இன்றைய காந்தி

By செய்திப்பிரிவு

நிதானிக்க முடியாத வேகத்தில், நிதானிக்க முடியாத இடத்துக்கு ஒட்டுமொத்த மனிதர்களும் வந்துசேர்ந்திருக்கிறோம். நாம் ஆரத் தழுவிக்கொண்ட நவீன வாழ்க்கை நமக்குக் கொண்டுவந்து கொட்டியிருக்கும் வசதிகள் எண்ணற்றவை. எனினும், கூடவே அது இழுத்துக்கொண்டுவந்திருக்கும் தீமைகள் அதன் நன்மைகளையே கபளீகரம் செய்துகொண்டிருப்பதுதான் பேரவலம்.

நமக்குள்ளும் நம்மைச் சுற்றிலும் நவீன வாழ்க்கை கொண்டுவந்து கொட்டும் அழுக்கு, ஒட்டுமொத்த மனித சமூகத்தையே பலியிட்டுக் கொண்டிருக்கிறது. எங்கும் பிளவு, பிரிவினை, போர், ஆக்கிரமிப்புகள், இனஅழிப்புகள், ஓயாத கலவரங்கள். இது ஒரு பக்கம் என்றால், இது போன்ற சமயங்களில் நமக்குத் தலைமை தாங்க வேண்டியவர்கள், முன்னுதாரணமாக இருக்க வேண்டியவர்கள் அறம் பிறழ்ந்து, ஊழலிலும் அதிகாரத்தின் சுகபோகங்களிலும் மூழ்கி, நம்மையும் அதே திசையில் வழிநடத்திக்கொண்டிருக்கிறார்கள்.

அடிப்படையில் பார்த்தால், இவை எல்லாமே ஒரே ஊற்றுக் கண்ணிலிருந்து வருபவையே. நமக்கு அன்பு இல்லை என்ற நிலை யிலிருந்துதான் இவை எல்லாமே ஊற்றெடுக்கின்றன. நமக்கு நம்மிடம் அன்பு இல்லை, சக மனிதர்களிடம் அன்பு இல்லை, இயற்கையிடம் அன்பு இல்லை. இவை எதுவுமே ஒன்றையொன்று பிரித்துப் பார்க்க முடியாதவை. அன்பு இல்லாததன் காரணமாகத்தான் அவ்வளவு பேரழிவும். நாம் நின்று நிதானித்துச் சூழலை நோட்டமிட்டுப் பரிசீலிக்க வேண்டிய தருணம் இது.

ஒவ்வொரு காலகட்டத்திலும் சமூகம் இதைச் செய்ய வேண்டியது அவசியம். இல்லையெனில், இயற்கை இதற்கெல்லாம் பெரும் பாடம் புகட்டிவிடும். ஏனெனில், இவை எல்லாமே இறுதியில் இயற்கை மீது நிகழ்த்தப்படும் அத்துமீறலாகத்தான் போய் முடியும். ஒவ்வொரு காலகட்டத்துக்கும் அந்தந்த காலகட்டத்தின் சூழலுக்கு ஏற்ப இந்தப் பரிசீலனைக்கு ஒரு கருவி நமக்குத் தேவைப்படும். நம் காலத்தின் கருவி: காந்தியம்.

காந்தியே சொல்வதுபோல் சத்தியம், அகிம்சை உள்ளிட்டவற்றை அவரொன்றும் புதிதாகக் கண்டுபிடித்துவிடவில்லை; என்றாலும் ஒவ்வொரு காலகட்டத்துக்கும் அந்த நெறிகளுக்கான வாழும் உதாரணங்கள் தேவைப்படுகிறார்கள். நம் காலத்தின் மிகச் சில உதாரணங்களில் காந்தியும் ஒருவர். காந்தியம் என்பது எல்லா மதங்கள், கோட்பாடுகளிலிருந்தும் ஆகச் சிறந்தவற்றை உள்வாங்கிக்கொண்டு, இன்றைய மானுடத் தேவைக்கேற்ப விரிவுபெற்றிருப்பது.

பாதிரியாரான ஸ்டான்லி ஜோன்ஸ் ‘வரலாற்றில் கிறிஸ்துவைப் போன்றவர்களில் ஒருவர் கிறிஸ்தவர் இல்லை என்பதுதான் விந்தை’ என்று காந்தியைக் குறிப்பிடுவது ஓர் உதாரணம். சமரசம் இல்லாமல் சத்தியத்தை இடைவிடாது பரிசோதித்து அடைந்த வெற்றி காந்தியம்.

நவீன வாழ்க்கை அதன் இளம் பருவத்திலும், உலகமயமாதல் அதன் சிசுப் பருவத்திலும் இருந்தபோதே அவற்றால் ஏற்படக்கூடிய தீமைகளுக்கு எதிராக இடைவிடாமல் எச்சரிக்கைக் குரல்கொடுத்தவர் காந்தி. நவீன வாழ்க்கை கொடுக்கும் வசதிகளை மிகமிகக் குறைவாகவே பயன்படுத்திக்கொண்டார். அதையே மற்றவர்களுக்கும் வலியுறுத்தினார். காலத்தோடு ஒட்டிப்போகாதவர் என்று அவரை அவரது சகாக்கள் உட்படப் பலரும் கேலிசெய்தார்கள்.

இன்று, சூழலியல், உலகமயமாதல், புவிவெப்பமாதல் என்றெல்லாம் பேசும்போது காந்தியிடம் ஓடிப்போய் நிற்கிறோம். ‘நம் ஒவ்வொருவரின் தேவைகளை மட்டுமே இந்தப் புவியால் நிறைவுசெய்ய முடியுமே தவிர, நம் ஒவ்வொருவரின் பேராசைகளையும் அல்ல’ என்ற காந்தியின் வாசகம் இன்று சூழலியலாளர்களின் தாரக மந்திரமாக ஆகியிருக்கிறது. சுற்றுச்சூழலுக்கு மட்டுமல்ல, அனைத்து விஷயங்களுக்கும் இது நமக்குப் பொருந்தும். போர்கள், சாதி, மதப் பிளவுகள், ஏற்றத்தாழ்வுகள், ஊழல்கள் என்று அனைத்துக்குமே நமது பேராசைதான் காரணமாகிறது. அன்பில்லாத நிலையில் தோன்றுவதே பேராசை. அந்த அன்பைத்தான் தன் வாழ்க்கை முழுதும் போதித்தார் காந்தி.

காந்தியையும் காந்தியத்தையும் அவருடைய சொற்களில் அடைத்துப் பார்த்துவிட முடியாது. நம் காலத்துக்கு ஏற்ப நாம் அதைச் சுவீகரித்துக்கொள்ள முடியும். நாம் செய்ய வேண்டியதெல்லாம் அன்பு, எளிமை, அறம் எனும் மூன்று எளிய பாதைகளினூடே நம் காலத்துக்கான, நம் ஒவ்வொருவருக்குமான காந்தியத்தை வடிவமைத்துக் கொள்ள வேண்டியதுதான். நம் மனங்களிலிருந்து அகற்றப்பட்டு, தெரு முனைகளில் சிலையாக வைக்கப்பட்டிருக்கும் காந்தியை மீண்டும் நம் மனதுக்குள் நிறுத்திக்கொள்வோம். காந்தியம் உயிருள்ளது, அதைச் சிலைகளிலிருந்து மீட்டெடுப்போம்!

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE