பாரதி: வெடித்து அணைந்த விண்மீன்

By செய்திப்பிரிவு

சரியாக, 38 ஆண்டுகள், 9 மாதங்களே வாழ்ந்த பாரதி தன் மொழிக்கும் சமூகத்துக்கும் விட்டுச்சென்றது ஏராளம். தனது குறுகிய வாழ்நாளுக்குள் எவ்வளவு செய்திருக்கிறார் பாரதி. கவிதைகள் மட்டும்தான் அவரது சாதனை என்று இன்றைய தலைமுறையினர் பலர் நினைக்கக்கூடும். கிட்டத்தட்ட, கவிதைகளுக்கு நிகரான சாதனையை பாரதி உரைநடையிலும் செய்திருக்கிறார்.

அது மட்டுமல்லாமல், அவருடைய இதழியல் பணி மகத்தான வீச்சுடையதாகவும் இருந்திருக்கிறது. சுதேசமித்திரன், சக்கரவர்த்தினி, இந்தியா போன்றவை உள்ளிட்ட பல பத்திரிகைகளில் பாரதி பணியாற்றியிருக்கிறார். வேறு சில பத்திரிகைகளில் பங்களிப்பும் செய்திருக்கிறார். தான் ஆசிரியராகப் பணியாற்றிய ‘இந்தியா’ இதழில், தென்னிந்தியப் பத்திரிகைகளிலேயே முதன்முறையாகக் கருத்துச்சித்திரத்தை அறிமுகப்படுத்திய பெருமை பாரதிக்கு உண்டு. சமூகத்துடன் ஊடாடுவதற்கு இதழியலையும் பாரதி மிகவும் திறமையாகக் கையாண்டார். அரசாங்கத்தின் தடை, பொருளாதாரக் காரணங்கள் போன்றவற்றால் ஒவ்வொரு பத்திரிகையும் முடக்கப்பட்டாலும் உடனடியாக வேறொரு பத்திரிகையில் எப்படியும் கால்பதித்து விடுவார். அந்த அளவுக்கு அவரது இதழியல் தாகம் தணியாததாக இருந்திருக்கிறது. அதனால்தான், பத்திரிகை தொடங்குவது குறித்துத் தன் நண்பருக்கு எழுதிய கடிதத்தில் ‘சொத்தை விற்றேனும்’ பணம் கொண்டுவரச் சொல்லியிருக்கிறார்.

கவிதைகள், உரைநடை, இதழியல் எழுத்துக்கள் என்று பாரதியை எழுத்து சார்ந்த மனிதராக மட்டுமே பார்த்துவிட முடியாது. தான் வாழ்ந்த காலத்தில் மகத்தான புரட்சியாளராக பாரதி இருந்திருக்கிறார். இந்து மதத்தில் ஈடுபாடுடையவராக இருந்தாலும், சாதிப் பிரிவினைகளையும் தீண்டாமைக் கொடுமையையும் கடுமையாக எதிர்த்தார். இந்த எதிர்ப்புணர்வைத் தனது வாழ்க்கை முறையிலும் செயல்படுத்திக் காட்டினார். பிற சமூகத்தைச் சேர்ந்தவர்களுடன் பாகுபாடு பார்க்காமல் பழகுதல், அவர்கள் வீட்டில் உணவருந்துதல் போன்ற பழக்கங்களைத் தான் பின்பற்றியதோடு மட்டுமல்லாமல், பிறரையும் பின்பற்றுமாறு வலியுறுத்தியிருக்கிறார். இந்தச் செய்கைகளெல்லாம் அவருடைய சமூகத்தைச் சேர்ந்தவர்களிடம் மிகுந்த கோபத்தை ஏற்படுத்தியிருக்கின்றன. இதேபோல், மத வேற்றுமையும் பாராதவர் பாரதி. அவருக்கு இஸ்லாமிய, கிறித்தவ நண்பர்கள் உண்டு. 1920-ல் நபிகள் நாயகத்தின் பிறந்த நாளன்று பொட்டல் புதூரில் அங்குள்ள இஸ்லாமிய மக்களிடையே இஸ்லாம் மார்க்கத்தின் பெருமையைப் பற்றி பாரதி பேசியதோடல்லாமல், தான் எழுதிய ‘அல்லா… அல்லா… அல்லா!’ என்ற பாடலையும் பாடிக்காட்டியிருக்கிறார்.

எப்பாடுபட்டாவது இந்தியாவுக்குச் சுதந்திரம் வாங்கித்தர வேண்டும் என்று தவிப்புடன் போராடியவர்களில் பாரதிக்கு முதல் வரிசையில் இடம் உண்டு. இந்தத் தவிப்பின் பிரதிபலிப்புதான் மிதவாதம், தீவிரப்போக்கு ஆகிய இரு வழிகளில் தீவிரப்போக்கை பாரதி தேர்ந்தெடுத்தது. விடுதலைபெற்ற இந்தியாவை, தீண்டாமை போன்ற பிரச்சினைகள் ஒழிந்த இந்தியாவை வாழ்த்திப் பாடும் முதல் பாடகனாக, தான் இருக்க வேண்டும் என்பதுதான் அவருடைய பெருங்கனவு. நாடு விடுதலை பெறுவதற்கு 26 ஆண்டுகளுக்கு முன்பே மறைந்துவிட்டாலும்கூட, ஏதோ ஒரு முன்னெச்சரிக்கை உணர்வால் மேற்குறிப்பிட்ட லட்சிய பாரதத்தை வரவேற்று முன்கூட்டியே பாடல்களைப் பாடிவிட்டுப் போயிருக்கிறார்.

பாரதியை நம் நாடு உரிய வகையில் கெளரவித்திருக்கிறதா என்று பார்த்தால், இல்லை என்பதுதான் உண்மை. தேசப்பற்றையும் சுதேசி உணர்வையும் வடிவமைத்ததில் தேசத்தின் எந்தத் தலைவருக்கும் நிகராகப் பங்குவகித்த பாரதி, இறுதியில் தமிழகத்துக்கு மட்டுமே உரியவராகப் பார்க்கப்பட்டவரானார். தமிழகத்தால் மட்டுமே தற்போது கொண்டாடப்படுகிறார். தாகூரின் புகழை இந்திய அளவில் பரப்பவும் நிலைநாட்டவும் இந்திய அரசும் மேற்கு வங்க அரசும் எவ்வளவோ திட்டங்களைச் செயல்படுத்திவருகின்றன. இதற்கெல்லாம் தாகூர் தகுதி வாய்ந்தவர் என்பதில் எந்தவிதச் சந்தேகமும் இல்லை. ஆனால், தாகூருக்கு இணையாகக் கருதப்பட வேண்டிய பாரதி போன்றவர்களும் கெளரவப்படுத்தப்பட வேண்டியது அவசியம்.

சமீபத்தில் பாரதியின் படம் பொறித்த நாணயம் வெளியிடப்பட வேண்டும் என்று எழுந்த சிறிய கோரிக்கையை, ‘பொருத்தமான காலம் இதுவல்ல’ என்று கூறி மத்திய அரசு நிராகரித்துவிட்டது. ஒரு நாணயத்துக்கே பாரதிக்கு இந்தப் பாடு! இந்தப் போக்கு இந்திய அரசுக்கு அழகல்ல. தேசத் தலைவர்கள், தேச உணர்வைத் தட்டி எழுப்பிய ஆளுமைகள் போன்றோர் விஷயங்களில் ஒரு சிலருக்கு மட்டுமே தொடர்ந்து கவனம் கொடுக்கப்பட்டு மற்றவர்கள் நிராகரிக்கப்படுவது முறையல்ல.

‘மந்திரம்போல் வேண்டுமடா சொல்லின்பம்’ என்றார் பாரதி. அப்படி உயிர்த்துடிப்பு கொண்ட ஒரு சொல்லாகத் தான் வாழ்ந்து மறைந்திருக்கிறார் அவர். அந்தச் சொல்லின் பெயர் ‘உத்வேகம்’, 100 ஆண்டுகள் கடந்தும் ஒளிவீசிக்கொண்டிருக்கும் உத்வேகம் அது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கருத்துப் பேழை

4 hours ago

கருத்துப் பேழை

5 hours ago

கருத்துப் பேழை

5 hours ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

4 days ago

மேலும்