உயிர்காக்கும் மருந்துகளுக்காவது ஜிஎஸ்டி வரிவிலக்கு கிடைக்குமா?

By செய்திப்பிரிவு

மாநிலங்களின் கோரிக்கைகள் குறித்த உறுதியான முடிவுகள் எதுவும் எடுக்கப்படாமலேயே ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் முடிந்திருப்பது ஏமாற்றத்தையே அளிக்கிறது. முன்னெப்போதைக் காட்டிலும் மே 28-ல் கூடிய ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டமானது நாடு முழுவதும் மிகுந்த எதிர்பார்ப்பையும் விவாதங்களையும் ஏற்படுத்தியிருந்தது. பெருந்தொற்று காரணமாக ஏற்பட்ட மாநிலங்களின் நிதிச் சுமை அழுத்தங்களே இதற்கான முக்கியக் காரணம்.

ஜூலை 2022-ல் முடிவுக்கு வரவிருக்கும் ஜிஎஸ்டி இழப்பீட்டுத் திட்டத்தை மேலும் சில ஆண்டுகளுக்கு நீட்டிக்க வேண்டும் என்பது பாஜக அல்லாத மற்ற கட்சிகள் ஆளும் மாநிலங்களின் முக்கியக் கோரிக்கை. இது முன்னரே எதிர்பார்க்கப்பட்டதுதான். ஜிஎஸ்டி வரி காரணமான மாநிலங்களின் வருவாய்க் குறைவுக்கு இழப்பீட்டைத் தொடர்வது குறித்து முடிவெடுக்க ஒரு சிறப்புக் கூட்டம் நடத்தப்படும் என்று தெரிகிறது. கடந்த ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் ஜிஎஸ்டி இழப்பீட்டைக் கடனாகப் பெற்றுத்தர ஒன்றிய அரசு இசைந்துள்ளது. அவ்வகையில், மாநிலங்களுக்கு மொத்தம் ரூ.1.58 லட்சம் கோடி அளிக்கப்படும் என்று உறுதியளித்துள்ளது. எஞ்சிய இழப்புகளை ஜிஎஸ்டி இழப்பீடு சிறப்புத் தீர்வையின் வாயிலாக மாநிலங்கள் ஈடுகட்டிக்கொள்ளவும் ஒன்றிய அரசு சம்மதித்துள்ளது. ஆனால், அந்தத் தீர்வையின் விகிதம் மற்றும் கால அளவு குறித்து சிறப்புக் கூட்டத்திலேயே முடிவெடுக்கப்படும் என்று தெரிகிறது.

வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் கரோனா மருந்துகள் மற்றும் உபகரணங்களுக்கு ஜிஎஸ்டியிலிருந்து ஏற்கெனவே வரிவிலக்கு அளிக்கப்பட்டிருந்தது. இந்தச் சலுகையும் மாநிலங்களின் கோரிக்கையை அடுத்தே அளிக்கப்பட்டது. தற்போது இந்த வரிச் சலுகையை மேலும் ஆகஸ்ட் வரையில் நீட்டித்து எடுக்கப்பட்டுள்ள முடிவு வரவேற்கத்தக்கது; இரண்டாம் அலையை எதிர்கொள்வதற்கு இது உதவியாக இருக்கும். இறக்குமதிக்கான வரிச் சலுகையில் கரோனாவுடன் கறுப்புப் பூஞ்சைக்கான மருந்தும் இடம்பெற்றுள்ளது. அதே நேரத்தில், கரோனா சிகிச்சையுடன் தொடர்புள்ள அனைத்து மருந்துகள் மற்றும் உபகரணங்களுக்கும் ஜிஎஸ்டி வரியிலிருந்து முழு விலக்கு அளிக்க வேண்டும் என்று தமிழ்நாடு, கேரளம், வங்கம், பஞ்சாப் ஆகிய மாநிலங்களிடமிருந்து எழுந்த கோரிக்கைகள் ஏற்றுக்கொள்ளப்படவில்லை. முழுமையான வரிவிலக்குக்குப் பதிலாக குறிப்பிட்ட சில பொருட்களின் மீதான வரி விகிதங்களைப் பரிந்துரைப்பதற்காக மட்டும் நிதியமைச்சர்களைக் கொண்ட குழு ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. பத்து நாட்களுக்குள் இந்தக் குழு தனது பரிந்துரைகளை அளிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. ஆனால், வரிவிலக்குக் கோரிக்கையை மிகத் தீவிரமாக வலியுறுத்திவரும் தமிழ்நாடு, இந்தக் குழுவில் இடம்பெறவில்லை என்பது அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பிட்ட சில பொருட்களுக்கான வரி விகிதம் என்ற ஜிஎஸ்டி கவுன்சிலின் குறிப்பிலிருந்தே கரோனா சிகிச்சையுடன் தொடர்புடைய அனைத்து மருந்துகளுக்கும் முழுமையான விதிவிலக்கு இல்லை என்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது. குறைந்தபட்சம் உயிர்காக்கும் மருந்துகளுக்காவது வரிவிலக்குச் சலுகை அளிக்கப்பட வேண்டியது அவசியம்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கருத்துப் பேழை

12 hours ago

கருத்துப் பேழை

12 hours ago

கருத்துப் பேழை

12 hours ago

கருத்துப் பேழை

12 hours ago

கருத்துப் பேழை

10 hours ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

மேலும்