சென்னையில் கரோனாவால் பலியானவர்களின் எண்ணிக்கை குறித்து பொது சுகாதாரத் துறை இயக்குநர் அறிவித்ததைவிட உண்மை எண்ணிக்கை இரண்டு மடங்கு அதிகமாக இருப்பதாகத் தெரியவந்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது. பலியானோரின் எண்ணிக்கையைப் பாதியாகக் குறைத்துச் சொல்வதற்கான காரணம், பாதிப்புகளைக் கணக்கிடுவதில் ஒருங்கிணைப்பு சரியாக இல்லாததா; இல்லை மக்களின் பதற்றத்தைக் குறைப்பதற்காகவா என்ற சந்தேகமும் எழுகிறது. எது எப்படியிருப்பினும், இத்தகைய முழுமையற்ற அல்லது மறைக்கப்பட்ட பலி எண்ணிக்கை என்பது நோய்ப்பரவலின் தீவிரத்தைக் குறைத்துக் காட்டுவதாகவே பொருள் கொள்ளப்படும். ‘கரோனா மரணங்களை மறைத்துக் காட்டுவதால் அரசுக்கு எந்தப் பலனும் இல்லை; அப்படி ஏதும் நடக்கவில்லை’ என்று சொல்லியிருக்கிறார் தமிழக முதல்வர் பழனிசாமி. அப்படியென்றால், இதுகுறித்து தீவிர விசாரணைக்கு உத்தரவிடுவதும், மேலும் கூடுதல் கவனம் செலுத்துவதுமே சரியான வழிமுறையாக இருக்கும்.
ஜூன் 8 வரையில் சென்னையில் கரோனா பாதிப்பின் காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 224 என்று பொது சுகாதாரத் துறை இயக்குநர் அறிவித்திருந்தார். ஆனால், சென்னை மாநகராட்சியின் பதிவுகளின்படி பலியானோரின் எண்ணிக்கை 460 என்று தெரியவந்திருக்கிறது. பொது சுகாதாரத் துறை இயக்குநர் அலுவலகத்தைச் சேர்ந்த அதிகாரிகள், சென்னை மாநகராட்சியால் பராமரிக்கப்பட்டுவரும் மரணப் பதிவேட்டை ஆய்வுசெய்தபோது, மாநில அரசின் பதிவேட்டைவிட கூடுதலாக 236 மரணங்கள் பதிவாகியிருந்து கண்டறியப்பட்டுள்ளது. இந்த மரணங்களையும் கணக்கில்கொண்டால், தமிழ்நாட்டில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் அதற்குப் பலியானோரின் எண்ணிக்கை தற்போது அரசு சொல்லும் 0.7% என்ற கணக்கிலிருந்து 1.5%-ஆக உயரக்கூடும். உலகிலேயே குறைவான மரண விகிதம் தமிழ்நாட்டில்தான் என்று பிரகடனப்படுத்தும் ஒரு அரசானது, மரண எண்ணிக்கை குறைவதால் தனக்கு லாபம் இல்லை என்று எப்படிச் சொல்ல முடியும்?
சென்னையில் உள்ள ரயில்வே மருத்துவமனையில் கரோனா காரணமாக அனுமதிக்கப்பட்டவர்களில் குறைந்தபட்சம் 20 பேராவது இறந்திருக்கலாம் என்பதும், அந்த மரணங்கள் மாநில அரசின் அறிவிப்பில் அடங்கவில்லை என்பதும் கவனத்துக்கு வந்ததன் பிறகே, பொது சுகாதாரத் துறை இயக்குநர் அலுவலகத்தைச் சேர்ந்த அதிகாரிகளால் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளும் சில தனியார் மருத்துவமனைகளும் கரோனாவுக்குப் பலியானோரின் விவரங்களை அரசுக்கும் தொடர்புடைய உள்ளாட்சி அமைப்புகளுக்கும் மின்னஞ்சலில் ஒருசேரத் தெரிவிக்கின்றன. சில மருத்துவமனைகள் அவ்வாறு தெரிவிக்காததன் விளைவே இந்த எண்ணிக்கை மாறுபாட்டுக்குக் காரணம் என்றும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
எப்படியாயினும், ஒரு கொள்ளைநோய் காலகட்ட நிர்வாகத்தில் மிக முக்கியமானது வெளிப்படைத்தன்மை. குறிப்பாக நோய்ப் பரவல், மரண எண்ணிக்கைகளில் தெளிவு அவசியம். ஏனென்றால், கிருமிப் பரவலை ஊகிக்கவும் எதிர் நடவடிக்கைகளைத் திட்டமிடவும் மிக முக்கியமான காரணிகள் அவை. பரிசோதனைகள் எண்ணிக்கையை உயர்த்திடல், வீடுகள் வழி தகவல்களைப் பெறுதல், எல்லா முனைகளிலும் எண்ணிக்கைகளை ஒருங்கிணைத்துப் பார்ப்பதற்கான முறைமையை உண்டாக்குதல் என்ற வழிமுறை உறுதிப்படுத்தப்பட வேண்டும்.
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
20 hours ago
கருத்துப் பேழை
20 hours ago
கருத்துப் பேழை
19 hours ago
கருத்துப் பேழை
23 hours ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
13 days ago
கருத்துப் பேழை
15 days ago