மாநிலங்களுக்கு இடையேயான நீர் உரிமைகளில் தமிழ்நாடு வஞ்சிக்கப்படுவது வழக்கமான ஒன்றாகிவிட்டது. காவிரியின் குறுக்கே கர்நாடகத்தில் மேகேதாட்டு அணை கட்டுவதற்கான முயற்சிகள் ஒருபக்கம் தீவிரமாக நடந்துகொண்டிருக்கின்றன என்றால், இன்னொருபக்கம் முல்லைப் பெரியாறு அணைக்கட்டின் பாதுகாப்பு குறித்து மீண்டும் ஒரு அச்சத்தைக் கேரளம் கிளப்பியிருக்கிறது. இந்த முறை மேற்பார்வைக் குழுவும், மத்திய நீர்வள ஆணையமும் அணையின் உறுதித்தன்மை குறித்து ஆய்வுசெய்ய வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் நிலையறிக்கையைத் தாக்கல்செய்துள்ளன.
உச்ச நீதிமன்றத்தின் உத்தரவையடுத்து, முல்லைப் பெரியாறு அணை இருமுறை ஆய்வுசெய்யப்பட்டு, அதன் பாதுகாப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது. எனினும், 2021-ல் பெய்த பெருமழையின்போது உபரி நீர் திறக்கப்பட்டதையடுத்து, மீண்டும் அணையின் பாதுகாப்பு குறித்த கேள்வியைக் கேரளம் எழுப்பிவருகிறது. கர்நாடகத்தில் மேகேதாட்டு அணைக்காக காங்கிரஸ் கட்சி போராட்டங்களை நடத்தத் தயாராகிவருவதுபோல, கேரளத்திலும் அணையின் பாதுகாப்பை முன்னிறுத்திப் போராட்டங்கள் தூண்டிவிடப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம். பக்கத்து மாநிலங்கள் தங்களது அரசியல் நலன்களுக்காகத் தமிழ்நாட்டின் நீர் உரிமைகளில் துரோகமிழைக்கத் துணிவது துரதிர்ஷ்டவசமானது.
மதுரையையும் அதைச் சுற்றியுள்ள மாவட்டங்களிலும் குடிநீர், பாசனத் தேவைகளைப் பூர்த்திசெய்துவரும் முல்லைப் பெரியாறு அணைக்கட்டு விவகாரத்தில் தமிழ்நாடு கட்சி வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்டு ஒன்றுபட்டு நிற்க வேண்டும். அணையைப் பலப்படுத்தும் பணிகளுக்கு ஒத்துழைப்பு அளிக்காத கேரள அரசு, அந்தப் பணிகள் முடிவதற்கு முன்பே பாதுகாப்பு குறித்து மறு ஆய்வுசெய்ய முயல்வது நியாயமற்றது. அதற்கு மத்திய நீர்வள ஆணையமும் துணைநிற்பது ஆபத்தானது. அணையின் கண்காணிப்புக் குழுக் கூட்டங்களில் தொடர்ந்து அணையின் பாதுகாப்பு உறுதிசெய்யப்பட்டுவரும் நிலையில், மறு ஆய்வு செய்யப்பட வேண்டும் என்ற பரிந்துரை முரணானது.
மாநிலங்களின் தன்னாட்சி, சமூகநீதி போன்றவற்றின் அடிப்படையில் நாடு தழுவிய ஓர் அரசியல் கூட்டணியை உருவாக்கத் தமிழ்நாட்டை ஆளும் திமுக முயன்றுவருகிறது. அதே கூட்டணியில் அங்கம்வகிக்கும் காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள் பக்கத்து மாநிலங்களிலிருந்து தமிழ்நாட்டுக்குக் கிடைக்க வேண்டிய நீருக்குத் தடையாக இருக்கின்றன என்பதை அவ்வளவு எளிதாகப் புறந்தள்ளிவிட முடியாது. சொந்த மாநிலத்தின் நீர் ஆதார வளங்களையே உறுதிசெய்ய முடியாத நிலையில், திமுக முன்னெடுக்கும் கொள்கைக் கூட்டணி சாதிக்கப்போவது என்ன என்பதே சாதாரண ஒரு விவசாயியின் கேள்வி. காங்கிரஸ், பாஜக, சிபிஐ(எம்) என்று தேசியக் கட்சிகள் எதுவென்றபோதும் நீர்ப் பகிர்வில் தமிழ்நாட்டுக்குத் துரோகமிழைக்கவே செய்கின்றன.
மாநிலங்களுக்கு இடையிலான நீர்ச் சிக்கல்களில் ஒவ்வொரு மாநிலத்திலும் ஒவ்வொரு விதமாக அவை நடந்துகொள்கின்றன. தமிழ்நாட்டில் தங்களை நிலைநிறுத்திக்கொள்ளத் துடிக்கும் தேசியக் கட்சிகள் எதுவென்றபோதும் தமிழர்களின் குரலை எதிரொலிக்க வேண்டும் என்பது இங்குள்ள விவசாயிகளின் நியாயமான எதிர்பார்ப்பு. கட்சிகளின் கொள்கைகளைக் காட்டிலும் தமிழ்நாட்டு விவசாயிகளின் தண்ணீர் உரிமையே முதன்மையானது.
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
11 hours ago
கருத்துப் பேழை
11 hours ago
கருத்துப் பேழை
11 hours ago
கருத்துப் பேழை
14 hours ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago