முதல்வர் முன்னெடுக்கும் வாசிப்பு இயக்கம் உலகெங்கும் பரவட்டும்

By செய்திப்பிரிவு

பரிசாகக் கிடைத்த ஒரு லட்சம் புத்தகங்களைப் பள்ளி, கல்லூரிகளுக்கு வழங்க முடிவெடுத்திருக்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின். பொன்னாடைகளையும் பூங்கொத்துகளையும் தவிர்த்துப் புத்தகங்களைப் பரிசளியுங்கள் என்று ஐந்தாண்டுகளுக்கு முன்பு அவர் விடுத்த வேண்டுகோளுக்குக் கிடைத்திருக்கும் வெற்றி இது. பொன்னாடை போர்த்தி வரவேற்பதை ஒரு மரபாகவே நிறுவிவிட்ட திராவிட இயக்கம், இன்று புத்தகங்களைப் பரிசளிப்பதை ஒரு புதிய மரபாகத் தொடங்கிவைத்திருக்கிறது. சமூகத்தில் ஒரு பிரிவினர் தோளில் துண்டு போட உரிமை மறுக்கப்பட்ட காலத்தில் பொன்னாடை அணிவிக்கும் வழக்கம் ஒரு பண்பாட்டுப் புரட்சியாகக் கருதப்பட்டது. கல்வியே உரிமைப் போராட்டத்தின் முக்கியக் கருவியாக இருக்க முடியும் என்ற அனுபவப் பாடத்தின் விளைவாக, இன்று புத்தகங்களை நோக்கி அதன் கவனம் திரும்பியிருக்கிறது என்றும் கொள்ளலாம்.

முக்கிய நபர்களைச் சந்திக்கும்போது தானும் புத்தகங்கள் பரிசளிப்பதை வழக்கமாக வைத்திருக்கிறார் தமிழக முதல்வர். டெல்லி பயணங்களில் அவர் பரிசளித்த புத்தகங்களும் முக்கிய பேசுபொருளாயின. பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்தபோது ‘செம்மொழிச் சிற்பிகள்’ நூலையும் சோனியா காந்தியைச் சந்தித்தபோது ஆர்.பாலகிருஷ்ணனின் ‘ஜெர்னி ஆஃப் எ சிவிலைசேஷன் - இண்டஸ் டு வைகை’ நூலையும் பரிசளித்தார். டெல்லிக்குச் சென்று குடியரசுத் தலைவரைச் சந்தித்தபோது ஓவியர் மனோகர் தேவதாஸின் ‘மல்டிபிள் பேஸட்ஸ் ஆஃப் மை மதுரை’ நூலைப் பரிசளித்தார்.

சட்டமன்ற நூற்றாண்டு விழாவில் கலந்துகொள்ள சென்னை வந்த குடியரசுத் தலைவரை வரவேற்கும்போது, திருக்குறளின் ஆங்கில மொழிபெயர்ப்புடன் சி.சு.செல்லப்பா, தி.ஜானகிராமன், கி.ராஜநாராயணன், ராஜம் கிருஷ்ணன், நீல.பத்மநாபன் ஆகியோரின் நாவல்களின் ஆங்கில மொழிபெயர்ப்புகள் அடங்கிய புத்தகப் பேழையைப் பரிசளித்தார். இந்த ஆங்கில மொழிபெயர்ப்புகள் ஆக்ஸ்போர்டு யுனிவர்சிட்டி பிரஸ், பென்குயின், ஹார்ப்பர் காலின்ஸ் முதலான பிரபல பதிப்பகங்களுடன் இணைந்து, தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம் வெளியிட்டவை என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தில் வெளியிடப்பட்ட நூல்கள் என்றபோதிலும் கட்சி பேதம் காட்டாத முதல்வரின் பெருந்தன்மை பாராட்டத்தக்கது. பெரிதும் கல்வித் துறை அதிகாரிகளின் விருப்பத்தாலேயே முன்னெடுக்கப்பட்ட இந்தப் பதிப்புப் பணிகள் மேலும் வளர்த்தெடுக்கப்பட வேண்டியவை. தமிழ்நாடு பாடநூல் நிறுவனத்தால் ஏறக்குறைய 40 ஆண்டு காலமாகப் பதிப்பிக்கப்படாதிருந்த பல்துறை சார்ந்த அடிப்படைப் பாடநூல்கள் மீண்டும் மறுபதிப்பு கண்டுள்ளன. தமிழ் இணையக் கல்விக்கழகத்துடன் இணைந்து, மின்னூலாக்கம் செய்யப்பட்டு அனைவருக்கும் படிக்கக் கிடைக்கின்றன.

பெருந்தொற்றுக் காலத்தில் பொது நூலகங்கள் மூடப்பட்டிருந்தாலும்கூட இந்த மின்னூலாக்கத் திட்டங்களால் ஆய்வாளர்கள், மாணவர்கள் எனப் பலரும் தங்களது பணிகளைத் தொய்வின்றித் தொடர முடிந்தது. பாடநூல் நிறுவனத்தின் பொது நூல் பதிப்புகள், இணையக் கல்விக்கழகத்தின் மின்னூலகம் ஆகிய திட்டங்களுக்குத் தற்போதைய அரசு மென்மேலும் ஆதரவளிக்கும்பட்சத்தில் தமிழ்நாடு மட்டுமின்றி, உலகெங்கும் வாழும் தமிழர்களுக்கும் அது பெரும்பயன் அளிக்கும்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கருத்துப் பேழை

5 hours ago

கருத்துப் பேழை

5 hours ago

கருத்துப் பேழை

5 hours ago

கருத்துப் பேழை

9 hours ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

மேலும்