அழைக்கும் அன்பின் குரல்

கென்யா 60+, இராக் 40+, நைஜீரியா 50+, பாகிஸ்தான் 140+... கடந்த ஒரு வாரத்துக்குள் அடுத்தடுத்து நடந்திருக்கும் பெரிய பயங்கரவாதத் தாக்குதல்களில் மட்டும் ஏற்பட்டிருக்கும் உயிரிழப்புகள் இவை. பாகிஸ்தான் மட்டும் மூன்று அடுத்தடுத்த தாக்குதல்களை எதிர்கொண்டிருக்கிறது.

கென்யப் பேரங்காடித் தாக்குதலின்போது நடந்த கதைகளில் ஒன்று இது. படபடவென்று வெடிக்கும் துப்பாக்கிச் சத்தம், பாயும் தோட்டாக்களைப் பார்த்துப் பதற்றத்தோடு கீழே படுக்கிறாள் ஒரு பெண். அவள் கையில் ஒரு குழந்தை. அதன் வாயைப் பொத்தியிருக்கின்றன அவள் கைகள். குழந்தையின் கண்கள் எல்லாவற்றையும் பார்த்துக்கொண்டிருக்கின்றன. சில நிமிடங்கள். அருகில் படுத்தவர்களைப் பார்க்கிறாள். எல்லோர் உடலிலும் ரத்தம். யாரும் உயிரோடு இல்லை. அவள் படுத்திருக்கும் பகுதிக்கு வெளியே குரல்கள் கேட்கின்றன: "யாராவது உயிரோடு இருக்கிறார்களா, பார்..." அவசர அவசரமாக, அருகில் செத்துக் கிடக்கும் மனிதனின் உடலிலிருந்து வழியும் ரத்தத்தை எடுத்துத் தன் மீதும் குழந்தை மீதும் தடவிவிட்டு, செத்தவள் மாதிரிக் கிடக்கிறாள். குழந்தையின் கண்கள் எல்லாவற்றையும் பார்த்துக்கொண்டிருக்கின்றன. குழந்தையின் கண்கள் நிலைகுத்தி நிற்கின்றன. கென்யாவின் 60+ கதைகளில் ஒன்று இது.

கென்யாவில், இராக்கில், நைஜீரியாவில், பாகிஸ்தானில்... ஒவ்வொரு நாட்டிலும் ஒவ்வொரு நாளும் எத்தனை எத்தனை கதைகள்?

போர்கள், சண்டைகள், பயங்கரவாதத் தாக்குதல்கள் போன்றவற்றைப் பற்றிய செய்திகளைப் படிக்கும்போது அதனால் ஏற்படும் உயிரிழப்புகளும் பாதிப்புகளும், படிக்கும் நமக்கு வெறும் எண்ணிக்கை. அனுபவிப்பவர்களுக்கு?

கோரிக்கைகள், சித்தாந்தங்கள், லட்சியங்கள் எல்லாவற்றையும் தாண்டி, பாதிக்கப்பட்ட மனிதனின் மேல் உமிழப்படும் உண்மை ஒன்றே ஒன்றுதான்... வெறுப்பு.

உலகின் ஒட்டுமொத்த உற்பத்தி மதிப்பில் 3% தொகை ஆயுதங்களுக்காக மட்டும் செலவிடப்படுகிறது. உலகின் பெரும்பான்மை நாடுகள் ஏதோ ஒரு வகையில், சின்ன அளவிலேனும் உள்நாட்டுச் சண்டைகளை எதிர்கொள்கின்றன. ஆசியாவிலேயே நான்கில் ஒரு பங்கு நாடுகள் உள்நாட்டுப் போர்களை எதிர்கொள்கின்றன. "எங்கே அன்பு இருக்கிறதோ, அங்கேதான் வாழ்க்கை இருக்கிறது... வன்முறையால் எஞ்சுவது பகையும் வெறுப்பும்தான்... கண்ணுக்குக் கண்தான் பதில் என்றால், உலகமே குருடாகிவிடும்" என்று சொன்ன காந்தியைவிடவும் இன்றைக்கு நினைவுகூரப் பொருத்தமான வழிகாட்டி உண்டா?

சமூகப் பாவங்கள் ஏழு என்பார் காந்தி: "கொள்கையற்ற அரசியல், உழைத்துப் பெறாத செல்வம், அறமற்ற வணிகம், மனசாட்சியில்லாத மகிழ்ச்சி, ஒழுக்கத்தைத் தராத கல்வி, மனிதத்தன்மையற்ற அறிவியல், தியாகமற்ற வழிபாடு."

நவீன உலகின் பிரச்சினைகள் நிச்சயம் இவற்றில்தான் இருக்கின்றன.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE