ஆரம்பமாகிறது இன்னொரு பரிசோதனைக் காலம்!

By செய்திப்பிரிவு

நாட்டின் பொதுநலன் கருதி கசப்பான சில முடிவுகளை எடுக்க வேண்டியிருக்கும் என்று பிரதமர் மோடி பேசியிருக்கிறார். இந்த நாட்டு மக்கள் இன்னும் எவ்வளவு நாட்களுக்குக் கசப்பு மருந்துகளைச் சகித்துக்கொள்ள வேண்டும் என்று தெரியவில்லை. தவிர, யாருடைய நோய்க்கு யார் மருந்து சாப்பிடுவது என்றும் தெரியவில்லை.

புதிய அரசின் நிதிநிலை அறிக்கை தொடர்பாக மக்களிடம் இருக்கும் எதிர்பார்ப்புகளும் அரசாங்கத்திடம் இருக்கும் கணக்கும் வெவ்வேறானவை. மோடி, எளிய மக்களுக்கான நலத்திட்டங்களைக் கொண்டுவருவார், கல்வி, சுகாதாரம் உள்ளிட்ட அடிப்படைக் கட்டு மானங்களைப் பலப்படுத்தும் திட்டங்களை அறிமுகப்படுத்துவார், வரு மான வரிவிலக்கு வரம்பை ரூ. 5 லட்சமாக உயர்த்துவார் என்றெல்லாம் எதிர்பார்ப்பில் மக்கள் இருக்கிறார்கள். அரசாங்கமோ எதிலெல்லாம் வரிகளை உயர்த்தலாம் என்ற கணக்கில் இருப்பதாகத் தெரிகிறது.

புதிய அரசாங்கம் பெட்ரோலியப் பொருட்கள் மீதான வரிவிதிப்பை மேலும் அதிகமாக்கும் என்று தெரிகிறது. ஆண்டுக்கு ரூ 9,60,000 கோடி, பெட்ரோலிய இறக்குமதிக்காகச் செலவழிக்கும் ஒரு நாடு – அதுவும் தன்னுடைய பெட்ரோலியத் தேவையில் 80%-க்கும் அதிகமாக இறக்குமதியைச் சார்ந்திருக்கும் ஒரு நாடு - நிச்சயம் எரிபொருள் கொள்கையில் மாற்றங்களைக் கொண்டுவரத்தான் வேண்டும்.

அதிலும், சர்வதேசத்தின் சமீபத்திய போக்குகள் இந்தியாவைப் புதிய எரிபொருள் கொள்கையை நோக்கி நகர்வதற்கு நிர்ப்பந்திக்கின்றன.

இராக்கில் கொதிநிலையை எட்டியிருக்கும் உள்நாட்டுப் போரால் சர்வதேச அளவில் கச்சா எண்ணெயின் விலை உயர்ந்துவருகிறது. கச்சா எண்ணெய் இறக்குமதியில் கணிசமான பகுதிக்கு இராக்கை நம்பியிருக்கும் இந்தியாவுக்கு இது இரட்டைத் தலைவலி. ஒருபுறம் கச்சா பெட்ரோலிய எண்ணெய்க்கு வேறு நாட்டைத் தேட வேண்டும். விலை உயர்வால் அந்நியச் செலாவணியை மேலும் இழக்க வேண்டிவரும். ஆக, எப்படியும் நாம் நம்முடைய பெட்ரோலியத் தேவையைக் குறைப் பதற்கான நடவடிக்கையை எடுத்துதான் ஆக வேண்டும். ஆனால், அதற்கான தீர்வு பெட்ரோலியப் பொருட்களுக்கான கூடுதல் வரிவிதிப்பு அல்ல. பொதுப் போக்குவரத்தைத் தீவிரமாக உத்வேகப்படுத்தவும் தனியார் போக்குவரத்தைக் கடுமையாகக் குறைப்பதற்குமான புதிய செயல்திட்டம்தான் தேவை.

முறையான சாலை, பேருந்து வசதி இல்லாத கிராமங்களிலிருந்து எல்லாத் தேவைகளுக்கும் மொபெட்டை உருட்டிக்கொண்டுவரும் ஒரு சாமானியருக்கும் எல்லாப் போக்குவரத்து வசதிகளும் உள்ள நகரத்தில் ஒன்றரைக் கோடி ரூபாய் காரில் தனியாக உல்லாசச் சவாரி வரும் கோடீஸ்வரர்களுக்கும் ஒரே விலையில் பெட்ரோலியப் பொருட்கள்; இருவருக்கும் ஒரே வரி என்பது எப்படி நியாயமாக இருக்கும்?

பொருளாதார வளர்ச்சி, தொழில் வளர்ச்சி என்ற பெயரில் பெருநிறுவனங்களும் பன்னாட்டு முதலாளிகளும் கடந்த காலங் களில் நிறையவே அனுபவித்துவிட்டார்கள். அவர்களுக்கும் அடித் தட்டு மக்களுக்கும் அரசு ஒரே மருந்தைக் கொடுக்க முடியாது. பொருளாதாரத்தைத் தூக்கி நிறுத்தவும் புதிய திட்டங்களைக் கொண்டுவரவும் அரசுக்கு வரி வருவாய் முக்கியம்தான். ஆனால், எங்கு வரி விதிப்பது, யாருக்கு எவ்வளவு வரி விதிப்பது என்பதில் தர்மம்

முக்கியம்!

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE