இலங்கைக்கு எதிராக முக்கியமான காய்களை நகர்த்த ஆரம்பித்திருக்கிறது அமெரிக்கா. போருக்குப் பின்னரும்கூடத் தமிழர்கள் விவகாரத்தில் இலங்கை அரசு காட்டிவரும் அலட்சியத்துக்கும் அக்கறையின்மைக்கும் முடிவுகட்டும் வகையில், வரைவுத் தீர்மானம் ஒன்றைச் சமர்ப்பித்திருக்கிறது அமெரிக்கா.
இம்மாத இறுதியில் நடக்கும் ஐ.நா. சபையின் மனித உரிமைக் கழக 25-வது அமர்வில், இலங்கை தொடர்பான ஐ.நா. சபையின் மனித உரிமை ஆணைய அறிக்கை விவாதத்தில் இது எதிரொலிக்கும்.
இந்தத் தீர்மானத்தில், ‘இலங்கையின் போர்க்குற்றங்கள் குறித்து சர்வதேச விசாரணை நடத்த வேண்டும்’ என்ற நிர்ப்பந்தம் குறிப்பிடப் படாதது தமிழர்களிடையே ஒரு குறையாகப் பார்க்கப்பட்டாலும், பல புதிய அம்சங்கள் இதில் சேர்க்கப்பட்டிருக்கின்றன. இலங்கையில் தமிழர்கள் மீதான அடக்குமுறையையும் மனித உரிமைகள் மீறலையும் தீர்மானம் விரிவாக விளக்குகிறது. நீதி வழங்கலையும் மறுசீரமைப்பையும் தீர்மானம் மையமிடுகிறது; இலங்கை அரசின் ‘கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக் குழு’வின் பரிந்துரைகளின் அடிப்படையில் தேசியச் செயல்பாட்டுத் திட்டத்தின் எல்லைகளை விரிவுபடுத்தத் தீர்மானம் இலங்கையைக் கோருகிறது.
நம்பகத்தன்மை கொண்ட சர்வதேச விசாரணைகுறித்த மனித உரிமை ஆணையரின் பரிந்துரைகளையும் முடிவுகளையும் இந்தத் தீர்மானம் வரவேற்றிருக்கிறது. போர்க்குற்றங்களில் இலங்கையின் பங்கை நிரூபிக்கும் நடவடிக்கைகளிலும் போருக்குப் பிந்தைய காலத்தின் சமாதான நடவடிக்கைகளிலும் ஏற்பட்டிருக்கும் முன்னேற்றத்தை அறிந்துகொள்ளவும், போரின்போது இரண்டு தரப்புகளாலும் செய்யப்பட்ட மனித உரிமை மீறல்கள்குறித்து விசாரிக்கவும் மனித உரிமை ஆணையரை இந்தத் தீர்மானம் கேட்டுக்கொள்கிறது.
கடந்த அமர்வில் பேச்சு மூலமாகத் தெரிவிக்கப்பட்ட விவரங்களைப் போலல்லாமல், இப்போது அதிகாரபூர்வமான ஆணைகள் பிறப்பிக்கப் பட்டிருக்கின்றன. முன்பு, மனித உரிமை ஆணையருக்கு ஒத்துழைப்பு நல்க இலங்கை ஊக்குவிக்கப்பட்டது. ஆனால், இப்போது அப்படிச் செய்வதற்கு இலங்கைக்கு ஆணை பிறப்பிக்கப்பட்டிருக்கிறது.
இப்படியான நெருக்கடிகளுக்கு மத்தியில், மியான்மரில் நடைபெற்ற பிரதமர் மன்மோகன் சிங் - இலங்கை அதிபர் ராஜபக்சே சந்திப்பு முக்கியத்துவம் பெறுகிறது. 2008 சார்க் உச்சி மாநாட்டுக்குப் பிறகு, இலங்கை செல்வதைப் பிரதமர் தவிர்த்துவந்தார். தற்போது இந்தச் சந்திப்பில் இலங்கையின் வடக்குப் பிராந்தியத்தில் தமிழர்கள் எதிர்கொண்டிருக்கும் பெரும் பிரச்சினைகள்குறித்து ராஜபக்சேவிடம் பேசியிருக்கிறார். தமிழர் பகுதியில் ராணுவம் ஆக்கிரமிப்பதைப் பற்றிக் கண்டித்திருக்கிறார் சிங். வடக்குப் பிரதேசத்தில் ராணுவத்தின் ஆதிக்கத்தைக் குறைக்கும்படியும் ராஜபக்சேவிடம் அவர் வலிபுறுத்தியிருக்கிறார்.
போருக்குப் பின், இலங்கை அரசு தானே முன்வந்து செய்திருக்க வேண்டிய காரியங்களைத்தான் இன்றைக்கு சர்வதேசம் பேசுகிறது. இனியும் தங்களை யாரும் எதுவும் செய்ய முடியாது என்ற மமதையுடன் இலங்கை அரசு செயல்பட முடியாது. அப்படித்தான் செயல்படுவோம்; இதையும் ஓட்டு அரசியலுக்குப் பயன்படுத்திக்கொள்வோம் என்று எண்ணினால், அது அந்த நாட்டை வீழ்ச்சியிலேயே தள்ளும். தமிழர்களின் உரிமைகளுக்கும் நலன்களுக்கும் இலங்கை அரசு உடனடியாகப் பதில் சொல்ல வேண்டிய நேரம் இது.
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
10 hours ago
கருத்துப் பேழை
10 hours ago
கருத்துப் பேழை
9 hours ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
4 days ago
கருத்துப் பேழை
4 days ago