கண்காணிப்பின் அரசியல்

By செய்திப்பிரிவு

அமெரிக்காவின் தகவல் சேகரிப்பு வேட்டையைப் பற்றி மேலும் ஒரு முக்கியமான விஷயம் இப்போது அம்பலமாகியிருக்கிறது:

‘கூகுள்’, ‘மைக்ரோசாஃப்ட்’, ‘யாஹூ’, ‘ஃபேஸ்புக்’, ‘லிங்க்டுஇன்’, ‘டம்ப்ளர்’ ஆகிய நிறுவனங்களிடம் அவர்களுடைய வாடிக்கை யாளர்கள்/ பயனர்கள் குறித்த விவரங்களை அமெரிக்க அரசிடம் அளிக்க வேண்டும் என்று அரசாங்கத் தரப்பிலிருந்து எத்தனை முறை ஆணை அனுப்பப்பட்டது என்கிற தகவல். இதை வெளியிட்டிருப்பது வேறு யாருமல்ல; சம்பந்தப்பட்ட நிறுவனங்களேதான்.

இதன்படி, 2012-லும் 2013-லும் சராசரியாக ஆறு மாத கால அளவில் ‘கூகுள்’, ‘மைக்ரோசாஃப்ட்’ ஆகிய நிறுவனங்களுக்கு அமெரிக்க அரசிடமிருந்து தகவல் வேண்டி 10,000 ஆணைகள் அனுப்பப்பட்டிருக்கின்றன. இதே காலகட்டத்தில் ‘யாஹூ’ 40,000-த்துக்கும் மேற்பட்ட ஆணைகளுக்குச் செவிசாய்க்க வேண்டி இருந்திருக்கிறது. இந்த எண்ணிக்கைகள் எல்லாம் ஆணைகளின் எண்ணிக்கைகள்தானே தவிர, எத்தனை பேருடைய தகவல்கள் இதன் மூலம் பெறப்பட்டிருக்கின்றன என்பது குறித்த எண்ணிக்கைகள் அல்ல.

உதாரணமாக, லட்சக் கணக்கானோர் தொடர்புடைய குறிப்பிட்ட ஒரு நிறுவனத்தின் வாடிக்கையாளர்கள்குறித்த விவரங்கள் தரப்பட வேண்டும் என்று கோரும் ஒரு ஆணையின் மூலம் பெறப்படும் தகவல்கள் எவ்வளவு இருக்கும் என்று நினைத்துப்பாருங்கள். இப்படியாக ஆயிரக் கணக்கான ஆணைகள் மூலம் எவ்வளவு பேருடைய தனிப்பட்ட தகவல்கள் திரட்டப்பட்டிருக்கும்?

சமீபத்தில் அமெரிக்க அரசுத் தரப்பு வழக்கறிஞர்களுக்கும், பெரும் தொழில்நுட்ப நிறுவனங்களுக்கும் இடையே ஏற்பட்ட ஒப்பந்தத்தின் விளைவுதான் இந்தத் தகவல் வெளியீடு. இந்த விவரங்களெல்லாம் முழுமையானவை அல்ல. “நாங்கள் எவ்வளவு கேட்டிருக்கிறோமோ அதில் மிகச் சிறு பங்கைப் பற்றிய எண்ணிக்கையை மட்டுமே நீங்கள் வெளியிட வேண்டும்” என்று அரசாங்கம் அனுமதித்த விவரங்கள் இவை. ஆக, வெளியே தெரிந்திருப்பது பனிமலையின் சிறு முகடுதான். கடலுக்குள்ளே பெரும் மலையே மூழ்கியிருக்கலாம்.

இப்போதும் இந்தத் தகவல்கள் எல்லாம் வெளியிடப்பட்டிருப்பது தனிநபர்களின் அந்தரங்கம் காக்கப்பட வேண்டும் என்கிற பொதுநலன் காரணமாக அல்ல. ஸ்னோடென் விவகாரத்துக்குப் பிறகு, இணைய பயனாளிகள் எல்லோரும் தங்கள் இணைய நடவடிக்கைகள் ஒவ்வொன்றும் கண்காணிக்கப்படுவதான அச்சத்தில் இருக்கிறார்கள். இதனால், இணையப் பயன்பாடு குறைந்துவிடக் கூடும் என்ற அச்சம் இந்த நிறுவனங்களிடையே காணப்படுகிறது. வாடிக்கையாளர்கள், விளம்பரதாரர்கள் ஆகியோரின் நம்பிக்கையைத் தக்கவைத்துக் கொள்ள வேண்டிய கட்டாயத்தில் இந்த நிறுவனங்கள் இருக்கின்றன.

இதன் விளைவுதான் அரசாங்கத்துடன் செய்துகொண்ட ஒப்பந்தமும் அதனைத் தொடர்ந்த நடவடிக்கைகளும். அரசு நினைத்தால் இந்த விவரங்களை வெளியிடாமல் தடுத்துவைத்திருக்க முடியும். ஆனால், தகவல் வேட்டைக்கு அரசு இந்த நிறுவனங்களைத்தானே சார்ந்து இருக்க வேண்டும்? ஆகையால், இரண்டு தரப்புகளுக்கு இடையிலான பரஸ்பர ஒத்துழைப்பின் ஒரு பகுதியாகத்தான் இவை எல்லாவற்றையும் கருத வேண்டும். இந்த இரண்டு தரப்பின் நலன்களிடையே சிக்கி நைந்துபோன மூன்றாவது தரப்பொன்று இருக்கிறது. ஆம், அதுதான் மக்கள் தரப்பு. ‘ரகசியம் அரசுக்கு மட்டுமே உரித்தானது; மக்களுக்கு அல்ல’ எனும் காலகட்டத்துக்கு அந்தத் தரப்பு இப்போது தள்ளப்பட்டிருக்கிறது!

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கருத்துப் பேழை

3 hours ago

கருத்துப் பேழை

3 hours ago

கருத்துப் பேழை

3 hours ago

கருத்துப் பேழை

4 hours ago

கருத்துப் பேழை

1 hour ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

மேலும்