கும்பகோணம் அருகே உள்ள உடையாளூர் கிராமத்தில் 1933-ல் பிறந்து, தமிழ் கலை, இலக்கியப் பரப்பில் தனித்த விமர்சன இயக்கமாக இறுதிவரை செயல்பட்ட வெங்கட் சாமிநாதன், தனது 82-வது வயதில் தனது செயல்பாட்டை முடித்துக்கொண்டுவிட்டார். மரணம் இன்னொரு இழப்பைத் தமிழுக்கு ஏற்படுத்தியிருக்கிறது.
தமிழ் நவீன இலக்கியத்தின் கொடுமுடியாக மதிக்கப்படும் புதுமைப்பித்தனிடம் தான், தமிழ் விமர்சனமும் தொடங்கியது. புதுமைப்பித்தனின் கலையையும் அவர் வைக்கும் விமர்சனங்களையும் ஒருவர் பிரித்துப் பார்க்க முடியாது. அந்த மரபில் புதுமைப்பித்தன், சி.சு.செல்லப்பா, க.நா.சு ஆகியோரின் தொடர்ச்சி வெங்கட் சாமிநாதன். இலக்கியம் மற்றும் இலக்கிய விமர்சனத்துக்காக சி.சு.செல்லப்பாவால் தொடங்கப்பட்ட ‘எழுத்து’ இதழில் கடிதங்கள் எழுதுவதன் மூலமாகத் தனது எழுத்து வாழ்வைத் தொடங்கியவர் வெங்கட் சாமிநாதன். 1960-ல் தமிழகத்தின் கலை, கலாச்சார, பண்பாட்டு, அரசியல் தளங்களில் நிலவிய வறட்சியையும் விமர்சித்து அவர் எழுதிய ‘பாலையும் வாழையும்’ கட்டுரை, தமிழகத்திலும் இலங்கையிலும் சிறுபத்திரிகை வாசகர் தளத்தில் மிகுந்த அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
ஒரு கவிதை மற்றும் காவியத்தைப் படைப்பாகப் பார்க்காத, விளக்கம் மட்டுமே கூறும் வெறும் உரை மரபை அவர் கண்டித்தார். சி.சு.செல்லப்பா, க.நா.சு போன்ற விமர்சகர்கள் இலக்கியத்தில் மட்டுமே கவனம் செலுத்தியபோது, நாடகம், ஓவியம், சிற்பம், திரைப்படம், இசை, நாட்டார் கலைகள், நடனம் மீதும் எழுத்தாளனுக்குப் பரிச்சயமும் ஈடுபாடும் அவசியம் என்பதை வலியுறுத்தினார். நாட்டார் கலைகள் மீது கவனமே குவியாத ஒரு காலகட்டத்தில் அவர் எழுதிய ‘பாவைக்கூத்து’ நூல் இன்றும் தமிழில் நாட்டாரியல் ஆய்வாளர்களுக்கு ஒரு முன்னோடி நூல். நாட்டார் கலை வடிவங்கள், ஒரு சமூகத்தின் கூட்டுவெளிப்பாடு என்று நம்பியவர்.கலை தொடர்பான சாதனைகள் எவ்வடிவத்தில் நடந்தாலும் அதை உடனடியாகத் தமிழுக்கு அறிமுகம் செய்தவர் வெங்கட் சாமிநாதன். நாடகக்காரர் இப்ராகி அல்காஷி முதல் கேரள ஓவியர் பத்மினி வரை பலரது படைப்புகளை ஆழமான வகையில் தமிழில் அறிமுகப்படுத்தியிருக்கிறார். தமிழில் ஜான் ஆபிரகாம் எடுத்த ‘அக்கிரகாரத்தில் கழுதை’ படத்தின் திரைக்கதை ஆசிரியர் இவர்தான்.
‘நடை’, ‘கசடதபற’, ‘யாத்ரா’, ‘வைகை’, ‘கொல்லிப்பாவை’ போன்ற சிற்றிதழ்களில் எழுதி புதிய தலைமுறை வாசகர்கள் மற்றும் எழுத்தாளர்களுக்கும் விமர்சகர்களுக்கும் அவர் எழுதிய கட்டுரைகள் பெரும் உந்துசக்தி!
சிறுவயதிலேயே வேலைக்காக வட மாநிலங்களுக்கு இடம் பெயர்ந்தது, வெங்கட் சாமிநாதனுக்கு அனைத்துக் கலை வடிவங்களையும் மொழி, இனம் ,தேச எல்லைகளைத் தாண்டி, மனம் திறந்து பார்ப்பதற்கான விரிவையும் ரசனையையும் தந்திருக்க வேண்டும். டெல்லியில் இருந்தபோது சினிமா, நாடகம், இலக்கியம் சார்ந்து நடைபெற்ற அனைத்துச் செயல்பாடுகளிலிருந்தும் உரம்பெற்ற அவர் கலை, பண்பாட்டு வறட்சிமிக்க தமிழகத்தின் சமூகப் பண்பாட்டுச் சூழலை நோக்கி எழுப்பிய ஆதங்கங்கள்தான் அவரது கட்டுரைகள். அவர் எழுதத் தொடங்கியபோது தமிழகத்தில் வலுப்பெற்றிருந்த இடதுசாரி முற்போக்கு இலக்கிய இயக்கமும், திராவிட இயக்கத்தினரின் கலை, பண்பாட்டுச் செயல்பாடுகளும் அவரது கடும் தாக்குதலுக்குள்ளாகின.
விமர்சனமே இல்லாமல் மரபிலக்கியங்களைப் போற்றுவதைத் தொடர்ந்து கண்டித்துவந்தார். உயர்ந்த கலைப் படைப்பையும் பொழுதுபோக்குப் படைப்பையும் தரம் பிரிப்பதற்கு விமர்சன உணர்வும் பாரம்பரியமும் அவசியம் எனவும், தமிழ்ப் பண்பாட்டில் இசைக்கும் நாட்டியத்துக்கும் மட்டுமே அந்தப் பாரம்பரியம் இருந்துள்ளது என்பதையும் சுட்டிக்காட்டியவர் அவர். அவரது மரணம் வரை தமிழின் வெகுஜனப் பண்பாடு, வெகுஜன அரசியல், வெகுஜனக் கலைப் பார்வைகளுக்கு எதிரான எதிர்ப்புக் குரலாகவே கடைசி வரை இருந்து மறைந்துள்ளார் வெங்கட் சாமிநாதன். அவரது தொடக்க காலத்தில் எந்தச் சூழலை எதிர்த்தாரோ அந்தச் சூழல் இன்றும் பெரிதாக மாறிவிடவில்லை.
ஒரு சமூகச் சூழல் நன்றாக இருக்கும்போதுதான் நல்ல திரைப்படமும் நல்ல இலக்கியமும்கூட வரும் என்பது அவரது பார்வை.
`இலக்கியம் கலையுள்ளத்தின் சிருஷ்டித் துறைகளுள் ஒன்று. தமிழ்ச் சமுதாயத்திலேயே காணப்படும் சிருஷ்டித் திறன் வறட்சியைத்தான் இலக்கியத்திலும் காண்கிறோம்!’ என்றவர் அவர். தமிழில் வேறு எந்தப் படைப்பிலக்கியத் துறையிலும் ஈடுபடாமல் முழுமையான விமர்சகராகவே தொடர்ந்தவரும் வெங்கட் சாமிநாதன்தான். ‘இலக்கிய ஊழல்கள்’, ‘எதிர்ப்புக்குரல்’, ‘கலை வாழ்க்கை அனுபவம் வெளிப்பாடு’, ‘என் பார்வையில்’, ‘அன்றைய வறட்சியிலிருந்து இன்றைய முயற்சி வரை’.. இப்படி அவரது நூல்களின் பெயரே இவரது ஈடுபாடுகளையும் ஏக்கத்தையும் விமர்சனத்தையும் சொல்லிவிடும்.
மிகச் சிறிய வாசகர் வட்டத்திலேயே அவர் புழங்கியிருந்தாலும் இன்று தமிழ் இலக்கியப் பரப்பில் உருவாகியிருக்கும் வளமும் பலவிதமான படைப்புப் போக்குகளும் வெங்கட் சாமிநாதன் போன்றோர் கண்ட கனவுகளின் நீட்சியே. இணையம் இல்லாத ஒரு காலகட்டத்தில் எப்போது ஒரு சிற்றிதழ் வரும் என்று அந்த இதழின் ஆசிரியருக்கே தெரியாத காலகட்டத்தில் தமிழ்ப் பெரும் சமூகத்தைப் பார்த்து, தொலைதூரத்தி லிருந்து தொடர்ந்து உரையாடல் நடத்திய ஒரு ஆளுமை வெங்கட் சாமிநாதன். 1988-ல் அவர் எழுதிய ‘சோழர் காலச் சிற்பங்களும் ஹென்ரி மூரும்’ என்ற கட்டுரை மிக முக்கியமான கேள்வியை எழுப்புகிறது. ஆகம விதிகளுக்கு உட்பட்டு வார்க்கப்பட்ட சிற்பங்களில் சில படைப்புகள் மட்டும் காலத்தைத் தாண்டிய அந்த முகமற்ற, பெயரற்ற சிற்பியின் தனித்துவமான கலைப்படைப்புகளாக எப்படி உருமாற்றம் பெறுகின்றன என்ற கேள்வியை வைத்திருப்பார் வெங்கட் சாமிநாதன். கலைக்கும் கலைஞனுக்கும் அவனைப் படைத்த சமூகத்துக்கும் இடையிலான உறவு குறித்து வெங்கட் சாமிநாதன் தன் வாழ்நாள் இறுதிவரை வைத்த கேள்வி இது!
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
15 hours ago
கருத்துப் பேழை
15 hours ago
கருத்துப் பேழை
15 hours ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
4 days ago
கருத்துப் பேழை
4 days ago