தேர்தல் அறிக்கைகளில் கட்சிகள் தங்கள் விருப்பம்போல் இலவசங்களை அறிவிப்பதற்கு எதிராகத் தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்திருக்கிறது. அப்படி இலவசங்கள் கொடுப்பதாக அறிவித்தால், அவற்றைக் கொடுக்க எங்கிருந்து நிதி பெறப்படும் என்பதையும் தெரிவிக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையம் திட்டவட்டமாகக் கூறியிருக்கிறது. இலவசங்கள்பற்றிய அறிவிப்புகள் தேர்தலில் போட்டியிடுபவர்களிடையே சமனின்மையை ஏற்படுத்திவிடுகின்றன என்றும் அனைவரும் சமபலத்துடன் போட்டியிடும் சூழல் இருக்க வேண்டும் என்றும் தேர்தல் ஆணையம் கூறியிருக்கிறது.
இந்தியா போன்ற ஒரு நாட்டில் இலவச அறிவிப்புகளைத் தடுத்துவிடுவதால் மட்டுமே போட்டியிடுபவர்களுக்கிடையே சமத்துவத்தை ஏற்படுத்திவிட முடியும் என்று தோன்றவில்லை. நம் சமூகத்தில் அரசு சார்பில் ஏழைகளுக்கு என்று ஓர் இலவசப் பொருள் கொடுக்கப்படும்போது, அதை வாங்கிக்கொள்வதில், பணக்காரர்களுக்கும்கூட தயக்கங்கள் இருப்பதில்லை என்பதே யதார்த்தம். எனினும், எல்லோருமே இலவசங்களுக்கு எதிராகப் பேசுவது ஒரு மோஸ்தர். இலவசங்கள் மக்களைக் கெடுக்கின்றன, வளர்ச்சியைக் கெடுக்கின்றன என்றெல்லாம் பேசுபவர்கள் வழக்கமாக ஒரு பொன்மொழியையும் சேர்த்துக்கொள்வார்கள்: பசிப்பவனுக்கு மீனைக் கொடுப்பதைவிட மீன் பிடிக்கக் கற்றுக்கொடுப்பதே சிறந்தது. சரிதான், கொலைப் பசியில் இருப்பவர்களுக்கு எப்போது கற்றுக்கொடுத்து, அவர்கள் கற்று, மீன் பிடித்து… உண்மையில் பசிப்பவர்களுக்கு அந்த நேரத்தில் மீனையும் கொடுக்க வேண்டும், கூடவே மீன் பிடிக்கவும் கற்றுக்கொடுக்க வேண்டும் என்பதே சரியான வழியாக இருக்க முடியும்.
நிச்சயமாக, இன்றைய காலகட்டத்தில் இலவசங்கள் அரசாங்கங் களுக்கு ஒரு பெரும் சுமையாக இல்லை. ஒவ்வோர் ஆண்டும் பெரு நிறுவனங்களுக்கு அளிக்கப்படும் வரிவிலக்கின் உண்மையான கூட்டுத்தொகையோடு ஒப்பிட்டால், இலவசங்களுக்காக ஒதுக்கீடு செய்யப்படும் தொகையெல்லாம் ஒருபொருட்டே இல்லை. அதேசமயத்தில், அரசு தரும் இலவசங்களின் விளைவாக சமூகத்தில் ஆக்கபூர்வமான சில மாற்றங்கள் ஏற்படத்தான் செய்கின்றன. ஓர் அரசு சைக்கிளையோ, கிரைண்டரையோ இலவசமாகக் கொடுக்க, ஒரு பெரும் கொள்முதலில் ஈடும்படும்போது சம்பந்தப்பட்ட துறையில் அது பொருளாதார முடுக்குதலை உருவாக்குகிறது என்றால், ஆடு - மாடுகள் போன்றவற்றை வழங்கும்போது கிராமப்புறப் பொருளாதாரத்திலும் அவை மாற்றத்தை உண்டாக்குகின்றன. தவிர, நம் கண்ணுக்குத் தெரியாத எவ்வளவோ விஷயங்களை நிகழ்த்துகின்றன. காமராஜர் தொடங்கிய மதிய உணவுத் திட்டமும் எம்.ஜி.ஆர். வழங்கிய சீருடை, காலணிகளும் தமிழகக் கல்வி வளர்ச்சிக்கு வலுவான அடிப்படையை உருவாக்கின. நாடாளுமன்ற ஜனநாயகத்தின் தொட்டிலான பிரிட்டனில் இதே போன்ற சமூகநலத் திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வாழ்க்கைத் தரம் உயர்த்தப்பட்டது, பொருளாதார வரலாறு. இதில் கொடுப்பவர்கள் பெருமிதப்பட்டுக்கொள்ளவோ வாங்குபவர்கள் கூச்சப்படவோ தேவையே இல்லை. மக்களே மக்களுக்குக்காக மக்கள் பணத்தைச் செலவிடுவதே இந்த இலவசங்களின் அடிப்படை.
ஜனநாயகத்தில் தேர்தல்தான் ஆட்சியாளர்களை மக்கள் பக்கம் நோக்கித் திசை திருப்புவதற்கான துருப்புச்சீட்டு. அடித்தட்டு மக்களுக்கு இப்படி எல்லாமும்தான் நல்லது நடக்க வேண்டும். புதிது புதிதாகக் காரணங்களைச் சொல்லி அதைத் தடுப்பது சரியல்ல.
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
18 hours ago
கருத்துப் பேழை
19 hours ago
கருத்துப் பேழை
19 hours ago
கருத்துப் பேழை
19 hours ago
கருத்துப் பேழை
16 hours ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago