முடிவுகள் அல்ல, பாடம்!

மூன்று மக்களவைத் தொகுதிகளுக்கும், 33 சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கும் 9 மாநிலங்களில் நடந்த இடைத்தேர்தலில் பாஜக குறிப்பிடத் தக்க பின்னடைவைச் சந்தித்திருக்கிறது. மத்திய அரசில் தனது தேனிலவுக் காலம் முடிவதற்குள் பாஜகவுக்கு இப்படியொரு சரிவு!

அசாமில் பாஜக தனது இடத்தைத் தக்கவைத்திருப்பதும், மேற்கு வங்க சட்டமன்றத்தில் நீண்ட காலத்துக்குப் பின் நுழைந்திருப்பதும் அந்தக் கட்சிக்கு ஆறுதலான விஷயங்கள். ஆனால், மோடியை அரியணை ஏற்றியதில் முக்கியப் பங்குவகித்த குஜராத், ராஜஸ்தான், உத்தரப் பிரதேசம் ஆகிய மூன்று மாநிலங்களில் கிடைத்த இடைத் தேர்தல் முடிவுகளை பாஜக சற்றும் அலட்சியப்படுத்திவிட முடியாது. குஜராத்தில், மோடி ராஜினாமா செய்த வடோதரா மக்களவைத் தொகுதியில் பாஜக மறுபடியும் வென்றிருந்தாலும், ஒன்பது சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கு நடந்த தேர்தலில், மூன்று தொகுதிகளில் பாஜகவை காங்கிரஸ் வீழ்த்தியுள்ளது குஜராத் பாஜகவுக்குச் சற்றே அதிர்ச்சியை ஏற்படுத்தியிருப்பது உண்மைதான். ராஜஸ்தானில், கடந்த டிசம்பரில் நடந்த சட்டமன்றத் தேர்தலிலும் இந்த ஆண்டில் நடந்த நாடாளுமன்றத் தேர்தலிலும் பெருவெற்றி பெற்ற பாஜக, தற்போதைய இடைத்தேர்தலில் நான்குக்கு மூன்று தொகுதிகளை காங்கிரஸிடம் இழந்துள்ளது. உத்தரப் பிரதேசம் இன்னும் மோசம். 11 சட்டப் பேரவைத் தொகுதிகளில் எட்டில் சமாஜ்வாதி கட்சியும் மூன்றில் பாரதிய ஜனதாவும் வென்றுள்ளன.

உத்தரப் பிரதேசத்தில் சட்டம்-ஒழுங்கு சரியில்லாத நிலையிலும், ஊடகங்களும் எதிர்க் கட்சிகளும் இதைக் குறித்துப் பிரச்சாரம் செய்திருந்தாலும், ஒன்பது தொகுதிகளை சமாஜ்வாதி கட்சி வென்றிருப்பது சாதாரணமல்ல. ‘லவ் ஜிகாத்’, மதரஸாக்கள் - பயங்கரவாதப் பள்ளிகள் என்றெல்லாம் விஷத்தைக் கக்கும் வகையில். பாஜகவின் மக்களவை, சட்டப் பேரவை உறுப்பினர்கள் தொடர்ந்து பேசிக்கொண்டிருப்பது மக்களிடையே பாஜக மீது நல்லெண்ணத்தை ஏற்படுத்தவில்லை. உத்தரப் பிரதேச முதலமைச்சர் அகிலேஷ் யாதவ் தனது நன்றி அறிக்கையில் இதைச் சுட்டிக்காட்டியிருக்கிறார்.

மேற்கு வங்கத்தில் இடதுசாரிகளின் செல்வாக்கைச் சரித்த திரிணமூல் காங்கிரஸுக்கு புதிய போட்டியாளராகக் கிளம்பியிருக்கிறது பாஜக. இடதுசாரிகளுக்கு ஒரு எச்சரிக்கை இது. பலமான எதிர்க் கட்சி என்பது ஜனநாயகத்தில் மிகவும் அவசியம். எதிர்க் கட்சிக்குரிய பலத்தையும் இடதுசாரிகள் இழந்துவருகின்றனரோ என்ற கேள்வியை இந்தத் தேர்தல் முடிவு எழுப்புகிறது. இடதுசாரித் தலைமையும் கட்சிக்குள் புது ரத்தத்தைப் பாய்ச்சுவது குறித்துச் சிந்திக்க வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியச் செயலாளர் டி. ராஜா கூறியிருப்பது கவனிக்க வேண்டியது.

இந்த இடைத்தேர்தல் முடிவையும் பிஹாரில் நடந்த இடைத்தேர்தல் முடிவையும் சாதுர்யமான கூட்டணிக் கணக்குகளுக்குக் கிடைத்த வெற்றியாகவும் கருத வேண்டியிருக்கிறது. அது மட்டுமல்லாமல், நாடாளுமன்றத்துக்கான தேர்தல் வேறு, சட்டமன்றத் தேர்தல் வேறு என்பதையும் மக்கள் தெளிவாகவே உணர்ந்திருக்கின்றனர். மக்களவைத் தேர்தலில் மக்கள் தங்களுக்கு அளித்த பெரும் வெற்றி, ஊழலிலும் நிர்வாகச் சீர்கேடுகளிலும் திளைத்த காங்கிரஸ் அரசு தூக்கியெறியப்பட வேண்டும் என்பதற்காகவே என்பதை பாஜக மறந்துவிடக் கூடாது. மக்கள் எதை எதிர்பார்த்து வாக்களித்திருக்கிறார்கள் என்பதை உணர்ந்து, மோடியின் சகாக்கள் செயல்பட வேண்டும் என்பதுதான் இந்தத் தேர்தல் முடிவுகள் சொல்லும் சேதி.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE