வேகவேகமாகக் கொண்டுவரப்பட்டு, அமலாக்கப்பட்ட குடியுரிமைச் சட்டத் திருத்தம் கூடவே கடுமையான எதிர்ப்பையும், நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் போராட்டங்களையும் கூட்டிக்கொண்டு வந்திருக்கிறது. உலகில் எந்த ஒரு நாடும் வெளியிலிருந்து தன் நாடு நோக்கி வருபவர்களை வரைமுறைப்படுத்த குடியுரிமையை நிர்ணயிப்பதற்கு என்று ஒரு வழிமுறையை உருவாக்குவதைத் தவறு என்று சொல்லிட முடியாது. இந்தியா இதற்கான முயற்சியை 1950-களிலேயே தொடங்கிவிட்டது; கால மாற்றம், புவியரசியல் சூழலுக்கேற்ப அதன் போதாமைகள் இன்று போக்கப்பட வேண்டும் என்று இந்திய அரசு நினைத்தால், அதுவும் செய்யப்பட வேண்டியதுதான். ஆனால், இப்படிக் கொண்டுவரப்படும் வழிமுறையானது அரசமைப்பு உறுதிப்படுத்தும் சமத்துவ நெறியை ஒட்டியதாகவும், பிரச்சினைகளைக் களையும் பண்பைக் கொண்டிருப்பதாகவும் இருத்தல் அவசியம்.
இந்திய அரசு கொண்டுவந்திருக்கும் குடியுரிமைச் சட்டத் திருத்தம் பலரும் சுட்டிக்காட்டுவதுபோல பாகுபாட்டைத் தன்னகத்தே கொண்டிருப்பதோடு, ஏற்கெனவே உள்ள பிரச்சினைகளைத் தீர்ப்பதற்குப் பதிலாக மேலும் பிரச்சினைகளை உருவாக்கவல்ல ஆபத்தையும் கொண்டிருப்பதே போராட்டங்களுக்கு வித்திட்டிருப்பதாகப் பார்க்க வேண்டியிருக்கிறது. குடியுரிமைச் சட்டத் திருத்தத்தை பாஜக அரசு தனித்துப் பார்க்கச் சொல்கிறது. ஆனால், தேசியக் குடிமக்கள் பதிவேட்டுடனும் (என்ஆர்சி), தேசிய மக்கள்தொகைப் பதிவேட்டுடனும் (என்பிஆர்) சேர்த்து அதன் அபாயத்தை மனிதவுரிமைச் செயல்பாட்டாளர்கள் பேசுவது தவிர்க்க இயலாதது என்றே தோன்றுகிறது.
நிறையக் கேள்விகள் இந்த விவகாரம் தொடர்பாக எழுப்பப்படுகின்றன. “இந்தியாவுக்கு அண்டையில் அரை டஜன் நாடுகள் இருக்கின்றன. அவற்றில் மூன்று நாடுகள் மட்டும் ஏன் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும்? ஒரு காரணத்தின் அடிப்படையிலோ, அதற்கு மேம்பட்ட காரணங்களினாலோ பத்து சமூகங்கள் பாதிக்கப்படுகிறதெனில், அவற்றில் ஆறு சமூகங்கள் மட்டுமே பொறுக்கியெடுக்கப்படுவதற்கான காரணம் என்ன? எல்லாவற்றுக்கும் மேல் புத்தாயிரமாண்டுக்குப் பிந்தைய காலகட்டத்திலேயே அடையாள அட்டை, ஆவணங்கள் எனும் சான்றிதழ்கள் சாமானிய மக்கள் மத்தியில் பரவலாகத் தொடங்கிய ஒரு நாட்டில் அவரவர் பெற்றோர், மூதாதையர் இந்நாட்டின் குடிமக்கள் என்று நிரூபிப்பதற்கான சான்றுகள் கேட்கப்பட்டால் அவர்கள் எங்கே போவார்கள்?” என்றெல்லாம் எழுப்பப்படும் கேள்விகள் வெறும் அச்சத்தின் அடிப்படையிலானவை என்று ஒதுக்கிவிடக்கூடியவை அல்ல; அஸாமில் ஆவணங்களின் பெயரால் பல்லாயிரக்கணக்கான மக்கள் அலைக்கழிக்கப்பட்ட அனுபவமும் இன்றைய அச்சத்துக்கு ஒரு காரணம் என்பதை அரசு எண்ணிப்பார்க்க வேண்டும்.
இந்திய அரசமைப்பு உறுதிப்படுத்தும் அனைவருக்குமான சமவுரிமை மீதும், அரசமைப்பு குறிப்பிடும் மிக முக்கியமான விழுமியங்களில் ஒன்றான மதச்சார்பின்மை மீதும் மத அடிப்படையிலான அளவுகோலை உள்ளடக்கியிருக்கும் இந்தச் சட்டத் திருத்தம் மோதலை உண்டாக்குகிறது என்ற கருத்தே இதை எதிர்ப்போரால் இன்று பரவலாகக் கூறப்பட்டாலும், அதோடு மட்டுமே இதன் அபாயம் முடிந்துவிடவில்லை. உதாரணமாக, அமைப்புரீதியான கணக்குகளின்படியே உலகில் வீடற்றவர்கள் அதிகமுள்ள நாடுகளின் பட்டியலில் முதல் பத்து இடங்களில் உள்ள நாடுகளில் ஒன்று இந்தியா. நம்முடைய நகரங்களில் சாலையோரங்களிலும், பாலங்களின் அடியிலும் மட்டும் பல லட்சம் மக்கள் வாழ்கின்றனர். “இவர்கள் எல்லாம் வெளிநாட்டினர்; உள்நாட்டு இந்துக்களின் அடையாளத்தில் இங்கே திரிந்துகொண்டிருக்கிறார்கள்” என்று அவர்களுடைய குடியுரிமைக்குச் சவால் விடப்பட்டால், எந்த ஆவணத்தைக் கொண்டு, யாருடைய செலவில் தங்கள் குடியுரிமையை அவர்களால் நிரூபிக்க முடியும்? பேரிடர்களின்போது பறிகொடுத்த ஒரு ரேஷன் அட்டையைத் திரும்பப் பெற இந்நாட்டில் ஏழை மக்கள் நம்முடைய அரசு இயந்திரத்தால் எவ்வளவு அலைக்கழிப்புக்கு ஆளாக வேண்டியிருக்கும் என்ற யதார்த்தம் அறிந்த ஒருவரும் இப்படியான அச்சங்களுக்கு ஆட்படுவதைத் தவிர்க்க முடியாது. அரசு தரப்பிலான முன்னுக்குப் பின்னான பேச்சுகளும் குழப்பங்களுக்கு ஒரு காரணம்.
நாட்டின் எல்லையோர மாநிலங்களில், குறிப்பாக வடகிழக்கு மாநிலங்களில் ‘உள்ளாள் எதிர் வெளியாள்’ விவகாரம் ஒரு நெடுநாள் பிரச்சினையாக இருக்கிறது. பிராந்தியத்தின் பூர்வகுடி மக்களின் கவலைகள், அச்சங்கள் உண்மையானவை; அரசால் முகங்கொடுக்கப்பட வேண்டியவை. ஆனால், குறிப்பிட்ட பிராந்தியங்களின் பிரச்சினையைத் தீர்க்க வழி தேடுகிறேன் என்று புறப்பட்டு, ஒட்டுமொத்த நாட்டையும் பிரச்சினையில் தள்ளும் ஒரு சிக்கலை உருவாக்கியிருக்கிறது அரசு. குடியுரிமைப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கான வழிமுறையில் மதரீதியான அளவுகோல்களைக் கொண்டுவருதல் என்பது முன்யோசனையற்றதும் ஆபத்தானதும் ஆகும். இந்தியாவுக்கு வெளியிலிருந்து அத்துமீறி நாட்டுக்குள் நுழைபவர்களைத் தடுப்பதற்கான வழி என்று சொல்லி, நாட்டின் குடிமக்களையும், அவர்களுடைய இயல்பான குடியுரிமையையும் சேர்த்து ஒரே கூட்டுவண்டிக்குள் ஏற்றிட முடியாது.
அரசு வெளியிடும் அறிக்கைகளும் விளம்பரங்களும் இதைச் சொல்கின்றன. பிரதமரும் உள்துறை அமைச்சரும் நாடு முழுவதும் பரவிவரும் போராட்டங்களுக்குப் பதில் சொல்லும் வகையில், “யாரும் அச்சப்பட வேண்டாம்!” என்று விடுக்கும் செய்தி நல்லது. ஆனால், சட்டபூர்வமாக அது உறுதிப்படுத்தப்பட வேண்டும். விமர்சகர்கள், போராட்டக்காரர்களை எதிரிகளாக பாவிப்பதைக் காட்டிலும் அவர்கள் சுட்டிக்காட்டும் பிரச்சினைகளைக் களைய முற்படுவதே சரியானது. அதேசமயம், போராட்டங்கள் எந்த வகையிலும் வன்முறை நோக்கித் திரும்பிவிடாமலும், நாட்டின் அமைதியைக் குலைக்கக் காத்திருக்கும் சக்திகளுக்கு இடமளித்துவிடாமலும் பார்த்துக்கொள்ள வேண்டிய பொறுப்பு போராட்டக்காரர்களுக்கு உண்டு. வன்முறை, வாகனங்கள் எரிப்பு, துப்பாக்கிச்சூடு என்றெல்லாம் வரும் எந்தச் செய்தியும் நல்லதல்ல. “மக்களுடைய யோசனைகள் இது தொடர்பாகக் கேட்கப்படும்; மக்கள் தங்கள் எதிர்ப்பைத் தெரிவிக்க எல்லா உரிமைகளும் உண்டு” என்று குறிப்பிட்ட உள்துறை அமைச்சகம் முன்னதாக மக்களுடைய யோசனைகளைக் கேட்டுவிட்டு சட்டத்தைக் கொண்டுவந்திருந்தால் முறையாக இருந்திருக்கும். இப்போதும் ஒன்றும் மோசம் இல்லை. மக்களின் குரல் கேட்டு மாற்றங்களைக் கொண்டுவாருங்கள்.
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
5 hours ago
கருத்துப் பேழை
5 hours ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
4 days ago
கருத்துப் பேழை
4 days ago
கருத்துப் பேழை
4 days ago
கருத்துப் பேழை
5 days ago
கருத்துப் பேழை
5 days ago
கருத்துப் பேழை
5 days ago