மறையும் நம்பிக்கைக் கீற்று!

இலங்கையில், ''மாகாண சபைகளுக்கு நில நிர்வாகம், காவல் துறை நிர்வாக அதிகாரம் கிடையாது' என்று அறிவித்திருக்கிறது அரசு. போருக்குப் பின் அங்கு நிரந்தரமான அமைதி ஏற்பட சர்வதேச சமூகம் குறிப்பாக இந்தியா - தொடர்ந்து வலியுறுத்திவந்த விஷயம் அதிகாரப் பகிர்வு. இலங்கைப் பிரச்சினையில் ஆரம்பம் முதலே, மாகாணங்கள் பிரிக்கப்பட வேண்டும் என்றும் அவற்றுக்கு அதிகாரங்கள் பிரித்தளிக்கப்பட வேண்டும் என்றும் இந்தியா தீர்வை முன்வைத்துவருகிறது. இந்தியாவின் ஆலோசனைப்படி, மாகாணங்கள் பிரிக்கப்பட்டன; ஆனால், அதிகாரங்கள் பிரித்தளிக்கப்படவில்லை. போருக்குப் பின், அதிகாரங்களைப் பகிர்ந்தளிக்க வகைசெய்யும் 13-வது சட்டத் திருத்தத்தை முடக்கும் முயற்சிகளும் தொடங்கின. இந்தியா இதற்கு எதிராகத் தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வந்தது. மாகாணத் தேர்தல் அறிவிக்கப்பட்டபோதுகூட, இந்தியா வந்திருந்த அமைச்சர் பசில் ராஜபக்ஷவிடமும், "மாகாணங்களுக்கு அதிகாரங்களைப் பகிரும் அரசியலமைப்பின் ஷரத்துகளை முழுமையாக அமல்படுத்துவதோடு, அவற்றுக்கு அப்பாலும் சென்று அர்த்தமுள்ள மேம்பாட்டை ஏற்படுத்த வேண்டும்" என்று வலியுறுத்தினார் வெளியுறவு அமைச்சர் சல்மான் குர்ஷித். தேர்தல் வெற்றிக்குப் பின்னர், "நில நிர்வாகம், காவல் நிர்வாகம் இரண்டும் மாகாண அரசிடம் ஒப்படைக்கப்பட வேண்டும்" என்பதையே பிரதானமாக வலியுறுத்திவந்தனர், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் அதன் முதல்வர் வேட்பாளரான சி.வி. விக்னேஸ்வரனும். இலங்கை அரசின் அறிவிப்போ அனைத்துத் தரப்பினரையும் ஏமாற்றியிருக்கிறது.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தம், "இலங்கையி லுள்ள தேசியப் பிரச்சினைக்கு நில அதிகாரம் ஓர் அடிப்படைக் காரணமாக அமைந்தது" என்று கூறியிருப்பது இந்த நேரத்தில் மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது.

அதிகாரமற்ற அரசின் ஆட்சிக்கு ஏற்கெனவே இலங்கையில், கிழக்கு மாகாணம் ஓர் உதாரணமாக இருக்கிறது. இதுவரை மாகாண அரசுகளால் அங்குள்ள மக்களின் வாழ்வில் எந்த மாற்றத்தையும் கொண்டுவர முடியவில்லை. இப்போது அதிபர் ராஜபக்ஷவின் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அங்கு ஆட்சியில் இருக்கிறது. இந்த ஆட்சியாலும் ஓராண்டில் மக்களின் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்பச் செயல்பட முடியவில்லை. எதிர்க்கட்சிகள் மட்டும் அல்ல; கூட்டணிக் கட்சியான - ஆட்சியில் இரு அமைச்சர்களைப் பெற்றிருக்கும் - இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த அன்வரே, "தற்போதைய ஆட்சி பொம்மை ஆட்சி" என்று கூறுகிறார். இப்படிப்பட்ட மாகாண அரசுகளைத்தான் இலங்கை அரசு விரும்புகிறது என்றால், அங்கு தேர்தல்கள் தேவை இல்லையே?

கால் நூற்றாண்டுக்குப் பின் வடக்கு மாகாணத்தில் தேர்தல் நடத்தியதையே அரசின் வெற்றியாகக் கொண்டாடுகிறார் அதிபர் ராஜபக்ஷ; உண்மையான வெற்றி மாகாணங்களின் சுதந்திரமான செயல்பாட்டில் இருக்கிறது என்பதை அவர் புரிந்துகொள்ள வேண்டும்!

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE