நாட்டிலேயே முதல் முறையாக ஐந்து மற்றும் எட்டாம் வகுப்புகளுக்குப் பொதுத் தேர்வுகள் நடத்துவதற்கு தமிழக அரசு காட்டிவரும் தீவிரம் குழந்தைகள், பெற்றோர்கள், ஆசிரியர்கள், கல்வியாளர்கள் என்று எல்லா தரப்புகளிலும் அதிர்ச்சியை உருவாக்கியிருக்கிறது. நம்முடைய கல்வித் துறையின் நெடுநாள் சிக்கல்கள், தோல்விகள், சவால்களையும் ஒட்டுமொத்தமாகக் குழந்தைகள் மீதும் சுமத்தும் அவலமாகவே அரசின் இந்தச் செயல்பாட்டைப் பார்க்க வேண்டியிருக்கிறது.
நாடு முழுக்கவுமே தொடக்கக் கல்வியில் கற்றல் திறன் பலவீனமாக இருக்கிறது; கல்வியில் மேம்பட்ட மாநிலமான தமிழ்நாட்டிலும் இந்த மோசமான நிலை விரவியிருக்கிறது என்பதைக் கல்வித் துறையோடு தொடர்புடைய ஒவ்வொருவரும் ஏற்றுக்கொள்ளவே செய்கிறார்கள். ஆனால், அதற்குத் தீர்வு ஒருபோதும் பொதுத் தேர்வாக இருக்க முடியாது என்பதையும் அவர்கள் வலியுறுத்துகிறார்கள். கற்றல் திறன் மேம்பாட்டில் குழந்தைகள், ஆசிரியர்கள் தவிர அரசுக்கும் பெரும் பொறுப்பு இருக்கிறது.
கல்வி உரிமைச் சட்டமானது, 6 முதல் 14 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் அனைவருக்கும் கல்வி கற்கும் வாய்ப்பை உறுதிப்படுத்துகிறது. அடிப்படைக் கல்வி என்பது குழந்தைகளின் அடிப்படை உரிமை என்பதோடு, பெற்றோர்கள் மற்றும் அரசின் கடமையும்கூட என்று இந்திய அரசமைப்புச் சட்டம் வலியுறுத்துகிறது. எட்டாம் வகுப்பு வரையில் குழந்தைகள் தேர்வில் பெறுகின்ற மதிப்பெண்களின் அடிப்படையில் அவர்களை அதே வகுப்பில் நிறுத்திவைக்கக் கூடாது என்பது கல்வி உரிமைச் சட்டத்தின் முக்கியக் கூறுகளில் ஒன்று. ‘அடுத்த மூன்றாண்டுகளுக்குப் பொதுத் தேர்வு எழுதும் யாரும் அதே வகுப்பில் நிறுத்திவைக்கப்பட மாட்டார்கள்; அதே பள்ளியில்தான் தேர்வு எழுதுவார்கள்’ என்பன போன்ற உறுதிமொழிகள் எல்லாம் தமிழக அரசு இந்தப் பிரச்சினையை மிகவும் சுருக்கிப் பார்ப்பதாகவே தோன்றுகிறது. பொதுத் தேர்வுகளின் மதிப்பெண்கள் உண்டாக்கும் தாக்கமானது பள்ளிகள் வழியே மாணவர்களிடமும் குடும்பங்களிலும் பெரும் தாக்கத்தை உண்டாக்கவே செய்யும்; ஒரு பெரும் தொகுதி மாணவர்களை இடைநிற்றலை நோக்கித் தள்ளவே செய்யும்; அவ்வகையில் தமிழக அரசின் பொதுத் தேர்வு அறிவிப்பானது அரசமைப்பு வெளிப்படுத்தும் அடிப்படை நோக்கத்துக்கே விரோதமானது என்பதே உண்மை.
தமிழகத்தில் சமீபத்திய பாடத்திட்ட உருவாக்கத்திலும் பாடநூல்கள் வரைவிலும் கல்வியாளர்களின் பாராட்டுகளைப் பெற்ற இன்றைய தமிழக பள்ளிக் கல்வித் துறையும் அதன் அமைச்சரும் இவ்வளவு மோசமான ஒரு முடிவுக்காகப் பின்னாளில் வருந்த வேண்டியிருக்கும். உலகின் முன்னேறிய சமூகங்கள் சுமையில்லா, படைப்பாற்றல் மிக்க கற்றலை நோக்கித் தம் குழந்தைகளை நகர்த்திக்கொண்டிருக்கும் சூழலில், கற்றல் என்றாலே மிகுந்த சுமை என்று கருதிடும் மிகப் பெரிய மன அழுத்தத்தை நோக்கி நம் குழந்தைகளை இத்திட்டம் தள்ளிவிடும். தமிழக அரசு தன்னுடைய முடிவைத் திரும்பப் பெற வேண்டும். மாறாக, தொடக்கக் கல்வியை அதன் பலவீனச் சூழலிலிருந்து மீட்க கல்வியாளர்கள் காட்டும் பல்வகை நடவடிக்கைகளுக்குத் தயாராக வேண்டும்!
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
11 hours ago
கருத்துப் பேழை
11 hours ago
கருத்துப் பேழை
11 hours ago
கருத்துப் பேழை
8 hours ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago