ஆன்மிகத் தலைவருக்கு ஏன் ஆயுதப்படை?

By செய்திப்பிரிவு

எது ஆன்மிகம், எது மோசடி என்று தெரியாதவர்களைத் தொண்டர்களாகப் பெற்ற இன்னொரு சாமியார் அகப்பட்டிருக்கிறார். கபீர்தாசரின் மறு அவதாரம் என்று தன்னைக் கூறிக்கொண்ட சந்த் ராம்பால் கைதுசெய்யப்பட்டிருக்கிறார்.

ஹரியாணாவின் பர்வாலா நகரில் கடந்த 12 நாட்களாக நடந்த நாடகம் புதன்கிழமை இரவு 11 மணிக்கு முடிவுக்கு வந்தது. 12 ஏக்கர் பரப்பளவுள்ள சத்யலோகம் ஆசிரமத்தில் துப்பாக்கிகள், பெட்ரோல் குண்டுகள், அமில குண்டுகளுடன் திரண்டு நின்று 15,000 பக்தர்களைப் பிணையாக வைத்துக்கொண்டு போலீஸார் மீது தாக்குதல் நடத்திய அவருடய ‘சீடர்கள்’ சுமார் 460 பேரும் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

ஹரியாணா மாநிலத்தின் தனானா கிராமத்தைச் சேர்ந்த ராம்பால் சிங் ஜதின், மாநிலப் பாசனத் துறையில் இளநிலைப் பொறியாளராகத் தன் வாழ்க்கையைத் தொடங்கியவர். கடமை தவறியதற்காகப் பணிநீக்கம் செய்யப்பட்டவர். இந்து தெய்வங்களையும் சடங்குகளையும் கடுமையாக விமர்சித்து மக்களிடையே பிரபலமான அவர், கபீர்தாசரின் புது அவதாரம் என்று தன்னைப் பிரகடனப்படுத்திக்கொண்டார். தன்னை விசுவாசிக்கிறவர்களுக்கு மோட்சம் நிச்சயம் என்று பிரச்சாரம் செய்தார். நாட்டின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பல்லாயிரக் கணக்கான ‘சீடர்கள்’ அளிக்கும் காணிக்கையில் சொகுசான ஆசிரமத்தை அமைத்தார். ஆசிரமம் எந்த அளவுக்கு ஆடம்பரமானது என்பதை, அவருடைய மெய்க்காவல் படையில் கறுப்பு உடை அணிந்த 400 பேர் எப்போதும் துப்பாக்கிகளுடன் ஆசிரமத்தைக் காவல் காத்தனர் எனும் தகவலால் அறியலாம்.

ஒரு கொலை வழக்கு அவர் மீது பதிவாகியிருந்தது. அந்த வழக்கில் ஆஜராகுமாறு அவருக்கு 43 முறை நோட்டீஸ் அளித்தும் ஆஜராக மறுத்தபோது, பிணையில் எளிதில் வெளியே வர முடியாத பிரிவின் கீழ் அவருக்கு நோட்டீஸ் தரப்பட்டது. அப்போதும் வர மறுத்தபோது, பஞ்சாப் - ஹரியாணா உயர் நீதிமன்றமே தலையிட்டது. அதன் பின்னர் நீடிக்கப்பட்ட வாய்ப்புகளையும் நிராகரித்த அவர், ஜகத்குருவான தான் எந்த நீதிமன்றத்துக்கும் கட்டுப்பட்டவரல்ல என்று அறிவித்தார். இதையடுத்து, நீதிமன்றம் பிறப்பித்த பிடியாணையை நிறைவேற்ற ஆசிரமத்துக்குள் காவல் துறையினர் நுழைந்தபோதுதான் இவ்வளவு கலாட்டாக்களும் அரங்கேறியிருக்கின்றன. போலீஸார் தடியடி நடத்தியதில் 83 பேர் காயம் அடைந்திருக்கின்றனர். ஆசிரமத்து குண்டர்கள் தாக்கியதில் 105 போலீஸார் காயம் அடைந்திருக்கின்றனர். இரு தரப்பினருக்கும் இடையே நடந்த சண்டைக்கு இடையே 5 பெண்களும் 1 குழந்தையும் ஆசிரமத்தில் இறந்துவிட்டனர். உள்ளே மனிதக் கேடயமாகப் பிடித்து வைக்கப்பட்டிருந்த ஆயிரக் கணக்கானோரை மீட்டு அனுப்பிவருகின்றனர்.

சில நாட்களுக்கு முன் பாபா ராம்தேவுக்கு இஸட் பிரிவு பாதுகாப்பு அளித்து, மத்திய அரசு உத்தரவிட்டதுடன் பொருத்திப் பார்க்க வேண்டிய சம்பவம் இது. பண்டைக் காலத்தில் சாமியார்களுக்கான இலக்கணம் துறவறம்; நவீன காலத்தில், எல்லாச் சட்டங்களுக்கும் அப்பாற்பட்ட பிரம்மாண்ட சாம்ராஜ்ஜியமே இலக்கணம் ஆகிவருகிறது. சாமியார்களின் எல்லாக் கொட்டங்களையும் வேடிக்கை பார்ப்பதோடு மட்டும் அல்லாமல், பல வகைகளிலும் அவர்களுக்கு உடந்தையாகவும் இருக்கும் அரசு அமைப்புகள், பின்னாளில் இந்தக் குற்றங்களில் தங்களுக்கு எந்தத் தொடர்பும் இல்லாததுபோலக் காட்டிக்கொள்வது வெட்கக்கேடு!

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE