துவம் இல்லையெனும்பட்சத்தில் அவர்களுக்குப் பதவி உயர்விலும் இடஒதுக்கீடு வழங்க வகைசெய்யும் வகையில் அரசமைப்பில் திருத்தம் கொண்டுவரப்பட்டு, கூறு 16(4-ஏ) சேர்க்கப்பட்டது. எம்.நாகராஜ் வழக்கில் (2006), அரசமைப்பின் இந்தப் புதியக் கூறினைச் செல்லும் என்று ஏற்றுக்கொண்ட உச்ச நீதிமன்றம், குறிப்பிட்ட பிரிவினருக்கு அரசுப் பணிகளில் போதிய பிரதிநிதித்துவம் இல்லை என்பதை மெய்ப்பிப்பதற்கான தரவுகளைச் சேகரித்து அவற்றின் அடிப்படையில் இடஒதுக்கீட்டைச் செயற்படுத்த வேண்டும் என்று தீர்ப்பளித்தது.
மத்திய, மாநில அரசுகள் பதவி உயர்வு அளிப்பதற்குப் பின்பற்றும் பணி மூப்புப் பட்டியலை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்த வழக்குகளைத் தொடர்புடைய வழக்குகளாக வகைப்படுத்தி ஒன்றாக விசாரித்துவரும் உச்ச நீதிமன்றம் கடந்த ஜனவரி 28 அன்று இடைக்காலத் தீர்ப்பொன்றை வழங்கியுள்ளது. எம்.நாகராஜ் வழக்கில் ஏற்கெனவே அளித்த தீர்ப்பின்படி, பதவி உயர்வில் இடஒதுக்கீடு வழங்குவதற்கான அரசின் விருப்பதிகாரத்தை உச்ச நீதிமன்றம் இந்தத் தீர்ப்பிலும் ஏற்றுக்கொண்டுள்ளது. இந்த ஒரு கூறினை மட்டும் எடுத்துக்கொண்டு, மாநில அரசின் அதிகாரத்தை உச்ச நீதிமன்றம் அங்கீகரித்திருப்பதாகப் பொருள்விளக்கம் கொள்ளப்படுகிறது. அந்த அதிகாரத்தை மத்திய, மாநில அரசுகள் செயல்படுத்த வேண்டும் எனில், குறிப்பிட்ட பிரிவினருக்குப் போதிய பிரதிநிதித்துவம் இல்லை என்பதைத் தெளிவான தரவுகளோடு எடுத்துவைக்க வேண்டும் என்ற நிபந்தனை குறித்து கனத்த மௌனமே நிலவுகிறது.
தேர்வாணையத்தின் வழி பணிநியமனம் செய்யப்பட்டுத் தற்போது பணியாற்றிவரும் அரசு ஊழியர்களிடையே பதவி உயர்வுக்கான பணிமூப்புப் பட்டியல் குறித்து அதிருப்தி நிலவுகிறது. போட்டித் தேர்வில் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையிலேயே பணிமூப்புப் பட்டியலைத் தயாரிக்க வேண்டும் என்ற பொதுக்கருத்து நிலவுகிறது. இடஒதுக்கீடு, உள்ஒதுக்கீடு என இரண்டு முறைகளையும் உள்ளடக்கிய பணிமூப்புப் பட்டியலைப் பின்பற்றுவதால் பொதுப் பிரிவில் பணிநியமனமாகும் பிற்பட்ட இனத்தவர்களும் பட்டியல் சாதியினரும் பதவி உயர்வில் பாதிக்கப்படுவதாக உணர்கின்றனர். மேலும், தரவுகள் சேகரிக்கப்பட்டால் தங்களுக்கு அரசுப் பணிகளில் இன்னும் போதுமான பிரதிநிதித்துவம் இல்லை என்பது உறுதியாகும் என்றும் பட்டியல் சாதியினர் கருதுகின்றனர். பதவி உயர்விலும் இடஒதுக்கீடு வழங்கும் மாநில அரசின் அதிகாரம் தரவுகளின் அடிப்படையிலேயே அமைய வேண்டும், அதற்கான ஆயத்தங்களையும் அரசு விரைவுபடுத்த வேண்டும்.
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
18 hours ago
கருத்துப் பேழை
18 hours ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
4 days ago
கருத்துப் பேழை
4 days ago
கருத்துப் பேழை
4 days ago
கருத்துப் பேழை
5 days ago
கருத்துப் பேழை
5 days ago
கருத்துப் பேழை
5 days ago