மாயக் கயிறுகள் நடத்தும் ஆட்டம்

By செய்திப்பிரிவு

புதிய நிதிநிலை அறிக்கையை இறுதிசெய்வதில் ஏற்பட்ட சிக்கல் காரணமாக, ஒரு பகுதி அரசுத் துறை நிறுவனங்களை மூடியிருக்கிறது அமெரிக்கா. மொத்தம் உள்ள 20 லட்சம் மத்திய அரசு ஊழியர்களில் சுமார் எட்டு லட்சம் ஊழியர்கள் சம்பளம் இல்லா விடுப்பில் செல்ல அரசு உத்தரவிட்டுள்ளது. ராணுவம், சுகாதாரம் உள்ளிட்ட அதி முக்கியத் துறைகள் நீங்கலாக ஏனைய துறைகளின் செயல்பாடு முடங்கியிருக்கும். உலகெங்கும் பங்குச் சந்தைகளில் இதன் தாக்கம் எதிரொலிக்கும். இந்த முடக்கம் நீளும்போது, அமெரிக்கா பொருளாதார இழப்பை எதிர்கொள்ளும்.

ஆளும்கட்சிக்குச் சிக்கலான சூழல் ஏற்படும்போதெல்லாம் இப்படி ஒரு நடவடிக்கை எடுப்பது அமெரிக்க அரசுக்கு வழக்கம். 1977-லிருந்து இப்படி 17 முறை அரசுத் துறை நிறுவனங்களை வெள்ளை மாளிகை மூடியிருக்கிறது என்றாலும், 1995 இறுதியில் கிளின்டனின் ஆட்சியில் நடந்த வரலாற்றின் நீண்ட - 21 நாட்கள் முடக்கத்துக்குப் பின் இதுவே முதல் முறை.

ஆளும் ஜனநாயகக் கட்சிக்கும் குடியரசுக் கட்சிக்கும் இடையிலான அரசியல் சண்டையின் விளைவு இது.

தனியார் பிடியில் அமெரிக்க மருத்துவத் துறை சிக்கியிருக்கும் சூழலில், மருத்துவக் காப்பீடு இல்லாதவர்கள் அங்கு சமாளிப்பது கடினம். ஆனால், உலகை ஆளத் துடிக்கும் ‘வல்லர’சின் குடிமக்களில் பாதிக்கும் மேற்பட்டோர் இன்னமும் முழு மருத்துவக் காப்பீட்டு வசதி இல்லாத நிலையிலேயே இருக்கின்றனர். இத்தகைய சூழலில், அடுத்து வரும் தேர்தலில் ஜனநாயகக் கட்சியை முன்னகர்த்த ஒபாமா தேர்ந்தெடுத்த பகடைக்காய் மருத்துவக் காப்பீட்டுச் சீர்திருத்தத் திட்டம். நான்கு கோடி அமெரிக்கர்களை மருத்துவக் காப்பீட்டுக்குள் கொண்டுவர வழிவகுக்கும் திட்டம் இது.

பொருளாதார நெருக்கடிகளைச் சுட்டிக்காட்டி, ஏற்கெனவே அமெரிக்க அரசு செய்ய வேண்டிய செலவுகளில் சுமார் ரூ.4.81 லட்சம் கோடியை வெட்டும் திட்டத்தில் இருக்கும் எதிர்க்கட்சியான குடியரசுக் கட்சி, "இது அமெரிக்கர்கள் நலத் திட்டம் அல்ல; ஒபாமா நலத் திட்டம்" என்று திட்டத்தில் உள்ள சில குறைகளைக் கூறி முட்டுக்கட்டை போடுகிறது. நாடாளுமன்றத்தின் இரு சபைகளிலும் பெரும்பான்மை இல்லாத சூழலில், எதிர்க்கட்சியுடனான பேச்சுவார்த்தை தோற்றதால், நிதிநிலை அறிக்கையை இறுதிசெய்யாமல், அரசுத் துறைகளை முடக்கியிருக்கிறார் ஒபாமா. மக்களின் அனுதாபத்தைத் தான் பெற முடியும் என்று அவர் நம்புகிறார். ஒபாமா கணக்கே பலிக்கும் என்பது வெளிப்படை. எனினும், எப்படி இந்த அரசியலாட்டம் நடக்கிறது? பெருநிறுவனங்களின் லாபி.

இந்தியா எந்தக் கொள்கையை வாரிக்கொள்ளத் துடிக்கிறதோ, எல்லாத் துறைகளையும் யாரிடம் தாரைவார்க்கத் துடிக்கிறதோ அந்தத் தனியார்மயத்தின் கரங்களில்தான் உலகின் வல்லமை மிக்க தேசத்தை ஆட்டுவிக்கும் கயிறுகளின் முடிச்சுகள் இறுகியிருக்கின்றன!

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கருத்துப் பேழை

11 hours ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

4 days ago

மேலும்