பந்து அந்தப் பக்கம்

By செய்திப்பிரிவு

இந்தியாவுக்கு எதிரான செயல்களையும், இந்தியாவுக்கு எதிராகச் செயல்படுவோருக்குத் தரும் ஆதரவுகளையும் பாகிஸ்தான் நிறுத்திக்கொண்டால், சமரசத் தீர்வுகுறித்துப் பேசத் தயாராக இருக்கிறோம் என்று பச்சைக்கொடியை மீண்டும் கையில் எடுத்திருக்கிறது இந்தியா. இந்திய அரசின் அறிவிப்பு நல்ல சமிக்ஞை மட்டுமல்ல; ராஜ தந்திரரீதியாக நல்ல நகர்த்தலும் கூட.

இரு நாடுகளுக்கும் இடையிலான உறவில் எவ்வளவோ ஏற்ற இறக்கங்கள் ஏற்பட்டுக்கொண்டிருந்தாலும் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்னால் ஏற்பட்ட போர் நிறுத்தம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. 2001 டிசம்பரில் இந்திய நாடாளுமன்றத்தின் மீது பாகிஸ்தானின் ஜெய்ஷ்-இ-முகம்மது அமைப்பினர், திடீர் தாக்குதல் நடத்தினர். இந்தியப் பாதுகாப்புப் படையினர் அதை முறியடித்தனர். இதையடுத்து இரண்டு ஆண்டுகளுக்கு இரு நாடுகளுக்கும் இடையில் உறவு தேக்கநிலையை அடைந்தது. பிறகு, இருதரப்பும் பரஸ்பரம் துப்பாக்கியால் சுட்டுக்கொள்வ தில்லை என்ற உடன்பாட்டுக்கு வந்தன. இதனால், 2003 நவம்பர் மாதம் ஈத் பெருநாளின்போது இருதரப்பும் துப்பாக்கிச் சண்டையை நிறுத்தின. ஆனால், 2008 முதலே பாகிஸ்தான் இந்த ஒப்பந்தத்தை மீறியது. அடிக்கடி இந்திய எல்லையை நோக்கித் துப்பாக்கியாலும் பீரங்கிகளாலும் சுட்டது.

கடந்த ஆண்டு இதன் உச்சகட்டமாக இந்திய வீரரைக் கொன்று, அவருடைய தலையை வெட்டி எடுத்துச் சென்றது. கட்டுப்பாட்டு எல்லைக்கோட்டருகே ஐந்து இந்திய ஜவான்களைத் திடீரெனத் தாக்கிக் கொன்றது. 2014 ஆகஸ்டில் மட்டும் 20-க்கும் மேற்பட்ட முறை துப்பாக்கியாலும் பீரங்கியாலும் தொடர்ந்து சுட்டுவந்தது. சர்வதேச எல்லைக் கோட்டருகில் ஆகஸ்ட் கடைசி வாரத்தில் கடுமையாகச் சுட்டது. இந்தியாவும் பாகிஸ்தானும் இதுவரை நேருக்கு நேர் மூன்று போர்களைச் சந்தித்திருந்தாலும், இந்த எல்லைப் பகுதி அமைதியாகவே இருந்திருக்கிறது. கடந்த ஆகஸ்ட் முதல்தான் அந்த அமைதி சீர்குலைக்கப்படுகிறது.

2008 நவம்பரில் மும்பை மீது பாகிஸ்தான் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்திய பிறகு, இருதரப்பும் பேசிக்கொள்ள சரியான ஏற்பாடு இல்லாமலேயே இருந்தது. மோடி பிரதமர் பதவியேற்றபோது, பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீஃப் அழைக்கப்பட்டு, அவரும் வந்ததால் நிலைமை மேம்படும் என்ற நம்பிக்கை ஏற்பட்டது. ஆனால், பாகிஸ்தானில் நவாஸ் ஷெரீஃபுக்கு எதிராகத் தீவிரப் போராட்டம் நடந்துவரும் சூழலில், பேச்சுவார்த்தைகள் புறம்தள்ளப்படும் அபாயம் இருக்கிறது.

இந்தச் சூழலில் பாகிஸ்தான் எந்த அளவுக்கு இதற்குத் தயாராக இருக்கும், பேச்சுவார்த்தைகள் எந்த அளவுக்கு ஆக்கபூர்வமாக இருக்கும் என்பதெல்லாம் ஒருபுறமிருக்கட்டும். தாக்குதலை நிறுத்தினால் பேசுவதுகுறித்து யோசிக்கலாம் என்கிற அறிவிப்பின் மூலம், பந்து பாகிஸ்தான் எல்லையை நோக்கித் தள்ளப்பட்டிருக்கிறது. பாகிஸ்தான் ஒன்று, தாக்குதலை நிறுத்தி பேச்சுக்கு வர வேண்டும் அல்லது இந்தியாவின் பதில் தாக்குதலை எதிர்கொள்ள வேண்டும். உலகம் மைதானத்தைப் பார்த்துக்கொண்டிருக்கிறது. எல்லை தாண்டிய பந்து என்னவாகிறது என்று பார்ப்போம்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கருத்துப் பேழை

3 hours ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

4 days ago

கருத்துப் பேழை

4 days ago

கருத்துப் பேழை

4 days ago

கருத்துப் பேழை

4 days ago

கருத்துப் பேழை

5 days ago

மேலும்