வரவேற்க வேண்டிய முயற்சி பரஸ்பர பரிவர்த்தனை!

By செய்திப்பிரிவு

ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற ‘ஜி-20’ நாடுகளின் உச்சி மாநாட்டில், இந்தியாவின் இடத்தைப் பிரகாசிக்கவைத்ததுடன், கவனிக்க வேண்டிய ஒரு அறைகூவலையும் விடுத்திருக்கிறார் பிரதமர் நரேந்திர மோடி. நாடுகள் இடையேயான தகவல் பரிவர்த்தனை களின் எல்லையை விரிவாக்க வேண்டும் என்று பேசியிருக்கிறார். கருப்புப் பணப் புழக்கத்தைக் கண்டறியவும் வெளிக்கொண்டுவரவும் புதிய வழிமுறைகளைக் கண்டுபிடிக்க வேண்டும் என்ற அறைகூவலின் ஒரு பகுதியான மோடியின் இந்தப் பேச்சு வரவேற்புக்கு உரியது.

அமெரிக்கா, ஆஸ்திரேலியா, இந்தியா, ஐரோப்பிய நாடுகள் உள்ளிட்டவை உறுப்பினர்களாக உள்ள ‘ஜி-20’ அமைப்பு வல்லமை மிக்கது. உலகின் மொத்த உற்பத்தி மதிப்பில் 85% இந்த நாடுகளிடம் இருக்கிறது. உலகின் பெரும்பாலான பன்னாட்டுத் தொழில் நிறுவனங்களும் இந்நாடுகளைச் சேர்ந்தவை. சர்வதேச அளவில் பொருளாதார ஒத்துழைப்பை மேற்கொள்ளவும், முடிவுகளை எடுக்கவும் 1999-ல் உருவாக்கப்பட்ட இந்த அமைப்பு, 2008 முதல் உச்சி மாநாடுகளைத் தொடர்ந்து நடத்திவருகிறது. இந்த மாநாடுகள் உலகப் பொருளாதாரத்தின் போக்கில் குறிப்பிடத் தக்க அதிர்வுகளை உருவாக்குகின்றன. கருப்புப் பண மீட்பு தொடர்பான நடவடிக்கைகள் சர்வதேசத்துடன் இணைந்து மேற்கொள்ள வேண்டியவை என்கிற நிலையிலேயே மோடி இந்த மாநாட்டைப் பயன்படுத்திக்கொண்டிருக்கிறார்.

பன்னாட்டுத் தொழில் நிறுவனங்கள் பல நாடுகளில் தொழில் நிறுவனங்களை நடத்துகின்றன. இப்படித் தொழில் நடத்தும்போது, உலகிலேயே எங்கு வரி குறைவோ அல்லது வரியே கிடையாதோ அங்கு தன்னுடைய தலைமையகத்தை அமைத்துக்கொண்டு, விதி களைத் தமக்கு ஏற்ப வளைத்துக்கொண்டு, வரி ஏய்ப்பில் ஈடுபடுவது பெரும்பாலான நிறுவனங்கள் கையாளும் உத்திகளில் ஒன்று. இதனால், உண்மையிலேயே அந்தத் தொழில் நடத்த அனுமதித்து, எல்லாக் கட்டமைப்புகளையும் உருவாக்கித் தரும் நாடுகள் ஏமாற்றப் படுகின்றன. இதைச் சட்டபூர்வமாகத் தடுக்கத்தான் சர்வதேச அளவிலான மாநாட்டில் இந்த விஷயத்தைக் கொண்டுவந்திருக்கிறார் மோடி (மாநாட்டில் பங்கேற்ற சில நாடுகளும் இப்படியான மறைமுக வரி ஏய்ப்புக்கு உத்வேகம் அளிப்பவை என்பது இங்கு கவனிக்க வேண்டியது).

பொதுவாக, இந்த மாதிரி நாடுகளிடம் நாம் சந்தேகத்துக்கு உரிய ஒருவருடைய வங்கிக் கணக்கு தொடர்பாக விவரம் கேட்டால், ரகசியம் காக்கப்பட வேண்டும் என்ற விதியைச் சுட்டிக்காட்டி, வங்கி நிறுவனங்கள் தகவல் தர மறுத்துவிடும். மேலும், வற்புறுத்தினால் நீங்கள் விவரம் கேட்கும் நபர், சட்டத்துக்குப் புறம்பாக ஏதாவது செய்திருக்கிறார் என்று உங்களிடம் ஆதாரம் இருந்தால் கொடுங்கள், தருவது பற்றிப் பரிசீலிக்கிறோம் என்பார்கள். அப்போதும் தகவல் கிடைப்பது நிச்சயமில்லை. மோடியின் அறைகூவல் இந்த மோசமான நடைமுறையை முடிவுக்குக் கொண்டுவரக் கூடியது.

கருப்புப் பணம் என்பது வெறும் பொருளாதாரச் சூறையாடல் மட்டும் அல்ல. போதைப்பொருள் கடத்தல், ஆயுதக் கடத்தல் போன்றவற்றில் ஈடுபடுவோருக்கும் பயங்கரவாதச் செயல்களில் ஈடுபடுவோருக்கும் ரத்தம் செல்வது கருப்புப் பணக் கணக்குகளிலிருந்துதான். எல்லா நாடுகளுக்குமே உறைக்க வேண்டிய விஷயம் இது. மோடியின் அழைப்பு ஒரு நல்ல தொடக்கமாக அமையட்டும்!

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE