ஒருங்கிணையும் முன் தேவைப்படும் யோசனை!

By செய்திப்பிரிவு

கடன் பத்திரங்களை வாங்குவதைக் குறைத்துக்கொள்வது என்று அமெரிக்க ஃபெடரல் ரிசர்வ் வங்கி அறிவித்திருப்பது, வளரும் நாடுகளின் சந்தைகளில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இதன்படி, இப்போதைக்கு சுமார் ரூ. 62,000 கோடி ரூபாய் மதிப்புக்குக் கடன் பத்திரங்களை வாங்குவதை ஃபெடரல் ரிசர்வ் வங்கி குறைக்கும்.

அமெரிக்காவின் இந்த முடிவு வளரும் நாடுகளின் சந்தைகளுக்குள்ள கவலையை முழுக்கப் புறக்கணிப்பதாக அமைந்திருக்கிறது. ஏற்கெனவே வெவ்வேறு காரணங்களால் கடும் நெருக்கடிக்கு ஆளாகியிருக்கும் வளரும் நாடுகளின் சந்தைகள், அமெரிக்க அரசின் முடிவினால் புதுப்புது பிரச்சினைகளைச் சந்திக்க நேர்ந்திருக்கிறது.

அர்ஜென்டினா தொடங்கி தென்னாப்பிரிக்கா வரை இது அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது. சில நாடுகளின் செலாவணி மதிப்பு வெகுவாகக் குறைந்துவிட்டது. அவற்றின் பங்குச் சந்தைகளும் கடன் சந்தைகளும்கூட பெரும் சரிவைச் சந்தித்துள்ளன. ‘இனி செலாவணி கிடைப்பது எளிதாக இருக்காது’ என்ற அனுமானத்தில் முதலீட்டாளர்கள், வளரும் நிறுவனங்களின் பங்குகளைச் சந்தையில் கிடைத்த விலைக்கு விற்றும், கையில் இருக்கும் ரொக்கத்தைக் கொண்டும், வளரும் நாடுகளில் எந்தவித ஆபத்திலும் சிக்காத பங்குகளாகப் பார்த்து முதலீடு செய்யத் தொடங்கியுள்ளனர்.

எதிர்பார்த்தபடியே, பல வளரும் நாடுகளின் ரிசர்வ் வங்கிகள் வட்டி வீதத்தைச் சிறிதளவு உயர்த்தித் தங்களுடைய செலாவணி மதிப்பை நிலைப்படுத்தும் நடவடிக்கைகளை எடுத்தன. ஆனால், அந்த நடவடிக்கைகள் எதிர்பார்த்த பலனை முழுதாகத் தரவில்லை. இந்த விஷயத்தில் நமக்கான ஆறுதல், இந்தச் சரிவிலிருந்து மீள்வதில் இந்தியா சிறப்பாகச் செயல்பட்டுவருவது.

வெளிவர்த்தகப் பற்றுவரவில் ஏற்றுமதிக்கும் இறக்குமதிக்கும் இடையிலான பற்றாக்குறையைச் சரிக்கட்ட எடுக்கும் குறுகிய கால நடவடிக்கைகள், நீண்ட கால நோக்கில் பொருளாதாரத்துக்குத் தீங்கு செய்வதாகவே அமைகின்றன.

கடன் பத்திரங்களை டாலர்கள் கொடுத்து வாங்கும் நடவடிக் கையை அமெரிக்க அரசு குறைத்துக்கொள்வதிலிருந்தும் அதனால் சந்தைகளில் ஏற்படும் மாற்றங்களிலிருந்தும் நாம் பாடம் கற்றுக்கொள்ள வேண்டும். “இப்படி அவசரத்தில் எடுக்கப்படும் நடவடிக்கைகளால் நாடுகளுக்கு இடையே ஒருங்கிணைந்த கொள்கைகளை வகுக்க முடியாமல் போகிறது” என்று ரிசர்வ் வங்கியின் கவர்னர் ரகுராம் ராஜன் சுட்டிக்காட்டியிருப்பது இங்கே கவனிக்கத் தக்கது.

எல்லா நாடுகளின் பணக் கொள்கைகளையும் வரவு-செலவு திட்டக் கொள்கைகளையும் ஒரே மாதிரியாக மாற்றவோ, ஒருங்கிணைக்கவோ முடியாது என்றாலும், சில கொள்கை முடிவுகளை எடுப்பதற்கு முன்னால் ஆலோசனை நடத்துவது முக்கியம்.

உலகளாவிய சந்தை ஒவ்வொரு நாட்டையும் இன்னொரு நாட்டுடன் பிணைக்கும் காலகட்டத்தில் இருக்கிறோம். அந்தப் பிணைப்பு வலுவாக்கப்படுவதன் அவசியத்தையும் அரசுகள் தொடர்ந்து பேசுகின்றன. ஆனால், ஒருங்கிணைந்த செயல்பாடுகளுக்கு முன் எவ்வளவு யோசிக்க வேண்டியிருக்கிறது என்பதையே அமெரிக்க முடிவு உணர்த்துகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கருத்துப் பேழை

3 hours ago

கருத்துப் பேழை

3 hours ago

கருத்துப் பேழை

1 hour ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

மேலும்