இனி வேறு பாதையில்…

ஆட்டோக்காரர்கள் மீது பொதுமக்கள் தரப்பிலிருந்து தொடர்ந்து புகார்கள் வந்ததையடுத்து, காவல்துறை சில அதிரடி நடவடிக்கைகளை எடுத்திருக்கிறது. மீட்டருக்கு மேல் கட்டணம் வசூலித்தால் ரூ. 2,500 அபராதம் விதிக்கப்படும் என்றும், அடுத்தடுத்து தவறு செய்தால், ஆட்டோ பறிமுதல் செய்யப்படும் என்றும் காவல்துறை எச்சரித்திருக்கிறது. சென்னை முழுவதும் இந்த நடவடிக்கைகளுக்காகக் குழுக்களை நியமிக்கவும் காவல்துறை முடிவு செய்திருக்கிறது.

ஆட்டோ மீட்டர்கள் மறுபடியும் கொண்டுவரப்பட வேண்டும், ஆட்டோ கட்டணங்கள் சீர்திருத்தப்பட வேண்டும் என்றெல்லாம் வெகு காலமாக மக்கள் குரல்கொடுத்துவந்தார்கள். இதைத் தொடர்ந்து, கடந்த ஆண்டு உச்ச நீதிமன்றத்தின் உத்தரவையடுத்து, ஆட்டோ கட்டணங்கள் மறுவரையறை செய்யப்பட்டு, ஆட்டோ ஓட்டுநர்கள் தங்கள் மீட்டர்களைத் திருத்திக்கொள்ள உத்தரவிடப்பட்டார்கள்.

ஆனால், இதெல்லாம் சில நாட்களுக்குத்தான். ஆட்டோக்காரர்கள் பழையபடி ஆரம்பித்துவிட்டார்கள். மீட்டர்படிதான் கட்டணம் என்றால் மேலே 20, 30 தருமாறும் கேட்கிறார்கள். ஏற்கெனவே, வெளிநாட்டவர்கள் தரப்பிலிருந்தும், வெளிமாநிலத்தவர்களின் தரப்பிலிருந்தும் சென்னை ஆட்டோக்காரர்களின் மேல் ஏகப்பட்ட புகார்கள். கட்டணச் சீர்திருத்தம், மீட்டர் சீர்திருத்தம் ஆகியவற்றுக்குப் பிறகு எழுந்த சிறிதளவு நம்பிக்கையும் இப்போது போய்விட்டிருக்கிறது. 10 கிலோ மீட்டருக்கு உரிய கட்டணமாக சென்னையில் ரூ. 123.4 என்பது நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. ஆனால், எந்த ஆட்டோக்காரரும் இந்த நிர்ணயத்தைப் பின்பற்றுவதில்லை. இதைவிட இரண்டு மடங்கு கட்டணம் வசூலிக்கிறார்கள்.

முக்கிய நகரங்களின் கட்டண விகிதத்தைப் பார்த்தால் சில விஷயங்கள் நமக்குப் புரியும். டெல்லி: 10 கி.மீ-க்கு ரூ. 89, மும்பை: 10 கி.மீ-க்கு ரூ. 98.9, சென்னை: 10 கி.மீ-க்கு ரூ. 123.4, விஜயவாடா: 10 கி.மீ-க்கு ரூ. 112.4, திருவனந்தபுரம்: 10 கி.மீ-க்கு ரூ. 112.4. ஆக, இந்தியாவில் ஆட்டோவுக்கென்று அதிக அளவு கட்டணத்தொகை நிர்ணயிக்கப்பட்ட நகரங்களில் சென்னையும் ஒன்று. சென்னையிலாவது கட்டண நிர்ணயம் என்ற ஒரு விஷயம் இருக்கிறது. தமிழகத்தின் பிற ஊர்களில் எந்த வரைமுறையும் இல்லாத சூழலே காணப்படுகிறது.

நாளுக்கு நாள் பெட்ரோல், டீசல் விலை ஏறிக்கொண்டே வரும் சூழல், ஆட்டோ உரிமையாளர்களுக்குத் தினசரி இவ்வளவு என்று கொடுக்க வேண்டிய நிலை போன்றவற்றை ஆட்டோக்காரர்கள் தங்கள் தரப்பு நியாயங்களாகச் சொல்கிறார்கள். அரசுடன் ஆட்டோக்காரர்களின் தரப்பு பேச்சுவார்த்தை நடத்தித்தான் இந்தக் கட்டண நிர்ணயம் செய்யப்பட்டது என்பதை அவர்கள் மறந்துவிடலாகாது. கட்டணம் போதவில்லையென்றால், ஆட்டோக்காரர்களின் தரப்பு பேச வேண்டியது அரசிடம்தானே தவிர, பொதுமக்களிடம் அல்ல. பெரும் பாலான ஆட்டோக்காரர்கள் அடாவடியாகக் கட்டணம் கேட்பது, மீட்டர் போடச் சொன்னால் மறுத்துவிடுவது என்ற நிலையே நீடிக்கிறது. சென்னையில் மட்டுமல்ல, தமிழகம் முழுவதும் இதே நிலைதான். பக்கத்தில் இருக்கும் கேரளத்தைவிட கன்னியாகுமரியில் இரு மடங்கு ஆட்டோ கட்டணம் வாங்கப்படுவதை என்னவென்று சொல்ல?

அடித்தட்டு மக்களும், நடுத்தர மக்களும் ஏதாவது அவசரம் என்றால் ஆட்டோவைத்தான் நாடியாக வேண்டும். பெரும்பாலான ஆட்டோக்காரர்களின் அராஜகப் போக்கால் அவதிப்படுவது மக்கள்தான். அரசு தற்போது எடுத்திருக்கும் நடவடிக்கைகள் வரவேற்கத் தக்கவை என்றாலும், இந்த நடவடிக்கைகளெல்லாம் அறிவிப்போடு நின்றுவிடக் கூடாது. மேலும், சென்னையில் மட்டுமல்லாமல் தமிழகம் முழுவதும் இந்த நடவடிக்கைகளை விரிவாக்குவது உடனடித் தேவை.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE