கருத்துச் சுதந்திரத்தைப் பறிக்கும் வகையில் மிக மோசமான ஒரு சட்டத் திருத்தத்தைக் கொண்டுவந்திருக்கிறது கேரள அரசு; தனிநபர் ஒருவரையோ அல்லது தனிநபர்கள் அடங்கிய ஒரு குழுவையோ எந்த வகையிலேனும் அச்சுறுத்தல், அவமதிப்பு, சங்கடத்துக்கு ஆளாக்குதல் அல்லது அவதூறு செய்வதாகக் கொள்ளத்தக்க வகையில் கருத்து தெரிவிக்கும் அல்லது அதைப் பரப்பும் எவரையும் கைதுசெய்வதற்கு, கட்டுப்பாடில்லாத அதிகாரங்களைக் காவல் துறைக்கு வழங்க இந்தச் சட்டத் திருத்தம் வழிவகுக்கிறது. தார்மீகரீதியாக மட்டும் அல்லாது, அரசமைப்புச் சட்டரீதியாகவும் மிக மோசமான முயற்சி இது. சகிப்பின்மை நோயானது இன்றைய ஆட்சியாளர்கள் இடையே வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்ட ஒரு பொது நோயாக உருவெடுத்துவருவதையே இத்தகு முயற்சிகள் வெளிப்படுத்துகின்றன.
விமர்சனங்களைச் சகிக்க முடியாமலும், எதிர்க் குரல்களை ஒடுக்கும் வகையிலுமே கேரள அரசு இந்தச் சட்டத் திருத்தைக் கொண்டுவந்திருக்கிறது என்று சரியாகவே சாடுகின்றன கேரள எதிர்க்கட்சிகள். ‘கேரளக் காவல் துறைச் சட்டத்தின் பிரிவு 118(அ)-ன் கீழ் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்தக் குற்றத்துக்கான வரையறைகள் சமூக வலைத்தளங்களில் அவதூறு பரப்புவதைத் தடுக்கும் நோக்கத்தை மட்டுமே கொண்டது’ என்றும், ‘செய்தியறிக்கைகள், அரசியல் நையாண்டிகள் அல்லது கருத்து வெளிப்பாடுகளை இந்தச் சட்டம் கட்டுப்படுத்தாது’ என்றும் கேரள முதல்வர் பினராயி விஜயன் விளக்கமளித்திருப்பது எந்த வகையிலும் ஏற்கத்தக்கதாக இல்லை. ஏனெனில், அரசமைப்புச் சட்டத்துக்கு எதிரானது என்று உச்ச நீதிமன்றால் அறிவிக்கப்பட்ட கூறுகளைக் கொண்டும் அவதூறுச் சட்டம் தொடர்பிலான உச்ச நீதிமன்றத்தின் முக்கியத் தீர்ப்புகளை அலட்சியப்படுத்தும் வகையிலான பல அம்சங்கள் கேரள அரசின் சட்டத் திருத்தத்தில் உள்ளன.
முன்னதாக, 2015-ல் ஷ்ரேயா சிங்கால் எதிர் இந்திய ஒன்றிய அரசு என்ற வழக்கில், உச்ச நீதிமன்றம் ஏற்கெனவே தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் பிரிவு 66 (அ) செல்லாது என்று அறிவித்ததை நினைவுகூரலாம். மேற்குறிப்பிட்ட சட்டத்தின் பிரிவு 66 (அ), அவமதிப்பான அல்லது அச்சுறுத்தும் வகையில் அமைந்த அல்லது கோபப்படுத்தும், சிரமத்துக்கு ஆளாக்கும், ஆபத்தை விளைவிக்கும், அவமதிப்பு உண்டாக்கும், காயப்படுத்தும், மிரட்டும் நோக்கத்துடனான எந்தவொரு தகவலையும் கணினி வழியாக அனுப்புவது குற்றம் என்று வரையறுத்தது. குற்றத்துக்கான இந்த வரையறை மிகவும் விரிவானதாக இருப்பதால் குற்றவாளிகள் மட்டுமின்றி, அப்பாவிகளும்கூட இந்தச் சட்டத்தின் கீழ் கொண்டுவரப்படுவார்கள் என்று கருதியதாலேயே உச்ச நீதிமன்றம், இந்தச் சட்டப் பிரிவைச் செல்லாது என்று அறிவித்தது. அதே தீர்ப்பில், அதே காரணத்துக்காகவே கேரளக் காவல் துறைச் சட்டத்தின் பிரிவு 118(ஈ) ரத்துசெய்யப்பட்டிருந்தது. அந்தச் சட்டப் பிரிவு, கோபமூட்டும் வகையில் தொலைபேசி வழியாக அநாகரிகமான முறையில் பேசுவதைக் குற்றம் என்று வரையறுத்திருந்தது.
தற்போது சட்டத் திருத்தத்தில் சேர்க்கப்பட்டுள்ள புதிய குற்றமானது தெளிவாக வரையறுக்கப்படவில்லை என்பதோடு, பிடியாணையின்றி கைதுசெய்யப்படக் கூடிய குற்றமாகவும் ஆக்கப்பட்டுள்ளது. இந்திய தண்டனைச் சட்டத்தின்படி, இந்தக் குற்றத்துக்காக யாரொருவரையும் பிடியாணையின்றி கைதுசெய்ய முடியாது. மேலும், குற்றவியல் அவதூறு என்று உறுதிப்படுத்துவதற்குள்ளாக, அந்தக் குற்றத்துக்காகக் காவல் துறை முதல் தகவல் அறிக்கையைப் பதிவுசெய்யக் கூடாது என்றும் நீதிமன்றம் ஏற்கெனவே தெளிவுபடுத்தியுள்ளது. தனிநபர் புகாராகவே அது விசாரிக்கப்பட வேண்டும். குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் பிரிவு 199-ன்படி, பாதிக்கப்பட்டவர் தரப்பிலிருந்து புகார் அளிக்கப்படாத நிலையில், நீதிமன்றம் பிடியாணை பிறப்பிக்கவும் கூடாது. மேலும், இந்திய தண்டனைச் சட்டத்தின் கீழ் இரண்டு ஆண்டுகள் மட்டுமே சிறைத் தண்டனை விதிக்கப்பட வேண்டும். கேரள அரசின் புதிய காவல் துறைச் சட்டத் திருத்தமோ, பிரிவு 118(அ)-ன் கீழ் மூன்றாண்டு சிறைத் தண்டனை விதிக்க வழிவகுக்கிறது. அவதூறு கருத்துகளைப் பிடியாணையின்றிக் கைதுசெய்யும் குற்றமாக வரையறுக்கவும், அதற்கான சிறைத் தண்டனையை உயர்த்தவும் வேண்டும் என்றால், கேரள அரசின் அவசரச் சட்டமானது இந்திய தண்டனைச் சட்டம், குற்றவியல் நடைமுறைச் சட்டம் ஆகியவற்றிலும் திருத்தங்களை மேற்கொண்டாக வேண்டும். ஒன்றிய அரசின் சட்டங்களில் திருத்தம் மேற்கொள்ள வேண்டும் என்றால், அதற்கு ஒன்றிய அரசின் ஒப்புதல் பெற வேண்டியது கட்டாயம். எனவே, இந்த அவசரச் சட்டத்துக்குக் குடியரசுத் தலைவரின் முன்கூட்டிய ஒப்புதலும் தேவை. ஆக, தன்னுடைய அதிகார வரம்புகளுக்கு அப்பாற்பட்டும் சென்று இவ்வளவு மோசமான ஒரு சட்டத் திருத்தத்தை மேற்கொள்ள அரசின் சகிப்பின்மையைத் தாண்டி வேறு என்ன காரணம் இருக்க முடியும்?
கேரள எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பு மட்டுமின்றி, நாடெங்கிலும் பரவலான விமர்சனங்களை இந்தச் சட்டத் திருத்தம் உருவாக்கியதால், ‘புதிய சட்டத் திருத்தம் நடைமுறைக்கு வராது’ என்று அறிவித்திருக்கிறார் முதல்வர் பினராயி விஜயன். ஆனால், இப்படிப்பட்ட முயற்சியே நாட்டைக் கவலையில் ஆழ்த்தக் கூடிய ஒன்று என்பதை அவர் உணர வேண்டும். முன்பு பாஜக அரசின் தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் பிரிவு 66(அ)-க்கு எதிராக நாடாளுமன்றத்தில் தீர்மானம் கொண்டுவந்த இந்திய மார்க்சிஸ்ட் கட்சி, அதே போன்ற ஒரு சட்டப் பிரிவை அது ஆளும் மாநிலத்தில் அவசரச் சட்டமாகக் கொண்டுவர முற்படும்போது அது பேசும் தார்மீகம் எங்கே சென்றது? சமூகவலைதளமானது எவ்வளவு மோசமான ஒரு அவதூறு மொழியைக் கொண்டிருந்தாலும், அடிப்படையில் இதுவரை பேசிட வாய்ப்பில்லாத சாதாரண மக்களின் குரலை வெளிப்படுத்தும் சாதனமாக அது திகழ்கிறது என்பதை நாம் மறந்துவிடலாகாது. புதிய காலகட்டம் ஒன்றின் விமர்சன மொழியை எப்படி எதிர்கொள்வது என்பது எல்லோருக்குமே சவாலாகத்தான் இருக்கிறது என்றாலும் சகிப்பின்மை வழி சிந்திப்பது அதற்கான தீர்வை நோக்கி இட்டுச்செல்லாது!
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
10 hours ago
கருத்துப் பேழை
10 hours ago
கருத்துப் பேழை
9 hours ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
4 days ago
கருத்துப் பேழை
4 days ago
கருத்துப் பேழை
4 days ago
கருத்துப் பேழை
5 days ago
கருத்துப் பேழை
5 days ago
கருத்துப் பேழை
5 days ago