மனித சமுதாயம் கடந்துவந்த அரசியல் அமைப்புகளிலேயே இதுவரையில் ஆகச் சிறந்ததாகக் கருதப்படுவது ஜனநாயகம்தான். காலம்காலமாகத் தொடர்ந்துவந்த முடியாட்சியின் கொடுங்கோன்மைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த ஜனநாயகம்தான் மக்களுக்குத் தங்களை ஆள்பவர்களைத் தேர்ந்தெடுக்கும் உரிமையை அளித்தது. உலகம் முழுவதும் இன்று பரவலாக நடைமுறையில் இருக்கும் இந்த அரசியல் வழிமுறையானது எத்தனையோ தலைவர்களின் கனவுகளாலும் தியாகங்களாலும் உயிர்க் கொடைகளாலும் விளைந்தது.
காலனியச் சுரண்டலின் பிடியிலிருந்து வெளிப்பட்ட இந்தியா உடனடியாக ஜனநாயகப் பாதையைத் தேர்ந்தெடுத்துக்கொண்டது இந்தியர்களாகிய நம் அனைவருடைய அதிர்ஷ்டம். பிரிட்டிஷ் நாடாளுமன்ற முறைகளைப் பற்றினாலும் ஜனநாயக நாடாக மட்டுமின்றிக் குடியரசு நாடாகவும் நாம் மாறினோம். இந்தியக் கூட்டாட்சியை வலுப்படுத்தும் வகையில் மாநில அளவிலும் சட்டமியற்றும் அதிகாரங்களைக் கொண்ட சட்டமன்றங்களை உருவாக்கினோம். சுதந்திரத்துக்கு முன்பு, மக்கள் அனைவருக்கும் வாக்குரிமை வழங்கப்படாத காலத்தில் மாகாணச் சட்டமன்றங்களுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களின் பிரதிநிதிகள்தான் இந்திய அரசமைப்புச் சட்ட அவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டனர் என்றாலும் அவர்கள் ஒருமித்து எடுத்த முடிவுகளில் அனைவருக்கும் வாக்குரிமை என்பதும் ஒன்று.
இந்தியாவின் பொருளாதார ஏற்றத்தாழ்வுகளால் மட்டுமின்றி இனக்குழு அடையாளங்களாலும் சமய நம்பிக்கைகளாலும் வேறுபட்டுக் கிடக்கிற நம் அனைவரையும் சம உரிமையும் சம அந்தஸ்தும் கொண்டவர்களாக வாக்குரிமை மாற்றியிருக்கிறது. ஐந்தாண்டுகளுக்கு ஒரு முறை ஒன்றிய அரசையும் மாநில அரசையும் தேர்ந்தெடுக்கிற உரிமைகளைப் பெற்றிருக்கிறோம். மாநில சட்டமன்றத் தேர்தலுக்கு நடக்கும் தேர்தல் வழியாக மாநிலங்களவைக்கான மறைமுகத் தேர்தலிலும் செல்வாக்கு செலுத்தும் வாய்ப்பைப் பெற்றிருக்கிறோம். நம் ஒவ்வொருவருடைய அரசியல் கருத்துகளும் வேறுபட்டிருக்கலாம். அரசியல்ரீதியில் நமது விருப்பங்களும் நோக்கங்களும் வேறுபட்டிருக்கலாம். அதை ஜனநாயக வழியில் நின்று வெளிப்படுத்துவதற்கான வாய்ப்பை வாக்குரிமை வழங்குகிறது.
இதற்கு முன்பு நடந்த தேர்தல்களிலிருந்து தற்போது நடைபெறும் சட்டமன்றத் தேர்தல் முக்கியத்துவம் கொண்டதாக மாறியிருக்கிறது. கரோனா பெருந்தொற்றின் பாதிப்புகளால் உலகம் முழுவதுமே செயலற்று நிற்கிறது. குடிமக்களின் வாழ்வும் வளமும் அரசு நிர்வாகங்களையும் அதன் முடிவுகளையுமே நம்பியிருக்கும் இந்த அரசியல் யுகத்தில், மக்களாட்சியில் அங்கம் வகிக்கும் ஒவ்வொருவரும் தங்களது ஜனநாயகக் கடமையை ஆற்ற வேண்டியது அவசியம். அதன் வழியாகவே இயற்கையின் எந்தவொரு சவாலையும் கூட்டாக எதிர்கொள்வதற்கான பெரும் சக்தியைப் பெறுகிறோம். வாக்குகளை அளிப்பதற்கு முன்னால் ஒவ்வொரு அரசியல் கட்சியின் கொள்கைகளையும் தொலைநோக்குத் திட்டங்களையும் தேர்தல் கால வாக்குறுதிகளையும் கணக்கில் கொண்டு முடிவெடுக்க வேண்டுமேயன்றி, தேர்தல் காலத்தில் வாக்குகளை எளிதாகப் பெறுவதற்காகத் தேடி வரும் அற்பப் பயன்களுக்கு ஆட்பட்டுவிடக் கூடாது. நீங்கள் அளிக்கிற வாக்கு தமிழகத்தின் அடுத்து வரும் ஐந்தாண்டுகளைத் தீர்மானிக்க இருக்கிறது. நமது வாக்கு, நமது உரிமை. அதுவே ஜனநாயக அரசமைப்பின் வாயிலாக நமக்குக் கிடைத்திருக்கும் அத்தனை உரிமைகளுக்குமான ஆதாரம்.
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
11 hours ago
கருத்துப் பேழை
11 hours ago
கருத்துப் பேழை
10 hours ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
4 days ago
கருத்துப் பேழை
4 days ago
கருத்துப் பேழை
4 days ago
கருத்துப் பேழை
5 days ago
கருத்துப் பேழை
5 days ago
கருத்துப் பேழை
5 days ago