வரி நல்லது!

புகைப்பழக்கத்துக்கு எதிராக எவ்வளவுதான் பிரச்சாரங்கள் மேற்கொண்டாலும் புகைஞர்களின் எண்ணிக்கைக் குறையவில்லை. குறையாவிட்டாலும் பரவாயில்லை, ஆண்டுதோறும் லட்சக் கணக்கான இளைஞர்கள் புகைப்பழக்கத்துக்கு ஆளாகிறார்கள் எனும்போது இந்த அசுரனை மாய்க்கவே முடியாதா என்ற எண்ணமே தோன்றுகிறது.

புகையிலையால் ஏற்படும் புற்றுநோய் உள்ளிட்ட வியாதிகளால் உலகில் ஆண்டுதோறும் சுமார் 55 லட்சம் பேர் இறக்கின்றனர் என்றால், அவர்களில் 10 லட்சத்துக்கும் மேற்பட்டோர் இந்தியர்கள். உலகில் புகை யிலை பயன்படுத்துவதில் இந்தியா இரண்டாவது இடம் வகிக்கிறது. புகையிலையைப் பயன்படுத்துவதால் நேரடியாகவும் மறைமுகமாகவும் கடும் நோய்களுக்கு ஆளாவோரைக் குணப்படுத்த அரசாங்கம் அதிகம் செலவிட நேர்கிறது.

அரசு செலவிடுவது ஒருபக்கம் என்றால், புகையிலைப் பழக்கம் உள்ளவர்கள் சொந்தமாகச் செலவிட நேர்வதும் கணிசமாக இருக்கிறது. பல லட்சம் குடும்பங்களை இந்தச் செலவு வறுமையை நோக்கித் தள்ளுகிறது. புகையிலையால் ஏற்படும் நோய்களுக்குச் சிகிச்சை எடுத்துக்கொள்வோர் எண்ணிக்கை மட்டுமே இந்தியாவில் 9.3 லட்சம். சிகிச்சை எடுத்துக்கொள்ளாமல் இருப்போர் இதைவிட அதிகமாகக் கூட இருக்கக்கூடும்.

கடந்த 2011- ல் மட்டும், புகையிலையால் பாதிக்கப்பட்டவர்களால் அரசுக்கு ஏற்பட்ட மருத்துவச் செலவு ஒரு லட்சம் கோடி ரூபாய்க்கும் மேல். 2011-12-ல் மத்திய அரசும் எல்லா மாநில அரசுகளும் சுகாதாரத் துறைக்காக ஒதுக்கிய மொத்தத் தொகையைவிட இது 12% அதிகம். அதே வேளையில், புகையிலைப் பொருட்கள் மீது மத்திய அரசு விதித்த வரிகளால் வசூலான தொகை, மேற்கண்ட மருத்துவச் செலவில் வெறும் 17% தான். ஆகையால், புகையிலைப் பொருட்களை அனுமதிப்பதால் அரசுக்கு வருமானம் கிடைக்கிறது என்பது உளுத்துப்போன வாதம்.

எனவே, புகையிலைப் பொருட்களைப் பயன்படுத்துவோர் எண்ணிக்கையைக் கணிசமாகக் குறைப்பதுடன், புதிய தலைமுறை அதன் அருகிலேயே செல்ல முடியாத சூழலை அரசு உருவாக்க வேண்டும். புகையிலையைப் பயன்படுத்துவோர் எண்ணிக்கையை 2020-ல் இப்போதுள்ள எண்ணிக்கையிலிருந்து 15 சதவீதமும், 2025-ல் 30 சதவீதமும் குறைக்க மத்திய சுகாதாரத் துறை இலக்கு நிர்ணயித்திருக்கிறது.

இதற்கான முதல்கட்ட உத்திகளில் ஒன்று… சிகரெட், பீடி, சுருட்டு, மெல்லும் புகையிலை மீதான வரியை மேலும் கடுமையாக உயர்த்துவது. உலக சுகாதார நிறுவனம் இந்த யோசனையை உலகின் எல்லா நாடுகளுக்கும் தெரிவித்துள்ளது. நம்முடைய புதிய சுகாதாரத் துறை அமைச்சர் இதை வரவேற்றுள்ளார். புகையை எதிர்ப்பதற்கான ஒரே உத்தி இதுவல்ல என்றாலும், நிச்சயம் இது பலன் அளிக்கக் கூடிய உத்தி. கட்டுப்படியாகவில்லை என்பதாலாவது பலர் இந்தப் பழக்கத்தை விடக் கூடும் அல்லது குறைத்துக்கொள்ளக்கூடும்.

இந்தியாவில் இப்போதுள்ள வரிவிதிப்பானது புகையிலைப் பொருள் சார்ந்த தயாரிப்பு நிறுவனங்களுக்கும் உபயோகிப்பாளருக்கும் சாதகமாகவே இருக்கிறது. பெயரளவுக்கு ஆண்டுதோறும் வரியை உயர்த்தினாலும் அவர்கள் இதை வெறுத்து, அஞ்சி ஒதுங்கும் அளவுக்கு இல்லை. இனி வரி அஞ்சத் தக்கதாக இருக்க வேண்டும்!

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE