ருவாண்டாவைப் பாருங்கள்!

By செய்திப்பிரிவு

ருவாண்டா என்றால், என்ன ஞாபகம் வரும்? நவீன காலத்தில் ஆப்பிரிக்கக் கண்டத்திலேயே நடந்த மோசமான இனப்படுகொலைகளும் வறுமையும். இனி, அந்த வரலாற்று வடுக்களோடு ஒரு பசுமையான அடையாளத்தையும் நாம் சேர்த்துக்கொள்ளலாம். பாலினச் சமத்துவத்தில் உலகுக்கே முன்னோடியாகிவருகிறது; முக்கியமாக, அரசியல் களத்தில் பெண்கள் அசாத்தியமான இடத்தைப் பெற்றிருக்கிறார்கள் ருவாண்டாவில்.

நாடாளுமன்றங்களுக்கு இடையேயான ஒன்றியத்தின் சமீபத்திய ஆய்வறிக்கையின்படி, சர்வதேச அளவில் இன்றைக்கு அரசியல் பாலினச் சமத்துவத்தில் முதலிடம் ருவாண்டாவுக்குத்தான். மொத்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் 80 பேரில் 45 பேர் பெண்கள். அதாவது 56%.

ஒருகாலத்தில் ருவாண்டாவில் பொது இடங்களில் பெண்கள் பேசவே முடியாது, கூடாது. நான்கு பேருக்கு முன் ஒரு பெண் பேசினால், அது அடக்கமின்மையின் வெளிப்பாடு என்று கருதிய சமூகம் அது. குருதிப்புனலின் நடுவேதான் ருவாண்டா அரசியல் களத்தில் பெண்கள் காலடி எடுத்துவைத்தனர். தொடர்ச்சியான இனப்படுகொலைகள் ருவாண்டாவின் ஒவ்வொரு பெண்ணிடமும் அவருடைய தந்தையையோ கணவரையோ சகோதரரையோ பறித்திருந்தது. எங்கும் வறுமை. இந்தச் சூழலில் களம் இறங்கியவர்கள்தான், ‘பெண் பிரதிநிதிகள், பின்னிருந்து ஆண்களால் இயக்கப்படும் பொம்மைகள்’ என்ற பிம்பத்தை நொறுக்கியிருக்கிறார்கள்.

பெண்களுடைய பெரும்பான்மைப் பிரதிநிதித்துவம் இங்கு உருவாக்கிய முதல் மாற்றம், பெண்கள் மீதான வன்முறைகளுக்கு எதிரான கடுமை யான சட்டம். அதில் தொடங்கி கல்வியில், வேலைவாய்ப்பில், சொத்துரி மையில் எல்லாவற்றிலும் ஆண்களுக்கு இணையான சூழலைக் கொண்டு வந்திருக்கின்றனர். “ருவாண்டா 1978-லேயே பாலினச் சமத்துவத்துக்காக ஐ.நா. சபை தீர்மானத்தில் கையெழுத்திட்டது. ஆனால், அதைச் சாத்தியப்படுத்த, பெண்களாகிய நாங்கள் தான் வர வேண்டியிருந்தது” என்கிறார்கள் பெண் அமைச்சர்கள். ருவாண்டாவின் முக்கியத் துறைகளில் மூன்றில் ஒரு பங்கு இவர்களிடம் இருக்கிறது.

நாடு கொஞ்சம் கொஞ்சமாக வறுமையிலிருந்து விடுபடுகிறது. கடந்த ஐந்து ஆண்டுகளில் 10 லட்சம் பேர் வறுமையிலிருந்து மீண்டுள்ளனர். 2005-06- ல் நாட்டின் மக்கள்தொகையில் 56.7% வறியவர்கள்; 2009-10-ல் இது 44.9% ஆகக் குறைந்திருக்கிறது. இருபாலரிலும் எழுதப் படிக்கத் தெரிந்தவர்களின் எண்ணிக்கை 77% ஆக உயர்ந்திருக்கிறது. தொடக்கப் பள்ளிகளில் சேரும் குழந்தைகளின் எண்ணிக்கை 96 % ஆக உயர்ந்திருக்கிறது. சுகாதாரத்திலும் நல்ல ஏற்றம். ஆப்பிரிக்கக் கண்டத்தைப் பொறுத்த அளவில் அசாதாரண மாற்றங்கள் இவை. அதிபர் பால் ககாமி ஒரு காரணம் என்றால், பெண்களின் பிரதிநிதித்துவம் இன்னொரு காரணம்.

இந்தப் பாலினச் சமத்துவப் பட்டியலில் இந்தியாவின் இடம் என்ன தெரியுமா? 110. மகளிருக்கான இடஒதுக்கீட்டைப் பல்லாண்டுகளாகப் பேசும் நம்முடைய நாடாளுமன்றத்தில் பெண்களின் பங்களிப்பு வெறும் 11%.

பாலினச் சமத்துவம் என்பது வார்த்தை அல்ல; செயல்!

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE