ஆசியாவிலேயே அதிகமான சிங்கங்கள் வசிக்கும் கிர் காடுகளில் சிங்கங்களின் எண்ணிக்கை 411 ஆக அதிகரித்திருக்கிறது. 2010 கணக்கெடுப்பு எண்ணிக்கையைக் காட்டிலும் 13% இது அதிகம். சிறுத்தைகள், இதர விலங்குகளின் எண்ணிக்கையும் உயர்ந்திருக்கிறது. குஜராத் அரசு மேற்கொண்ட ஒரு நல்ல முயற்சிக்குக் கிடைத்திருக்கும் பலன் இது. வனக் காவலர்களாக அங்கு வாழும் பழங்குடியினப் பெண்களைச் சோதனை அடிப்படையில் 2007-ல் நியமித்தது குஜராத் அரசு. முதல்கட்டமாக, 32 பெண்கள் பணியமர்த்தப்பட்டார்கள். வன விலங்குப் பராமரிப்புப் பணியில் உதவுவதோடு, வேட்டைக்காரர்களிடமிருந்து அவற்றைப் பாதுகாக்கும் பணியிலும் ஏற்கெனவே அங்குள்ள 333 வன ஊழியர்களுடன் இவர்களும் பங்கேற்றனர்.
கிர் வனத்தில் இவர்களுடைய பங்கேற்பு இரு முக்கிய மாற்றங்களை முதலில் உருவாக்கியது. முதலாவது, ஏற்கெனவே உள்ள ஊழியர்களில் புல்லுருவிகளாக இருந்தவர்கள் அடையாளங்காணப்பட்டு, அவர்களுடைய தவறான நடவடிக்கைகள் கட்டுப்படுத்தப்பட்டன. இரண்டாவது, வனத்தையொட்டி வாழும் மக்களின் இயல்பான தோழமை வனப் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்குக் கிடைத்தது.
இவர்கள் பணியில் சேர்ந்தது முதல் 600-க்கும் மேற்பட்ட முறை வன விலங்குகளை ஆபத்தான தருணங்களில் காப்பாற்றியுள்ளனர். 250 முறை சிறுத்தைகள் வேட்டையாடப்படாமல் தடுக்கப்பட்டுள்ளது. 2011-ல் வேட்டைக்காரர்கள் மணிஷா வகேலா என்ற பெண் காவலரைக் கொல்லப் பார்த்தனர். அவர் சமயோசிதமாகச் செயல்பட்டு அவர்களைப் பிடித்துக்கொடுத்திருக்கிறார். ஜுனாகட், அம்ரோலி, பவநகர் மாவட்டங்களைச் சேர்ந்த இந்தப் பழங்குடிப் பெண்களின் ஆர்வம், உழைப்பு, நேர்மை ஆகியவற்றால் கவரப்பட்ட முதல்வர் மோடி, மேலும் 100 பெண்களை வனக் காவலர்களாகச் சேர்க்குமாறு உத்தரவிட்டுள்ளார். அவர்களுக்கு வனத் தலைமைக் காப்பாளர் சந்தீப் குமார் பயிற்சிகளையும் வன விலங்குகளைப் புகைப்படம் எடுக்கும் கலையையும் கற்றுத்தர ஏற்பாடு செய்துள்ளார். ‘ஏனையோரைவிடவும் பழங்குடியினப் பெண்களைப் பணியமர்த்தும்போது, அவர்களிடமிருந்து வெளிப்படும் பணித்திறன் சொந்த ஈடுபாட்டுடன் கூடியதாகிவிடுகிறது. அவர்கள் தம் சொந்த வீட்டைப் போல காட்டைப் பாதுகாக்கிறார்கள். அத்துடன் வனத்தில் வசிப்பதும் அவர்கள் இனத்தைச் சார்ந்தவர்கள் என்பதால், அவர்களோடு ஒன்றி அவர்களால் பழக முடிகிறது. முக்கியமாக, சக பெண்களிடம் தயக்கமோ அச்சமோ இன்றி நெருங்கி புதியவர்களின் நடமாட்டம்குறித்து தகவல்களைப் பரிமாறிக்கொள்கின்றனர். வனம் நம் சொத்து என்பதை வலியுறுத்துகின்றனர்’ என்கிறார் சந்தீப் குமார்.
வனங்களின் பாதுகாப்பு யார் கைகளில் இருக்கிறது என்பதை கிர் உணர்த்துகிறது. மகாராஷ்டிரம் இப்போது இந்த வழியைப் பின்பற்ற முடி வெடுத்துள்ளது. ஏனைய மாநிலங்களும் பின்பற்றலாம் என்று தோன்றுகிறது!
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
17 hours ago
கருத்துப் பேழை
17 hours ago
கருத்துப் பேழை
17 hours ago
கருத்துப் பேழை
17 hours ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago