பாஜகவின் அரிதாரம் கொஞ்சம்கொஞ்சமாகக் கலைய ஆரம்பித்திருக்கிறது. ‘கருப்புப் பணத்தை ஒழிப்போம், வறுமையை ஒழிப்போம்’ என்றெல்லாம் தேர்தல் சமயத்தில் பாஜக தலைவர்கள் முழங்கியபோது, இந்தியாவுக்கு ஒரு பொன் விடியல் வரப்போகிறது என்ற உணர்வையே நாடு முழுவதும் ஏற்படுத்தியிருந்தார்கள். ஆனால், கருப்புப் பண விவகாரத்தில் பாஜகவின் இரட்டை வேடம் இப்போது வெட்டவெளிச்சமாகியிருக்கிறது. “இரட்டை வரிவிதிப்புத் தடுப்பு ஒப்பந்தத்தைப் பிற நாடுகளுடன் செய்துகொண்டிருக்கிறோம்; அந்த நாடுகளின் வங்கிகளில் முதலீடு செய்துள்ள இந்தியர்களின் பெயர்களை வெளியிடுவதை அவை கடுமையாக ஆட்சேபிப்பதால் இப்போதைக்குக் கூற முடியாமல் இருக்கிறோம்” என்று மத்திய அரசு உச்ச நீதிமன்றத்திடம் பதில் அளித்திருப்பதை என்னவென்று சொல்வது?
காங்கிரஸ் தலைமையிலான ஆட்சியின்போது கருப்புப் பணத்தை இந்தியாவுக்கு மீட்டுவருவதுகுறித்து அப்போதைய மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் அருண் ஜேட்லியும், பிரதமர் பதவிக்கான வேட்பாளராக அறிவிக்கப்பட்ட நரேந்திர மோடியும் கடுமையான கேள்வி களை எழுப்பினார்கள். பாஜக தலைமையிலான கூட்டணி ஆட்சிக்கு வந்தால், 150 நாட்களுக்குள் கருப்புப் பணக்காரர்களின் பட்டியலை வெளியிடுவோம் என்றெல்லாம் தேர்தல் காலத்தில் பாஜக தலைவர்கள் முழங்கினார்கள். இப்போதோ மழுப்ப ஆரம்பித்திருக்கிறார்கள்.
“இரட்டை வரிவிதிப்புத் தடுப்பு ஒப்பந்த வாசகங்களைத் தயாரித் தவர்கள் வெளியுறவுத் துறை அதிகாரிகள்தான். அவர்களுக்குச் சட்டங்களை இயற்றுவது தொடர்பாக அனுபவமோ பயிற்சியோ இருந்திருக்காது. எனவே, அந்த வாசகங்களைச் சரியாக மாற்றியமை யுங்கள்” என்று மத்திய அரசுக்குக் குட்டுவைத்துவிட்டு, உச்ச நீதிமன்றம் விசாரணையை இந்த மாதம் 28-ம் தேதிக்குத் தள்ளிவைத்திருக்கிறது.
கருப்புப் பணம் எப்படி உருவாகிறது என்பதைப் பார்த்தாலே, நமது ஆட்சியாளர்களைப் பற்றி நாம் எவ்வளவு அப்பாவித்தனமாகப் புரிந்துகொண்டிருக்கிறோம் என்பது தெரிந்துவிடும். கருப்புப் பணம் என்பது கணக்கில் காட்டப்படாத, வருமான வரி செலுத்தாத பணம். தொழிற்சாலை உற்பத்தி மூலமாகவோ, வியாபாரம் மூலமாகவோ, கள்ளக்கடத்தல், போதை மருந்துக் கடத்தல் போன்ற சமூகவிரோதச் செயல்கள் மூலமோ, அரசு கொள்முதல், ஒப்பந்தங்கள் தொடர்பான பேரங்கள் மூலமோ, லஞ்சம் மூலமோ பெறப்படும் தொகைதான் கருப்புப் பணமாகிறது. அரசை ஏமாற்றும் அதிகாரிகளும் அரசியல் வாதிகளும் பெரும் தொழிலதிபர்களும்தான் கருப்புப் பண சாம்ராஜ்யத்தின் அதிபதிகள். கட்சி வேற்றுமையின்றிக் கருப்புப் பணத்தோடு பின்னிப் பிணைந்திருக்கிறது இந்திய அரசியல் சூழல். முக்கியமாக, கருப்புப் பணமின்றி இந்தியாவில் தேர்தல்களே நடக்க முடியாது என்ற சூழல் உருவாகியிருக்கிறது. அப்படியிருக்கும்போது கருப்புப் பணக்காரர்களின் பட்டியல் எப்படி வெளிவரும்? எனவே, பாஜகவின் பதுங்கலில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை.
கருப்புப் பணம் தொடர்பாகப் பொதுநல வழக்கு தொடுத்த ராம் ஜெத்மலானி, இந்தியர்களின் கருப்புப் பண மதிப்பு 75 லட்சம் கோடி ரூபாய் என்கிறார். உண்மையில், பதுக்கிவைக்கப்பட்டிருக்கும் கருப்புப் பணத்தின் மதிப்பு இதைவிட அதிகமாக இருக்கலாம் என்கிறார்கள் பொருளாதார நிபுணர்கள். பொருளாதார நெருக்கடி என்று ஐந்துக்கும் பத்துக்கும் நாட்டு மக்களை வாட்டி வதைக்கும் ஆட்சியாளர்கள் கருப்புப் பண விவகாரத்தில் பசப்புவது மக்களுக்கு இழைக்கும் துரோகம் அல்லவா?
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
7 hours ago
கருத்துப் பேழை
7 hours ago
கருத்துப் பேழை
7 hours ago
கருத்துப் பேழை
7 hours ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
4 days ago
கருத்துப் பேழை
4 days ago