வானம் தந்த கொடையை வீணடித்துவிடக் கூடாது!

By செய்திப்பிரிவு

கரோனா பெருந்தொற்று நம்மை ஆட்டிப்படைத்துவரும் சூழலில், இந்த ஆண்டு நல்ல மழைப்பொழிவு கிடைத்திருப்பது விவசாயத்துக்கு நல்ல சமிக்ஞையாகும். அதைப் போலவே, கரோனாவால் பொருளாதாரம் வீழ்ச்சி அடைந்துகொண்டிருந்தாலும் மழைப்பொழிவு காரணமாக இந்த ஆண்டு நல்ல விளைச்சல் கண்டிருக்கிறது. எப்போதும் இயற்கைப் பேரிடர்களின்போது விவசாயமும் பாதிக்கப்படுவது வழக்கம். இம்முறை அப்படி இல்லை என்பது ஆறுதல் அளிக்கிறது.

மழைப்பொழிவைப் பல வகைகளாகப் பிரிப்பார்கள். வழக்கமான அளவில் 96%-104% வரை பெய்தால் அது வழக்கமான மழைப்பொழிவு; 90%-க்கும் குறைவாகப் பெய்தால் வழக்கத்துக்குக் குறைவான மழைப்பொழிவு; 104%- 110% வரை பெய்தால் அது வழக்கத்துக்கு அதிகமான மழைப்பொழிவு; 110%-க்கும் மேலே பெய்தால் அது மிக அதிகமான மழைப்பொழிவாகும். இதில் இந்திய அளவில் இந்த ஆண்டு வழக்கத்துக்கு அதிகமான மழைப்பொழிவு கிடைத்திருக்கிறது.

ஜூன் தொடங்கி செப்டம்பர் வரை நீடிக்கும் பருவமழையானது இந்தியாவில் ஒரு ஆண்டுக்குள் பெய்யும் மழையில் 70% மழைப்பொழிவைத் தருகிறது. இந்த ஆண்டு மிகச் சரியாக ஜூன் 1 தொடங்கிய மழையானது ஜூன் 26-க்குள் இந்தியா முழுவதையும் அடைந்தது; அதாவது, வழக்கமான ஜூலை 8-க்கு 12 நாட்கள் முன்பாக. அதேபோல், வழக்கமாகப் பருவமழை முடிவதற்கு 11 நாட்கள் கழித்து செப்டம்பர் 28 முடிவுக்கு வந்தது. 2019, 2020 என்று அடுத்தடுத்த ஆண்டுகளில் வழக்கத்துக்கு அதிகமான மழை பெய்துள்ளது. இந்திய வானிலை மையத்தின் தரவுகள்படி 1958, 1959 ஆகிய ஆண்டுகளுக்குப் பிறகு தற்போதுதான் அடுத்தடுத்து இரண்டு ஆண்டுகளில் அதிக மழைப்பொழிவு கிடைத்திருக்கிறது. ஒன்றியப் பிரதேசங்கள் உட்பட 19 மாநிலங்களில் வழக்கமான அளவு மழை பெய்திருக்கிறது; ஒன்றியப் பிரதேசம் உள்ளிட்ட ஒன்பது மாநிலங்களில் அதிகமான மழை பெய்திருக்கிறது. சிக்கிமில் மிக அதிகமான மழை பெய்திருக்கிறது.

கரோனாவால் பலத்த அடிவாங்கியிருக்கும் பொருளாதாரத்தைப் பொறுத்தவரை இந்த மழைப்பொழிவு வாராது வந்த மாமணியாகும். இந்திய மக்கள்தொகையில் பாதிக்கும் மேற்பட்டோர் நேரடியாகவும் மறைமுகமாகவும் ஈடுபட்டிருக்கும் தொழிலான விவசாயத்தில் இந்த மழையின் நல்விளைவுகள் பிரதிபலித்திருப்பது நற்செய்தியாகும். இந்த நேரத்தில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தை நல்ல முறையில் செயல்படுத்த வேண்டியது அவசியம். இந்தத் திட்டத்தின் கீழ் மக்களை விவசாயம் தொடர்பான வேலைகளிலும் ஏரி, வாய்க்கால், குளம் போன்றவற்றைச் சீரமைக்கும் பணிகளிலும் ஈடுபடுத்தலாம். இந்த ஆண்டின் மழைப்பொழிவின் காரணமாக இந்திய அளவிலும் சரி, தமிழ்நாடு அளவிலும் சரி பல ஏரிகள் நிரம்பியிருப்பதால் பாசனத்துக்கும் குடிநீருக்கும் இன்னும் ஓராண்டு பிரச்சினை இருக்காது என்று நம்பலாம். ஆனால், பெருமழை வெள்ளம் வந்த ஒருசில ஆண்டுகளிலேயே தண்ணீர்ப் பஞ்சத்தைக் கண்ட வரலாறு நமக்கிருப்பதால் அசட்டையாக இருந்துவிடக் கூடாது. வானம் தந்த கொடையை நிலத்தடியிலும் ஏரி, குளம் போன்றவற்றிலும் உரிய விதத்தில் தேக்கிவைப்பதே வறட்சியற்ற எதிர்காலத்தை நமக்கு உறுதிசெய்யும்!

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கருத்துப் பேழை

7 hours ago

கருத்துப் பேழை

7 hours ago

கருத்துப் பேழை

8 hours ago

கருத்துப் பேழை

10 hours ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

மேலும்