கூட்டுறவு வங்கிகளின் நிர்வாகச் சுயாட்சி தொடர வேண்டும்!

By செய்திப்பிரிவு

நகர்ப்புறக் கூட்டுறவு வங்கிகளையும், மாநிலங்களுக்கு இடையிலான கூட்டுறவு வங்கிகளையும் ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவருவதற்கு மத்திய அரசு எடுத்துவரும் முயற்சிகள் கூட்டுறவுக் கொள்கைகளுக்கு எதிரானதாக முடிந்துவிடக் கூடாது. ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டு வரம்பை மீறி, கட்டுமான நிறுவனம் ஒன்றுக்கு பஞ்சாப் மற்றும் மஹாராஷ்டிரா கூட்டுறவு வங்கிக் கடன் அளித்த முறைகேடு கடந்த ஆண்டில் தெரியவந்தது. அதன் தொடர்ச்சியாகக் கூட்டுறவு வங்கிகளை முறைப்படுத்த தலைப்பட்ட அரசு இப்போது இந்நடவடிக்கையை எடுத்திருக்கிறது.

நகர்ப்புற வங்கிகளுக்கு உரிமம் வழங்குவது, அதை ரத்துசெய்வது, ஆய்வுகள் நடத்துவது ஆகிய அதிகாரங்கள் தற்போதும் ரிசர்வ் வங்கியிடமே உள்ளன. அவற்றை நிர்வகிக்கும் அதிகாரம் மட்டுமே மாநில அரசின் அலுவலரான கூட்டுறவுச் சங்கப் பதிவாளரிடம் உள்ளது. இந்நிலையில், நகர்ப்புறக் கூட்டுறவு வங்கிகளை ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவர ஒன்றிய அரசு நினைக்கிறது. பொதுத் துறை வங்கிகளில் வாராக் கடன் அதிகரித்துவருவதையும் தனியார் வங்கிகள் திவால் நிலைக்குச் செல்வதையும் தடுக்க முடியாத ரிசர்வ் வங்கி, கூட்டுறவு வங்கிகளின் முறைகேடுகளைத் தடுத்துவிட முடியும் என்று நம்புவது வேடிக்கையானது.

சங்க உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்படும் நிர்வாகிகளால் கூட்டுறவு வங்கிகள் இயங்குகின்றன என்பதே அவற்றின் பலமும் பலவீனமும். ஜனநாயக முறையில் தேர்தல் நடத்தப்படுகின்றன என்பதால், கட்சி அரசியலும் தவிர்க்க முடியாததாகிறது. ஒருசில இடங்களின் முறைகேடுகளாலேயே ஒட்டுமொத்தமாக அனைத்துக் கூட்டுறவு வங்கிகளையும் ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டுக்கு உட்படுத்துவது உள்ளூர் சிறு குறு தொழில் துறையின் கடன் தேவைகளை நிறைவேற்றுவதற்கான வாய்ப்புகளை இல்லாமலாக்கிவிடக்கூடும். நகர்ப்புற, மாநிலங்களுக்கு இடையிலான கூட்டுறவு வங்கிகளின் வைப்புத்தொகை ரூ.4 லட்சத்து 84 ஆயிரம் கோடி. இவற்றில் ரூ.3 லட்சத்து 3 ஆயிரம் கோடி கடனாக வழங்கப்பட்டுள்ளது. நகைக்கடன், வீட்டுக்கடன் வழங்குவதில் கூட்டுறவு வங்கிகள் மிக முக்கியமான பங்காற்றுகின்றன என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

1,482 நகர்ப்புறக் கூட்டுறவு வங்கிகளையும், மாநிலங்களுக்கு இடையிலான 58 கூட்டுறவு வங்கிகளையும் ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டில் கொண்டுவருவதே உத்தேசித்துள்ள அவசரச் சட்டத்தின் நோக்கம் என்றாலும் கிராமப்புறக் கூட்டுறவு வங்கிகள் குறித்த எதிர்பாராத தன்மையையும் இது உருவாக்கியிருக்கிறது. கூட்டுறவு வங்கிகளின் குறைபாடுகளைக் களைவதற்கு அவற்றின் மீது கண்காணிப்பை அதிகப்படுத்த வேண்டுமே அல்லாது, ஒட்டுமொத்த அதிகாரத்தையும் ரிசர்வ் வங்கி கையிலெடுத்துக்கொள்வது கூட்டுறவு, மக்கள் வங்கி ஆகிய கோட்பாடுகளுக்கு எதிராகவே போய் முடியும்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கருத்துப் பேழை

8 hours ago

கருத்துப் பேழை

8 hours ago

கருத்துப் பேழை

7 hours ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

4 days ago

கருத்துப் பேழை

4 days ago

மேலும்