கூண்டுக்கிளியைப் பறக்க விடுங்கள்!

அம்பலமாகியிருக்கிறது, மத்தியப் புலனாய்வு அமைப்பின் லட்சணம். அரசு அமைப்புகளுள் நீதித்துறையின் மீதும், மத்தியப் புலனாய்வு அமைப்பின் மீதும்தான் மக்கள் சிறிதளவேனும் நம்பிக்கை வைத்திருக்கிறார்கள். ஆனால், அந்த நம்பிக்கையையும் ரஞ்சித் சின்ஹா மீது சொல்லப்படும் குற்றச்சாட்டு குலைக்கிறது.

மத்தியப் புலனாய்வு அமைப்பின் தலைமை இயக்குநரான ரஞ்சித் சின்ஹா, இரண்டாம் தலைமுறை அலைக்கற்றை ஒதுக்கீடு வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள சிலரைத் தனது அலுவலகத்தில் தனியாக, அடிக்கடி சந்தித்துப் பேசியிருக்கிறார், வழக்கு விசாரணை விரைவாகவும் வலுவாகவும் நடைபெறாமல் தடுத்திருக்கிறார், இந்த விசாரணை சரியான திசையில் போகவில்லை என்று சுட்டிக்காட்டியதற்காகத் தனக்கு அடுத்த நிலையில் இருந்த இளநிலை அதிகாரியை விசாரணைக் குழுவிலிருந்தே விலக்கியிருக்கிறார் என்பதற்காக உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி எச்.கே. தத்து கடுமையாகக் கண்டனம் தெரிவித்திருக்கிறார்.

நாட்டின் தலைமைப் பீடமான விசாரணை அமைப்பொன்றின் தலைவராக இருந்துகொண்டு அந்தப் பதவிக்குரிய பொறுப்புடனும் நேர்மையுடனும் கண்ணியத்துடனும் சின்ஹா நடந்துகொள்ளவில்லை என்பதை வேதனையோடு சுட்டிக்காட்டிவிட்டு, மேற்கொண்டு தான் எதையும் எழுத்துபூர்வமாகத் தெரிவித்தால் தனிப்பட்ட முறையில் அது சின்ஹாவுக்கும் அந்த அமைப்புக்குமே நிரந்தரக் களங்கமாக இருக்கும் என்று சுட்டிக்காட்டியிருக்கிறார். இனி, இந்த விசாரணைப் பொறுப்பிலிருந்து நீங்கள் விலகிக்கொள்ளுங்கள் என்று உத்தர விட்டிருக்கிறார். இன்னும் சில நாட்களில் ஓய்வுபெறப்போகும் நிலையில் சின்ஹா இருக்கிறார் என்பது குறிப்பிடத் தக்கது.

அலைக்கற்றை ஒதுக்கீட்டு முறைகேடு வழக்கையும் நிலக்கரிச் சுரங்க ஒதுக்கீட்டில் நடந்த ஊழல் தொடர்பான வழக்கையும் உச்ச நீதிமன்றம் தன்னுடைய கண்காணிப்பில்தான் விசாரித்துக் கொண்டிருக்

கிறது. நிலக்கரிச் சுரங்க வழக்கு தொடர்பான தகவல்களைத் திரட்டி உச்ச நீதிமன்றத்திடம் காட்டுவதற்கு முன்னால் அப்போதைய சட்ட அமைச்சரிடம் காட்டி, அவர் திருத்தித்தந்தபடி நீதிமன்றத்தில் தாக்கல் செய்து வாங்கிக்கட்டிக்கொண்டதும் இதே சின்ஹாதான். மத்திய அரசினால் கூண்டில் அடைக்கப்பட்ட கிளியாக இருக்கிறது சி.பி.ஐ. என்று உச்ச நீதிமன்றம் இதற்கு முன்னால் வர்ணித்ததற்கும் சின்ஹா போன்ற

அதிகாரிகள்தான் காரணம். அலைக்கற்றை முறைகேடு அம்பலமாகிப் பல ஆண்டுகளாகிறது. ஆனால், அப்போதைய அரசும், அதை விசாரித்த சி.பி.ஐ.யும் இன்று வரை விசாரணையை சரியான பாதையில் கொண்டு

செல்லவில்லை என்ற குற்றச்சாட்டுக்கு ஆளாகியிருக்கிறது. இதில் தொடர்புள்ளவர்கள் தங்களுடைய அரசியல் அனுபவத்தையும், அதிகார மையத் தொடர்புகளையும், பாதாளம் வரை பாயக்கூடிய மிதமிஞ்சிய செல்வாக்கையும் பயன்படுத்திக்கொண்டு தப்பிவருகிறார்கள். இனியாவது நேர்மையான அதிகாரி தலைமையில் விரைந்து விசாரித்து, குற்றவாளிகள் தண்டிக்கப்படுவதை உறுதிசெய்ய வேண்டும்.

அரசியல் தொடர்பில்லாத வழக்குகளை சி.பி.ஐ. நேர்மையாகவும் விரைவாகவும் விசாரித்து முடிப்பதையும், இன்னமும் நாட்டு மக்களின் நம்பிக்கைக்குரிய அமைப்பாகவும் அது திகழ்வதையும் மறுக்க முடியாது. இதன் செயல்பாடு சுதந்திரமாகவும் நடுநிலையாகவும் இருப்பதற்குத் தலைமைத் தேர்தல் ஆணையம், தலைமை கணக்குத் தணிக்கையகம்போல மேலும் சுதந்திரம் பெற்ற தன்னாட்சி அமைப் பாக இருக்க வேண்டியது அவசியம். இல்லையெனில், ஆளும் கட்சி, செல்வாக்கு மிக்கவர்கள் போன்றோரின் கூண்டுக்கிளியாக இருந்தே மத்தியப் புலனாய்வு அமைப்பு சுதந்திரமாகப் பறப்பதை மறந்துபோய்விடும்!

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE