பொலிவியா காட்டும் வழி

பொலிவியா நாட்டின் அதிபராக ஹுவான் ஈவோ மொராலிஸ் அய்மா தொடர்ந்து 3-வது முறையாகத் தேர்ந்தெடுக்கப் பட்டிருக்கிறார்.

முதல்முறை அவர் தேர்ந்தெடுக்கப்பட்டபோது அவருக்குக் கிடைத்த வாக்குகள் 54%; தற்போது கிடைத்திருக்கும் வாக்குகள் 60%. ஜனநாயக நாடுகளில் மூன்றாவது முறை இவ்வளவு அதிக வாக்குகளைப் பெற்று ஒருவர் அதிபராக ஆகியிருப்பது நிச்சயம் பெரிய சாதனையே.

இதெல்லாம் அதிகார பலத்தாலோ பணபலத்தாலோ சாதிக்கப்பட வில்லை என்பதுதான் முக்கியம். இயற்கை எரிவாயு, பெட்ரோலிய எண்ணெய் வயல்கள், கனிமங்கள் ஆகியவற்றை அரசுடமையாக்கி, அதில் கிடைக்கும் வருமானத்தை நாட்டு மக்களிடையே பகிர்ந்தளித்த தால் ஏழைகளிடத்தில் அவருக்குச் செல்வாக்கு அதிகமாக இருக்கிறது. முதியோர்களுக்கும் குழந்தைகளுக்குமான ரொக்க உதவிகளைக் கணிசமாக உயர்த்தியிருக்கிறார். கல்வி, சுகாதாரத்துக்கும் நிறைய செலவழிக்கிறார். 100% எழுத்தறிவு பெற்ற நாடு என்பது பொலிவியாவின் தனிச்சிறப்பு. கடந்த பத்தாண்டு கால ஆட்சியில் 5 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்களை வறுமைக்கோட்டுக்கும் மேலே உயர்த்தியிருக்கிறார். தென்அமெரிக்கக் கண்டத்தின் ஏழை நாடுகளில் ஒன்றான பொலிவியாவைப் பொறுத்தவரை இது பெரிய விஷயம்தான்.

1990-களில் இந்த நாட்டில் கடைப்பிடிக்கப்பட்ட பொருளாதாரக் கொள்கைகளால் செல்வம் ஒரு சிலரிடம் மட்டுமே சேர்ந்தது. லஞ்சமும் ஊழலும் தலைவிரித்தாடின. இப்போதும் இந்நாட்டில் ஊழல் குறையவில்லை என்றாலும், மக்கள் வாழ்வில் முன்னேற்றம் ஏற்பட்டிருக்கிறது. நாட்டின் பூர்வகுடியைச் சேர்ந்தவர் மொராலிஸ்; கால்பந்து வீரர். இதனால் உள்ளூர் மக்களின் நம்பிக்கையை எளிதில் பெற்றார். நாட்டின் சரக்கு வர்த்தகத்தைப் பெருக்கினார். கடந்த பத்தாண்டுகளில் நாட்டின் ஏற்றுமதி பல மடங்காகப் பெருகியது. அந்த வருவாயில் பெரும் பகுதி மக்களுக்கே கிடைத்ததுதான் சிறப்பு. நாட்டின் ஏற்றுமதியில் 82% கனிமங்கள், வேளாண்பொருள்கள் போன்றவையே. இந்த நிலையில், தொழிற்சாலைகளை அதிகம் திறக்கும் முயற்சியிலும் அவர் ஈடுபட்டிருக்கிறார்.

இவ்வளவு இருந்தும் அவர் மீது குற்றச்சாட்டுகள் இல்லாமல் இல்லை. கனிமத் தொழிலை ஊக்கப்படுத்திச் சுற்றுச்சூழல் சீர்கேட்டை அதிகப்படுத்திவிட்டார் என்று சூழலியலாளர்கள் குற்றம்சாட்டுகிறார்கள். அடுத்ததாக, நாட்டின் தொலைதூரப் பகுதிகளை பிற பகுதிகளுடன் இணைக்க 300 கிலோ மீட்டர் தேசிய நெடுஞ்சாலைத் திட்டத்தையும் அவர் தொடங்கியிருக்கிறார். இதனால் வனப் பகுதிகளில் அந்நியர் நுழையவும், அரிய வனவளங்களைத் திருடவும் வழி ஏற்பட்டுவிடும் என்று சூழலியலாளர்களும் எதிர்க்கட்சியினரும் குற்றம்சாட்டுகிறார்கள்.

உலக அளவில் இப்போது பெட்ரோலியப் பண்டங்களின் விலை சரிந்துவருகிறது. அத்துடன் அமெரிக்காவிலும் புதிய எண்ணெய் வயல்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. மொராலிஸின் சோஷலிச நடவடிக்கைகளுக்குப் பிறகும்கூட நாட்டு மக்களில் 25% பேர் அன்றாடம் 2 டாலர்களுக்கும் குறைவாக வருவாய் ஈட்டுகின்றனர். எனவே, அவருக்கு நிறைய சவால்கள் காத்திருக்கின்றன.

வளர்ச்சி என்பது முதன்மையாக மக்களின் வளர்ச்சியாகத்தான் இருக்க வேண்டும் என்பதற்கு பொலிவியா ஓர் உதாரணம். தொழில் துறையை ஊக்குவித்தாலும் அதன் பலன்கள் மக்களுக்குச் சென்றடைய வேண்டும் என்பதில் பொலிவியா காட்டும் ஈடுபாட்டிலிருந்து கற்றுக் கொள்ள இந்தியாவுக்கு எவ்வளவோ இருக்கிறது!

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE