எச்சரிக்கைப் புள்ளி ஆகட்டும் கன்னன்பெண்டாரி சம்பவம்!

இந்திய சுகாதாரத் துறை வரலாற்றில், துடைக்க முடியாத கரும் புள்ளியாக மாறியிருக்கிறது கன்னன்பெண்டாரி சம்பவம்.

சத்தீஸ்கர் தலைநகர் பிலாஸ்பூருக்கு அருகில் உள்ள சின்ன கிராமம் இது. இங்கு நடந்த அரசு கருத்தடை சிகிச்சை முகாமில், அறுவைச் சிகிச்சை செய்துகொண்ட 83 பெண்களில், 11 பேர் உயிரிழந்திருக்கின்றனர், 49 பேர் கடுமையான பாதிப்புக்கு ஆளாகி

யிருக்கின்றனர். முகாம் செய்திகள் ஒவ்வொன்றும் அதிர வைக்கின்றன. ஆர்.கே. குப்தா என்ற ஒரேயொரு மருத்துவர், இந்த அறுவைச் சிகிச்சைகள் அனைத்தையும் வெறும் 3.30 மணி நேரத்தில் செய்திருக்கிறார். அதாவது, ஒரு அறுவைச் சிகிச்சைக்கு 2 நிமிடங்கள் மட்டுமே எடுத்துக்கொண்டார் என்கிறார்கள். முகாம் நடைபெற்ற இடத்தில், போதிய அடிப்படைக் கட்டமைப்பு வசதிகள் ஏதும் இல்லை. சிகிச்சை செய்துகொண்ட பெண்களுக்கு ரத்தப் போக்கும் அடிவயிற்றில் கடும் வலியும் ஏற்பட்டிருக்கிறது. பின் ஒன்றன் பின் ஒன்றாக வரிசையாக மரணங்கள் நடந்திருக்கின்றன. இறந்தவர்களில் பெரும்பாலானவர்கள் 30 வயதுக்கு உட்பட்டவர்கள். ஓரிரு குழந்தைகளின் தாய்கள்.

“இப்படி ஒரு முகாம் நடத்த போதிய அளவுக்கு மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவ உதவியாளர்கள் என்று ஒரு குழுவே அனுப்பப்பட்டிருக்க வேண்டும். தவிர, சிகிச்சையின்போது கடைப் பிடிக்க வேண்டிய தூய்மை நடைமுறைகள் இருக்கின்றன. உதாரண மாக, ஒவ்வொரு சிகிச்சைக்குப் பிறகும் லேப்ராஸ்கோபி கருவி சுத்தப்படுத்தப்படுவது ஒரு நடைமுறை. இதற்கெல்லாம் நேரம் பிடிக்கும். ஆனால், 83 பேருக்கு அறுவைச் சிகிச்சை நடந்த வேகத்தைப் பார்த்தால், அந்த மருத்துவர் கையுறையைக்கூட மாற்றியிருப்பாரா என்று தெரியவில்லை” என்று கூறுகிறார்கள் மருத்துவத் துறையினர்.

நெஞ்சம் வெடிக்கிறது. இவ்வளவு அலட்சியமாக, இந்நாட்டு மக்களை ஒரு அரசாங்கம் அணுக முடியுமா என்று. இந்தச் சிகிச்சைக்கு வந்தவர்கள் அனைவரும் மிகவும் பிற்படுத்தப்பட்ட, தாழ்த் தப்பட்ட சமூகங்களைச் சேர்ந்தவர்கள் என்பதும் ஏழைகள் என்பதும் நாம் கவனிக்க வேண்டியவை. விளிம்பு நிலை மனித உயிர்கள் என்றால், நம் நாட்டின் மருத்துவர்களுக்கும் அலட்சியம்தான்; ஆட்சியாளர்களுக்கும் அலட்சியம்தான். ஏழைகளின் மரணங்கள் நம்முடைய ஆளும் வர்க்கத்துக்கு எவ்வளவு சகஜமாக இருக்கிறது என்பதற்கு உதாரணம், பாஜக சுகாதார அமைச்சர் அமர் அகர்வால். முதல்வர் ரமண் சிங்குடன் சென்று பாதிக்கப்பட்டவர்களைச் சந்தித்த அகர்வால், “இதற்காகவெல்லாம் பதவி விலக வேண்டிய அவசியம் இல்லை” என்று கூறியிருக்கிறார் அலட்சியமாக. தார்மிகப் பொறுப்பு என்கிற வார்த்தைக்கு இந்த நாட்டில் என்ன அர்த்தம் என்று தெரியவில்லை.

பிரதமர் மோடி, முதல்வர் ரமண் சிங்கைத் தொடர்புகொண்டு பேசியிருக்கிறார். தேவையான மருத்துவ உதவியை டெல்லியிலிருந்து அனுப்பிவைப்பதாகக் கூறியிருக்கிறார். போதாது. முறையான விசாரணை நடத்தப்பட்டு, இந்தச் சம்பவத்தில் தொடர்புடைய மாவட்ட மருத்துவ அதிகாரி முதல் சுகாதார அமைச்சர் வரை அனை வருமே கடுமையாகத் தண்டிக்கப்பட வேண்டும். மாநில அரசு இந்த விஷயத்தில் அலட்சியம் காட்டும் பட்சத்தில், மத்திய அரசு தலையிட வேண்டும். இனி, இப்படி ஒரு சம்பவம் நடக்காமலிருக்க கன்னன்பெண்டாரி ஓர் எச்சரிக்கையாக அமைய வேண்டும்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE