நீங்கள் பேசாமலே இருந்திருக்கலாம் ஹேமமாலினி!

By செய்திப்பிரிவு

நாடாளுமன்றத்துக்குச் சென்றுவருவதையே ஒரு சாதனையாகக் கொண்டுள்ள உறுப்பினர்களில் ஒருவர் என்ற குற்றச்சாட்டு நடிகை ஹேமமாலினி மீது உண்டு. நாடாளுமன்றக் கூட்டங் களில் குறைவான வருகைப் பதிவையே கொண்டவர் அவர். அப்படிப் பங்கேற்ற சூழலிலும், விவாதங்களில் பங்கேற்ற சூழல்கள் மிகமிகக் குறைவு. மும்பையில் இருந்துகொண்டு மதுராவில் போட்டியிட்டவர். தேர்தலில் வென்றதும் மதுராவிலேயே குடியிருப்பேன் என்றார். வாக்காளர்களுக்கு நன்றி சொல்ல ஒரு நாள் தங்கியதோடு சரி. அடுத்து, இன்னொரு நிகழ்ச்சிக்கு வந்தபோது, மதுராவில் சேரும் குப்பைகளை அகற்ற நடவடிக்கை எடுப்பேன், குரங்குத் தொல்லையை ஒழிப்பேன் என்றார். பாஜக பேச்சரசியல் தகுதிக்கு இதெல்லாம் எடுபடாது என்று நினைத்தாரோ என்னவோ, இப்போது பிருந்தாவனில் தஞ்சம் அடைந்திருக்கும் அபலை விதவையரைக் குறிவைத்துத் தாக்கியிருக்கிறார்.

மதுரா தொகுதிக்கு உட்பட்ட பிருந்தாவனத்தில் 40,000-க்கும் மேற்பட்ட விதவையர் இருக்கின்றனர். இவர்களில் பெரும்பாலானவர்கள் மேற்கு வங்கம், ஒடிசா, பிஹார் மாநிலங்களைச் சேர்ந்தவர்கள். “பிருந்தாவனத்தில் இனி கூட்டம் தாங்காது; இந்த விதவைகளெல்லாம் தங்களுடைய சொந்த மாநிலங்களில் இருக்கும் கோயில்களைப் பயன் படுத்திக்கொண்டால் என்ன?” என்று கேள்வி எழுப்பியிருக்கிறார் ஹேமமாலினி.

சொந்த உறவினர்களாலேயே அடித்து விரட்டப்பட்டு, கால்வயிற்றுக் கஞ்சிக்காக பஜனைப் பாடல்களைப் பாடியும் பிச்சை எடுத்தும் வாழ்வின் எஞ்சிய நாட்களைக் கழிக்கும் விதவையர்தான் பிருந்தாவனத்துக் கோயில்களில் தஞ்சம் அடைந்திருக்கிறார்கள். அங்கிருந்தும் அவர் களை விரட்டத்தான் தூபம் போட்டிருக்கிறார் ஹேமமாலினி.

முடியாத சூழலில் உள்ள விதவையர்களைக் கண்ணியமாக வைத்துப் பராமரிப்பது அவரவர் குடும்பத்தினரின் தார்மிகக் கடமை மட்டும் அல்ல; சட்டபூர்வ நெறிமுறையும்கூட. அப்படிப் பராமரிக்காத உறவினர்கள் மீது 2007-ல் இயற்றப்பட்ட பெற்றோர்கள், மூத்த குடிமக்கள் பராமரிப்பு, பாதுகாப்புச் சட்டப்படி நடவடிக்கை எடுக்க முடியும். அரசுக்கும் பொறுப்பு இருக்கிறது. அவர்கள் மறுவாழ்வுக்கான இல்லங்கள், கைத்தொழில்கூடம், பணி வாய்ப்புகள், மருத்துவமனை இப்படி எவ்வளவோ அரசும் நம் சமூகமும் செய்ய வேண்டியிருக்கிறது.

வாக்குரிமை உட்பட எந்த வித அதிகாரமும் இல்லாத அவர்கள், புறக்கணிக்கப்பட்ட நிலையில் தங்கள் இறுதி நாட்களை பிருந்தாவனில் கழிக்கிறார்கள். தனது உள்ளூர் வாக்குவங்கியைத் திருப்திப்படுத்தவே இப்படியெல்லாம் ஹேமமாலினி பேசியிருக்கிறார். அதைவிட, ஒரு நாடாளுமன்ற உறுப்பினராக அவரால் எவ்வளவோ செய்ய முடியும் அந்தப் பெண்களுக்கு. அவர்களின் பிரச்சினைகளைத் தீர்க்கத் தன்னார்வத் தொண்டு நிறுவனங்களின் உதவியையும் மத்திய, மாநில அரசுகளின் உதவியையும் அவர் நாடியிருக்கலாம். அவருடைய நாட்டிய நாடகங்களில் வசூலாகும் தொகையைக் கொண்டு அந்தப் பெண்கள் தங்குவதற்காகப் பல ஊர்களில் விடுதிகளைக்கூடக் கட்டித்தரலாம். அதற்கொரு இயக்கத்தை அவர் தொடங்கினால், அவர் சார்ந்திருக்கும் பாலிவுட்டே அதற்குக் கோடிக் கணக்கில் கொட்டித் தருமே! நமக்குக் கிடைத்த நாடாளுமன்ற உறுப்பினர்கள்தாம் எப்படி யெல்லாம் ஒரு பிரச்சினைக்குத் தீர்வுகாண யோசிக்கிறார்கள்?

திரைப்படப் பிரபலம் என்ற ஒரே ஒரு தகுதிக்காக ஹேமமாலினியைத் தொடர்ந்து நாடாளுமன்றத்துக்கு அனுப்பிக்கொண்டிருக்கும் பாஜக, அவரது பொறுப்பற்ற பேச்சுக்குப் பதில் சொல்ல வேண்டும். யாரை எங்கே அனுப்புவது என்று இந்நாட்டின் மக்கள் யோசிக்க வேண்டும்!

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE