சிக்கன நடவடிக்கைகளின் எல்லைகள் எவை?

By செய்திப்பிரிவு

நிதிநிலையை மேம்படுத்த எடுத்துவரும் நடவடிக்கைகளின் ஒரு பகுதியாகச் சில சிக்கன நடவடிக்கைகளை எடுத்திருக்கிறது மோடி அரசு.

‘மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் விமானத்தில் முதல் வகுப்பில் செல்லக் கூடாது, எகானமி வகுப்பு எனப்படும் பொது வகுப்பில்தான் செல்ல வேண்டும், தங்குமிடச் செலவுகளையும் குறைத்துக்கொள்ள வேண்டும், காலியாகவிருக்கும் பணியிடங்களுக்குப் புதியவர்கள் நியமனம் இப்போதைக்குக் கிடையாது, புதிய மோட்டார் வாகனங்களை வாங்கக் கூடாது, ஒவ்வொரு துறைக்கும் ஒதுக்கப்படும் நிதியில் செலவிடப்படாத தொகையைக் கடைசி 3 மாதங்களில் செலவழித்து கணக்கு காட்டக் கூடாது, அதிகபட்சம் 15%-தான் செலவழிக்கலாம், ஆலோசனைக் கூட்டங்களை ஐந்து நட்சத்திர ஹோட்டல்களில் நடத்தக் கூடாது, விழா, நிகழ்ச்சிகளைச் சிக்கனமாகவும் எளிமையாகவும் நடத்த வேண்டும், எங்கெல்லாம் சாத்தியமோ அங்கெல்லாம் காணொலிக்காட்சி (விடியோ-கான்பரன்ஸிங்) வாயிலாகவே சந்திப்புகளை நடத்த வேண்டும், திட்டமல்லாச் செலவுகளை உடனடியாக 10% குறைக்க வேண்டும்’ என்றெல்லாம் வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன.

அரசின் சிக்கன நடவடிக்கை சொல்லாமல் சொல்லும் செய்தி ஒன்று உண்டு. அரசின் நிதி நிலைமை தடுமாற்றத்தில் இருக்கிறது என்பதே அது. நிதிநிலை அறிக்கையில் 25.8%-ஆக இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட மறைமுக வரிகள் இனத்தில், 5.8% மட்டுமே வசூல் அதிகரித்திருக்கிறது. நேரடி வரிகள் இனத்தில் வசூலானதில் பாதி, வரி செலுத்துவோருக்கே திருப்பித் தரப்பட வேண்டியதாக இருந்திருக்கிறது. அரசின் வருவாய்க்கும் செலவுக்கும் இடையிலான பற்றாக்குறையாக எவ்வளவு இருக்கலாம் என்று முன்னர் முடிவுசெய்யப்பட்டதோ அதில், 83% செப்டம்பர் மாதத்திலேயே எட்டப்பட்டுவிட்டது. எனவே, எஞ்சிய மாதங்களில் அது 17%-க்குள் அடக்கப்பட வேண்டும். மொத்த உற்பத்தி மதிப்பில், 4.1% அளவில்தான் பற்றாக்குறை இருக்க வேண்டும் என்று நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. இந்தப் பின்னணியில்தான் அரசின் சிக்கன நடவடிக்கைகள், அறிவுறுத்தல்கள் வெளியிடப்பட்டிருக்கின்றன.

இந்தப் படமெல்லாம் கடந்த காலங்களில் மன்மோகன் சிங் அரசு ஓட்டியதுதான். அரசு சிக்கன நடவடிக்கை அறிவிப்பை வெளியிடும் போதெல்லாம் நாம் வரவேற்கவே செய்கிறோம். ஆனால், அது எப்போது அமலுக்கு வருகிறது, எப்போது காற்றில் பறக்க விடப்படுகிறது என்பதெல் லாம் ‘ராஜ ரகசிய’மாகவே இருக்கிறது. தவிர, சிக்கன நடவடிக்கையானது ஏதோ கஷ்ட காலங்களில் மட்டுமே அரசு முன்னெடுக்க வேண்டிய, அதன் வரையறைகள் வெறும் நிகழ்ச்சிகள், பயணச் செலவுகளுக்குள் மட்டுமே அடங்கிவிடுவதாக இருக்கத் தேவையில்லை.

தனக்கு வரக்கூடிய கடித உறைகளைக்கூட வீணடிக்காமல், தான் அனுப்ப வேண்டிய கடிதங்களுக்குப் பயன்படுத்தியவர் காந்தி. சிக்கனம் என்பது பிரச்சாரம் அல்ல; அன்றாட வாழ்வின் ஒவ்வொரு அம்சத்திலும் கடைப்பிடிக்க வேண்டிய சுய ஒழுங்குமுறைகளில் ஒன்று. எளிமையான, சூழலுக்கு உகந்த வாழ்வியலின் தவிர்க்க முடியாத ஒரு பகுதி என்பதுதான் அவர் உணர்த்திச் சென்ற செய்தி.

அரசு ஒரு பெருந்திட்டமாக, ஒட்டுமொத்த அரசின் செயல்திட்டங்களில் ஒன்றாக மாற்ற வேண்டிய ஒழுங்கு இது. இதற்கான வரைபடம் பெரியது. பிரதமரில் தொடங்கி ஊராட்சி உறுப்பினர் வரை, முதன்மைச் செயலாளரில் தொடங்கி கிராம உதவியாளர் வரை ஒருங்கிணைத்து மேற்கொள்ள வேண்டிய சீர்திருத்தம் இது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE