வரலாற்றோடு விளையாடாதீர்கள் மோடி!

சில வார்த்தைகளால் வரலாற்றை மாற்றி எழுதிவிட முடியுமா? பா.ஜ.க. பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடியின் போக்கைப் பார்க்கும்போது, முடியும் என்று அவர் நம்புவதாகத் தோன்றுகிறது.

உலகின் மிகப் பெரிய சிலையை சர்தார் வல்லபாய் படேலுக்கு நிர்மாணிக்கும் முயற்சியில் மோடி இறங்கியபோது, அவருடைய நோக்கம் படேலை குஜராத்தின் பிரதிநிதியாக்குவதாக இருக்கும் என்று தோன்றியது. இப்போது இன்னும் ஒருபடி மேலே போய் அவரை மறைமுகமாக இந்துத்துவப் பிரதிநிதியாக்க முற்படுகிறார் மோடி.

அகமதாபாதில் நடைபெற்ற படேல் அருங்காட்சியகத் தொடக்க விழாவில், பிரதமர் மன்மோகன் சிங்கை வைத்துக்கொண்டு, ‘‘இந்தியாவின் முதல் பிரதமராக படேல்தான் ஆகியிருக்க வேண்டும்; அப்படி படேல் பிரதமராகி இருந்தால், நாட்டின் தலைவிதியே மாறியிருக்கும்’’ என்று பேசியதன் மூலம் நேரு, படேல் இரு ஆளுமைகளின் வரலாற்றையும் திரிக்கிறார் மோடி.

இந்திய விடுதலைப் போராட்டத்திலோ, சுதந்திர இந்தியாவைக் கட்டமைத்ததிலோ வேறுபடுத்திப் பார்க்க முடியாத அர்பணிப்பு நேரு, படேல் இருவருடையதும். காந்தியைப் போலவே படேலும் ஒரு குஜராத்தி. நேருவைவிட 14 வயது மூத்தவர். படேலுக்குப் பின், சில ஆண்டுகளுக்குப் பிறகே காந்தியின் படையில் வந்து சேர்ந்தார் நேரு. ஆனால், நேருவைத்தான் காந்தி தன்னுடைய வாரிசாகப் பிரகடனப்படுத்தினார். நேருவுக்கும் படேலுக்கும் இடையே போட்டி இருந்தது; பல விஷயங்களில் கருத்து வேறுபாடுகள் இருந்தன. ஆனாலும், நேருவை ஏற்றுக்கொண்டார் படேல். 1950-ல் இறப்பதற்குச் சில மாதங்கள் முன் இந்தூரில் காந்தி ஜெயந்தி விழாவில் பங்கேற்ற படேல், ‘நேருவே நம் தலைவர். பாபுஜி தன் வாரிசாக நியமித்தவர் அவர். பாபுஜியின் மரண சாசனத்தை நிறைவேற்றுவது நம் கடமை. பாபுஜியின் அஹிம்சா படையில் நானும் ஒரு வீரன். நான் விசுவாசமற்றவன் அல்ல’ என்று பேசியதையும் நேருவுடனான கடைசி சந்திப்புகளின்போது ‘நீங்கள் என் மீது நம்பிக்கையை இழந்துவருகிறீர்களோ என்று வருந்துகிறேன்’ என்று பகிர்ந்துகொண்ட வேதனையையும் நாடு இன்னும் மறந்துவிடவில்லை. சிறுபான்மையினரைக் கையாளும் விஷயத்தில் நேருவுக்கும் படேலுக்கும் கருத்து வேறுபாடுகள் இருந்திருக்கலாம்; இந்து அமைப்புகளிடம் படேல் பரிவுகாட்டியிருக்கலாம். ஆனால், ஒருபோதும் அவர் மத அடிப்படைவாதி அல்ல; நேருவை எந்த அறநெறிகள் வழிநடத்தினவோ அதே காந்திய அறநெறிகள்தான் படேலையும் வழிநடத்தின. இருவரின் முதன்மை நோக்கும் காந்தியின் கனவு இந்தியாவைக் கட்டியெழுப்பவதுதான்.

விருப்பம் இருந்தால், தன்னை இன்றைய படேலாக மாற்றிக்கொள்ள மோடி முயலலாம் நாட்டுக்கு அது நல்லது. ஆனால், படேலை ஒருபோதும் அன்றைய மோடியாக்கிவிட முடியாது!

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE