மனிதச் சுரண்டலை அனுமதிக்காதீர்கள்!

‘உதவிபெற்ற மகப்பேறு தொழில்நுட்ப (ஒழுங்குபடுத்தல்) மசோதா-2014’ தற்போதைய குளிர்காலக் கூட்டத்தொடரில் கொண்டுவரப்படவிருக்கிறது. வாடகைத் தாய் முறையில் நடக்கும் முறைகேடுகளைத் தடுப்பதற்காக அதில் சில திருத்தங்கள் மேற்கொள்ள இருப்பதாகத் தெரிகிறது. திருமண உறவில் இல்லாமல் தனியாக வாழ்பவரும், வெளிநாட்டுத் தம்பதியரும் இந்தியாவில் வாடகைத் தாய் முறையை நாடுவதற்கு அந்த சட்டத்தின்மூலம் தடைவிதிக்கப்படலாம் என்றும் தெரிகிறது.

குழந்தைப் பேறு இல்லாதவர்கள் குழந்தையைப் பெற மருத்துவரீதியாகவே பல வழிகள் ஏற்பட்டுவிட்டன. அவற்றுள் ஒன்று, வாடகைத் தாய் முறை. குறிப்பிட்ட தொகையைப் பெற்றுக்கொண்டு, தனது கருப்பையில் குழந்தை வளர்வதற்கு அனுமதித்து, குழந்தை பெற்றுத்தருபவரே வாடகைத் தாய். தார்மிகரீதியிலோ வேறு வகையிலோ இது சரியில்லை என்று கருதி, பல நாடுகள் இந்த வாடகைத் தாய் முறையைத் தடை செய்திருக்கின்றன. இந்தியா, மெக்ஸிகோ போன்ற நாடுகளில் மட்டும் இப்போது வாடகைத் தாய் முறை பரவலாகிக்கொண்டுவருகிறது. இதற்குக் காரணம் வேறு என்னவாக இருக்க முடியும்? உடல் உழைப்பிலிருந்து, வாடகைத் தாய்வரை இந்தியாவில்தான் எல்லாமே மலிவு விலையாயிற்றே!

இனி கருத்தரிக்கவே முடியாது அல்லது கருவை வளர்த்து மகப்பேறை எட்டவே முடியாது என்ற மருத்துவக் காரணங்களுக்காக இப்படி வாடகைத் தாயை அணுகுகின்றனர். அதற்கு ஒப்புக்கொள்ளும் பெண்களுக்கு, கருவைச் சுமக்கும் காலத்துக்குத் தேவைப்படும் சத்தான உணவு, மருந்து-மாத்திரைகள் போன்றவற்றுக்கும் வாழ்க்கைச் செலவுக்கும் கணிசமான தொகையைத் தருகின்றனர். குழந்தையைப் பெற்றெடுத்த பிறகு, அதைத் தங்களிடம் ஒப்படைக்கும்போது மிகப் பெரிய தொகையைத் தந்துவிட்டு விடைபெறுகின்றனர். எதுவாக இருந்தாலும் மனித உற்பத்தி என்பது வணிகமயமாக்கப்படும் நிலை பெரும் சங்கடத்தையே ஏற்படுத்துகிறது.

பணத்தைத் தாண்டியும் இதில் கவனிக்க வேண்டிய சில பிரச்சினைகள் இருக்கின்றன. சில வேளைகளில், சுமந்துபெற்ற குழந்தையைப் பிரிவதில் அந்த வாடகைத் தாய்க்கு ஏற்படும் விருப்பமின்மை, வாடகைக்கு அமர்த்திய தம்பதியரே அந்தக் குழந்தையை நிராகரிக்கும் நிலை உள்ளிட்ட ஏராளமான பிரச்சினைகள் இதில் இருக்கின்றன. இவற்றையெல்லாம் கருத்தில் கொண்டு மருத்துவ ஆராய்ச்சிக்கான இந்திய கவுன்சில் அமைப்பு 2005-ல் தெளிவான சில பரிந்துரைகளை அளித்திருக்கிறது. மத்திய அரசு இதை அடியொற்றி, ‘உதவிபெற்ற மகப்பேறு தொழில்நுட்ப (ஒழுங்குபடுத்தல்) மசோதா 2013’ தயாரித்தது. அந்தச் சட்டத்தில் மேலும் சில மாற்றங்கள் செய்து இப்போது புதிய மசோதா கொண்டுவரப்படவிருக்கிறது.

இந்தியா போன்ற ஏழை நாடுகளில் வாடகைத் தாய் போன்ற முறைகளில் நடைபெறும் சுரண்டல்களை மனித உரிமை மீறல் என்றே சொல்ல வேண்டும். வாடகைத் தாயையும், வாடகைத் தாயைத் தேடியலையும் தம்பதியரையும் இணைக்கும் பாலமாக நிறைய மருத்துவமனைகளும் மருத்துவத் தரகர்களும் செயல்படுகிறார்கள். பணப் பரிமாற்றத்தில் தங்களுக்குப் பெரும் தொகையைத் தரகாக எடுத்துக்கொண்டு, வாடகைத் தாயை அவர்கள் தவிக்கவிடும் சம்பவங்கள் நிறைய. வறுமை நிலையால் ஏழைப் பெண்கள் சுரண்டப்படுவதே இங்கு பரவலாக நடக்கிறது. எனவே, இப்படிப்பட்ட சுரண்டலைத் தடுக்கும் விதத்தில் புதிய மசோதா இருந்தால் தாராளமாக அதை வரவேற்கலாம்!

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE