பிரான்ஸின் நீஸ் நகரத்தில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலில் மூன்று பேர் கொல்லப்பட்டதும் பலர் காயமடைந்ததும் உலகையே கடும் அதிர்ச்சிக்கும் வேதனைக்கும் ஆளாக்கியிருக்கிறது. இரண்டு வாரங்களுக்கு முன்பு பாரிஸில் செச்சன்யாவைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் பள்ளி ஆசிரியரைக் கொன்ற அதிர்ச்சியிலிருந்து பிரான்ஸ் மீளாத நிலையில், இப்படி ஒரு கொடூர நிகழ்வு நடந்திருக்கிறது. நீஸ் நகரத்தின் தேவாலயத்தில் தாக்குதல் நடத்தியவர்களுள் ஒருவர் என்று சந்தேகிக்கப்படும் 21 வயது இளைஞர் துனீஸியாவைச் சேர்ந்தவர்; அவர் இப்போது காயங்களுடன் மருத்துவமனையில் இருக்கிறார்; தாக்குதல் நடத்திய பிறர் தப்பித்து ஓடினாலும் படுகாயங்கள் காரணமாக இறந்துவிட்டனர். இஸ்லாமிய அடிப்படைவாதம்தான் இதன் மூலசக்தி.
பிரான்ஸ்தான் ஐரோப்பாவிலேயே அதிக அளவுக்கு முஸ்லிம் சமூகத்தினரைக் கொண்ட நாடு; தாராளத்துக்குப் பேர்போன அந்நாடு சமீப காலமாக இப்படி மத அடிப்படைவாதத்துக்கு இலக்காகிவருவது பயங்கரவாதிகள் எந்த மதத்தின் பெயரால் தாக்குதலை நடத்துகிறார்களோ, அதே மதத்தினருக்குத்தான் பெரும் கேட்டை உருவாக்குவதாக மாறிக்கொண்டிருக்கிறது. ஆட்சேபத்துக்கு உரிய வகையிலான கேலிச்சித்திரங்களை மறுபடியும் பிரசுரிப்பது என்று ‘சார்லீ ஹெப்டோ’ பத்திரிகை எடுத்த முடிவின் பின்னணியில் உருவெடுத்திருக்கும் தாக்குதல் இது. என்றாலும் கடந்த 8 ஆண்டுகளாக 200 பேருக்கும் மேற்பட்டோரைப் பலிகொண்ட வன்முறைத் தாக்குதல்களின் தொடர்ச்சியாகத்தான் இந்நிகழ்வையும் பார்க்க வேண்டியிருக்கிறது. பிரான்ஸின் வலியும் கோபமும் புரிந்துகொள்ளக் கூடியவை; பயங்கரவாதிகளின் அச்சுறுத்தலுக்கு வளைந்துகொடுக்க மாட்டோம் என்று அந்நாட்டின் தலைவர்கள் திரும்பத் திரும்பச் சொல்லிவருகின்றனர். கூடவே கருத்துச் சுதந்திரத்துக்கும் பிரான்ஸ் அரசும் பொதுச் சமூகமும் உறுதிப்பட துணை நிற்பது உத்வேகம் அளிக்கிறது.
எந்த மதத்தின் பெயரால் வன்முறைகள் ஏவப்பட்டாலும், அதைக் கடுமையாக எதிர்க்க வேண்டிய, மத அடிப்படைவாதிகளைத் தனிமைப்படுத்தக் கூடிய செயல்பாட்டில் ஒட்டுமொத்த சமூகமும் இணைந்துகொள்ள வேண்டிய நாட்களில் இன்றைய உலகம் இருக்கிறது. மத அடிப்படைவாதிகள் இந்த உலகை நாகரிகங்களின் மோதல் களமாகக் காண்பவர்கள். மதத்தைப் பொறுத்தவரை குறுகலான பார்வை கொண்ட அவர்கள், தங்களின் பார்வையுடன் மாறுபடும் எவர் மீதும் வன்முறையைக் கட்டவிழ்த்துவிடத் தயங்காதவர்கள். எந்த மதத்திலும் இவர்களுடைய எண்ணிக்கை சொற்பமே என்றாலும், தாங்கள் சார்ந்த மதத்துக்கு மட்டும் அல்லாது, ஒட்டுமொத்த உலகத்துக்கும் பெரும் கேட்டை விளைவிப்பவர்களாகிவிடுகிறார்கள். ஆக, ஒட்டுமொத்த சமூகமாகவும் இதை எதிர்த்துப் போரிட வேண்டியிருக்கிறது.
பிரான்ஸில் தாக்குதலை மேற்கொண்டவர்கள் அல்கொய்தா, ஐஸ் போன்ற அமைப்புகளின் சித்தாந்தத்தால் உந்துதல் பெற்றவர்கள். பிரான்ஸில் பிளவுபட்டுக் கிடக்கும் சமூகங்களுக்கிடையே இந்தத் தாக்குதல்களெல்லாம் மேலும் பிளவை அதிகரிக்கும் என்பதைச் சொல்லத் தேவையில்லை; மேலும், தீவிர வலதுசாரிகள் இஸ்லாமிய வெறுப்பை மேலும் முடுக்கிவிடவும் இந்தத் தாக்குதல்கள் வழிவகுக்கும். நாம் கவனத்தில் கொள்ள வேண்டிய முக்கியமான அம்சம் என்னவென்றால், பயங்கரவாதத்துக்கு எதிரான போரில் சமூகங்கள் இடையே மத அடையாளங்கள் சார்ந்து வெறுப்பு ஏற்பட்டுவிடாமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என்பதாகும். இதுதான் பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மெக்ரோனின் முன்னுள்ள பெரும் சவால். ஜனநாயகம், மதச்சார்பின்மை, சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் என்று குடிமையிய மதிப்பீடுகளுக்குப் பேர் போன பிரான்ஸுக்கு அந்த வல்லமை நிறையவே இருக்கிறது. இந்தப் போரில் பிரான்ஸ் வெல்வது ஒட்டுமொத்த உலகுக்குமே மிகவும் முக்கியமானது.
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
20 hours ago
கருத்துப் பேழை
20 hours ago
கருத்துப் பேழை
20 hours ago
கருத்துப் பேழை
17 hours ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago