சென்னை, நீலாங்கரை காவல் நிலையத்தில் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட சிறுவன் தமீம் அன்சாரி காவல் நிலையத்தில், காவல் ஆய்வாளர் புஷ்பராஜால் சுடப்பட்ட சம்பவம் அதிர வைக்கிறது.
தமீம் அன்சாரி, ஆறாம் வகுப்போடு படிப்பைக் கைவிட்டவர்; சின்னச் சின்ன திருட்டுச் சம்பவங்களில் அவருக்குத் தொடர்பிருந்தது என்றும் காவல் துறையினரால் கூறப்படுகிறது. சமீபத்தில் அன்சாரியின் வீட்டருகே இருந்த கோயில் உண்டியல் பணம் திருடுபோனது தொடர்பாக விசாரிக்க அன்சாரியைப் பிடித்துச் சென்ற போலீஸார் திருட்டை ஒப்புக்கொள்ள அவரை நிர்ப்பந்தித்திருக்கின்றனர். அவர் ஒப்புக்கொள்ளாத சூழலில், ‘விசாரணை’யின் உச்சத்தில் நீலாங்கரை காவல் ஆய்வாளர் புஷ்பராஜ் அன்சாரியின் கழுத்தில் துப்பாக்கியை வைத்து மிரட்டும்போது கழுத்தில் சுடப்பட்டு, ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருக்கிறார் அன்சாரி.
தமிழகத்தில் காவல் நிலையத்துக்கு விசாரணை என்ற பெயரில் அழைத்துச் செல்லப்படுவோர் எந்த மாதிரியெல்லாம் கொடூரமாக விசாரிக்கப்படுகின்றனர் என்பதற்கு ஓர் உதாரணம் இது. காவல் நிலையத்தில் விசாரணைக் கைதிகள் ‘திடீர் தற்கொலை அல்லது திடீர் உடல் நலக்குறைவு’ காரணமாக எப்படிச் சாகிறார்கள் என்பதற்கான உள்விளக்கம் இந்தச் சம்பவத்தில் உண்டு.
காவல் துறை எப்படி இருக்க வேண்டும் என்று சில மாதங்களுக்கு முன்புதான் உயர் அதிகாரிகள் மாநாட்டில் வகுப்பு எடுத்தார் முதல்வர் ஜெயலலிதா. “கல்வியாளர் ஒருவர், ‘சாலமோன்போல் ஞானம் பெற்றவர் களாகவும், சாம்சன்போல் பலமுள்ளவர்களாகவும், யோபுபோல் பொறுமை உள்ளவர்களாகவும், மோசேபோல் தலைமைப் பண்பைப் பெற்றவர்களாகவும் நல்ல சமாரியன்போல் இரக்கம் உள்ளவர்களாகவும் போலீஸ் அதிகாரிகள் இருக்க வேண்டும்’ என்று கூறியதில் ஆச்சரியம் ஒன்றுமில்லை.
“ஒன்பது லட்சம் மக்களைக் கைதுசெய்யும்போது, இங்கும் அங்கும் போலீஸ் காவலில் ஒருவர் சாவதை எண்ணிக்கைப்படி புறந்தள்ளி விடலாம். ஆனால், அந்தத் தனிமனிதனின் உயிர் பிரிந்ததை, அவனால் நேசிக்கப்பட்ட மக்களால் ஒருபோதும் புறந்தள்ளிவிட முடியாது. வீடு களிலும் பணியிடங்களிலும், பொது இடங்களிலும் மக்களின் உயிரைக் காப்பாற்ற வேண்டியவர்கள் போலீஸார் என்ற எதிர்பார்ப்பு உள்ள நிலையில், காவல் நிலையங்களில் மக்கள் மரணமடைவது, நீதியைக் கேலி செய்வதாகும்” என்று அப்போது குறிப்பிட்டார் ஜெயலலிதா.
இங்கோ, “மனித உரிமைகளா, அப்படி என்றால் என்ன?” என்று கேள்வி கேட்கும் அளவுக்குச் செயல்பட்டிருக்கிறார் புஷ்பராஜ். அவர் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது? அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தியதாகவும், கவனக் குறைவாகச் செயல்பட்டதாகவும் இந்திய தண்டனைச் சட்டம் 338-வது பிரிவின் கீழ் வழக்குப் பதியப்பட்டுள்ளது; கோட்டாட்சியர் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது; பணிஇடைநீக்கம் செய்யப்பட்டிருக்கிறார்.
இவை எல்லாம் போதுமான நடவடிக்கைகளா? நடந்திருப்பது கிட்டத்தட்ட ஒரு கொலை முயற்சி; குறைந்தபட்சம் ஏன் கைது நடவடிக்கைகூட எடுக்கப்படவில்லை? மனித உரிமைகளைக் காவல் துறையினர் மதித்து நடக்க வேண்டும் என்று அரசு உண்மையாகவே நினைத்தால், அது முதல்வரின் வார்த்தைகளில் அல்ல; இத்தகைய சந்தர்ப்பங்களின்போது அவர் எடுக்கும் நடவடிக்கைகளில் இருக்கிறது!
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
12 hours ago
கருத்துப் பேழை
13 hours ago
கருத்துப் பேழை
13 hours ago
கருத்துப் பேழை
9 hours ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago