இந்தியா போன்ற மக்கள்தொகை மிகுந்த ஜனநாயக நாட்டில் சரியான பொருளாதார முடிவுகளை எடுப்பது எளிதல்ல. நாட்டு மக்களின் நலனையும் பார்க்க வேண்டும், நிர்வாகத்தையும் சீராக நடத்த வேண்டும். மத்திய அரசு இப்போது இருதலைக்கொள்ளி எறும்பாகத்தான் சிக்கலில் மாட்டியிருக்கிறது.
உலக அளவில் பொருளாதாரம் இன்னமும் வழக்கமான வேகத்தை எட்டவில்லை. நம்முடைய ஏற்றுமதி மதிப்பைவிட இறக்குமதி மதிப்பு பலமடங்கு அதிகமாக இருக்கிறது. கச்சா பெட்ரோலிய எண்ணெய், நிலக்கரி, சமையல் எண்ணெய், பருப்புகள் போன்றவற்றின் இறக்குமதிக்கு அதிகம் செலவாகிறது. அதிகம் செலவுசெய்து, பற்றாக்குறையை அதிகப்படுத்த வேண்டாம் என்று இந்திய ரிசர்வ் வங்கி அரசுக்கு அறிவுறுத்தியிருக்கிறது. அரசுக்குக் கடன் தரும் வெளிநாட்டு, சர்வதேச நிறுவனங்களும் அதே யோசனையைத் தெரிவித்துள்ளன.
இந்தச் சூழலில்தான் அரசு முதலில், திட்டம் சாராத இனங்களில் செலவுகளை 10% குறைத்தது. இப்போது திட்டச் செலவுகளிலேயே சுமார் 15,000 கோடி ரூபாய் அளவுக்குக் குறைக்க உத்தேசித்துள்ளது. இதனால் வேலைவாய்ப்பு, சுகாதாரம், தண்ணீர், வீடமைப்பு, மின்சார இணைப்பு ஆகியவற்றை வழங்குவதில் பெருத்த பின்னடைவு ஏற்படும். மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டம், இந்திரா வீடமைப்புத் திட்டம், தேசிய ஊரக வாழ்வாதாரத் திட்டம் ஆகியவற்றுக்கான ஒதுக்கீட்டில் தலா ரூ.2,000 கோடியும், பிரதம மந்திரி கிராம சாலைத் திட்டத்தில் ரூ.9,000 கோடியும், தொடக்கக் கல்விக்கான திட்டங்களில் ரூ.2,500 கோடியும் உயர்நிலைக் கல்வித் திட்டங்களில் ரூ.3,000 கோடியும் குறைக்கலாம் என்று செலவுகள் துறை அரசுக்குப் பரிந்துரை செய்துள்ளது.
ஆனால், ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ், இந்தச் செலவுகள் நிதியாண்டின் பிற்பகுதியில்தான் மேற்கொள்ளப்படும், இந்த நிலையில் இவற்றைக் குறைப்பதால் இந்தத் திட்டங்களின் நோக்கங்களையே சிதைத்துவிடும் என்று கவலை தெரிவித்துள்ளார்.
இந்தச் செலவுகளைக் குறைப்பதால் நாட்டு முன்னேற்றத்தில் பின்னடைவுதான் ஏற்படும். மாநில மற்றும் உள்ளாட்சி அமைப்புகளுக்கு இந்தத் திட்டங்கள் மூலம் மத்திய அரசு வழங்கிவரும் மானிய உதவி கணிசமாகக் குறையும். திட்டச் செலவைக் குறைப்பதால் திட்டங்கள் பூர்த்தியாகாமல் அரைகுறை நிலையில் இருக்கும். அடுத்த நிதியாண்டில் இதை சீர்செய்ய மேலும் அதிக நிதி தேவைப்படும்.
நாடாளுமன்ற உறுப்பினர்களின் தொகுதி வளர்ச்சி நிதி போன்றவை பெரும்பாலும் வீணாகவே செலவழிக்கப்படுகிறது என்று பொதுக்கணக்குக் குழு, தலைமைக் கணக்குத் தணிக்கையாளர் அலுவலகம் போன்றவை கூறிவருகின்றன. அப்படிப்பட்ட செலவுகளை தீவிரமாகக் கண்காணித்து முறைப்படுத்துவது விவேகமாக இருக்கும்.
பொருளாதாரம் சார்ந்த முடிவுகளைவிட அரசியல்ரீதியிலான முடிவுகளால்தான் இந்திய அரசுக்குச் சிக்கலே வருகிறது. கல்வி, சுகாதாரம், சாலை வசதி, கிராமப்புற மேம்பாடு போன்றவற்றுக்கு நாம் ஒதுக்கும் தொகைகளே போதாது. அப்படியிருக்க அந்தச் செலவுகளையும் குறைப்பது என்பது நமக்கு எந்த விதத்திலும் நன்மையைத் தராது.
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
23 hours ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
4 days ago
கருத்துப் பேழை
4 days ago