பொருளாதாரத்தை மீட்டெடுக்கக் கசப்பு மருந்து அவசியம் என்று பிரதமர் மோடி உதிர்த்த வார்த்தைகளின் ஈரம் உலர்வதற்குள் வெளியாகியிருக்கிறது ரயில் கட்டண உயர்வு அறிவிப்பு. கடும் நஷ்டத்தில் இழுத்துக்கொண்டிக்கும் ரயில்வே துறைக்கு உத்வேகம் அளிக்கிறோம் என்ற பெயரில், பயணிகள் கட்டணத்தை 14.2%; சரக்கு ரயில் கட்டணத்தை 6.2% உயர்த்தியிருக்கிறது பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு. “ரயில்வே துறையின் நஷ்டத்தைச் சரிகட்ட இது அவசியமான நடவடிக்கை” என்று கட்டண உயர்வுக்கு நியாயம் கூறியிருக்கும் மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி, “முந்தைய காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு நிர்ணயித்த கட்டணத்தையே இப்போது அமலாக்கியிருக்கிறோம்” என்றும் சொல்லியிருக்கிறார்.
கடந்த பல ஆண்டுகளாகவே பயணிகள் ரயில் கட்டணம் பெரிய அளவில் உயர்த்தப்படவில்லை. சந்தையில் நிலக்கரி, கச்சா எண்ணெய் விலை உயர்வால் மின்சாரம், டீசல் விலை பெரிய அளவில் உயர்ந்தபோதும் ரயில்வே துறை அமைதிகாத்தது. இப்போது, பயணிகள் போக்குவரத்தால் மட்டும், மாதம் ஒன்றுக்கு ரூ.900 கோடி இழப்பு ஏற்படும் சூழலில் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. இந்தக் கட்டண உயர்வு மூலம் நஷ்டம் தவிர்க்கப்படுவதுடன் ஆண்டுக்கு ரூ.8,000 கோடி கூடுதல் வருமானம் கிடைக்கும் என்றும் சொல்லப்படுகிறது.
இந்தக் கட்டண உயர்வு அதிரவைக்கக் கூடியதுதான் என்றாலும், பேருந்துப் போக்குவரத்துடன் ஒப்பிடும்போது ரயில் கட்டணத்தின் நியாயத்தைப் புரிந்துகொள்ள முடியும். இந்தக் கட்டண உயர்வுக்குப் பின்னரும் ரயில் கட்டணம் பேருந்துக் கட்டணத்தை எட்டவில்லை என்பதே உண்மை. மதுரையிலிருந்து சென்னைக்கு அரசு பேருந்துக் கட்டணம் ரூ.280. ஆனால், ரயில் கட்டணம் ரூ.170 தான்.
அதேசமயம், பயணிகள் கட்டணத்தை வைத்துதான் ரயில்வேயை நிர்வகிக்க முடியும் என்பதெல்லாம் கடந்த நூற்றாண்டு நிர்வாகப் பார்வை. ஒரு நாளைக்கு 1.3 கோடி மக்கள் இந்திய ரயில்களில் பயணிக்கின்றனர். ஒரு பெரும் சந்தை இது. இதைப் பயன்படுத்தி நம்முடைய ரயில்களிலும் ரயில் நிலையங்களிலும் உள்ள வியாபார வாய்ப்புகளை அதிகரித்தால் அந்த வருவாயை மட்டும் கொண்டே ரயில்வே துறையை நம்மால் இயக்கிவிட முடியும்; வணிக ஒப்பந்தங்கள், விளம்பர வாய்ப்புகளைச் சரியாகத் திட்டமிட்டால். ஏராளமான வளங்களைப் பயன்படுத்தாமல் வைத்திருக்கிறோம். புதிய ரயில் பாதைகள் எவ்வளவு பெரிய வாய்ப்புகள்? புதிய அரசு கவனம் செலுத்த வேண்டிய களங்கள் இவை. அவற்றை விட்டுவிட்டு, முந்தைய அரசின் பாதையிலேயே பயணிக்கக் கூடாது.
இந்திய ரயில்களில் பயணிகள், சரக்குகள் கட்டணம் என்பது அடுத்தடுத்து மேற்கொள்ள வேண்டிய புதிய திட்டங்களுக்கான, விரிவாக்க - மேம்பாட்டுப் பணிகளுக்கான முதலீடாக மட்டுமே மாற வேண்டும். அப்படியொரு நிர்வாகச் சூழல் உருவாகும்போது தான் இந்திய ரயில்வே தன் பழைய பெருமையை மீட்டெடுக்க முடியும்!
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
18 hours ago
கருத்துப் பேழை
19 hours ago
கருத்துப் பேழை
18 hours ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
4 days ago
கருத்துப் பேழை
4 days ago