வெறுப்பு அரசியலா, வளர்ச்சி அரசியலா?

தெலங்கானா முதல்வர் கே. சந்திரசேகர ராவின் சமீபத்திய பொதுக் கூட்டப் பேச்சு, பேட்டி, நடவடிக்கைகள் எல்லாம் இன்றைய அரசியல்போக்கின் அடையாளம் என்றே சொல்ல வேண்டும்.

இத்தனை ஆண்டுகள் அரசியலில் இருக்கும் ஒரு தலைவர், இந்த அளவுக்கு முதிர்ச்சியும் நிதானமும் இல்லாமல் இருப்பார் என்று நினைத்துக்கூடப் பார்க்க முடியவில்லை. “தெலங்கானா அரசையும் தெலங்கானா மக்களையும் அவர்களுடைய கலாச்சாரத்தையும் கேலி செய்தால் மன்னிக்க முடியாது, கழுத்தை முறிப்பேன், பூமியில் 10 கிலோ மீட்டர் ஆழத்துக்குப் புதைப்பேன்” என்றெல்லாம் பொதுக்கூட்ட மேடையில் பேசியிருக்கிறார். ஊடகங்களை நோக்கி அவர் விடுத்த மிரட்டலாகத்தான் இது கருதப்படுகிறது. சந்திரசேகர ராவின் வெறியூட்டும் பேச்சைக் கேட்ட தொண்டர்கள், அந்தக் கூட்டத்துக்கு வந்திருந்த பத்திரிகையாளர்களைத் தாக்கியிருந்தால் என்னவாகியிருக்கும்?

‘கிராமத்தில் டூரிங் டாக்கீஸில் திரைப்படம் பார்த்தவர்கள் நகரங்களில் மல்டி ப்ளக்ஸ் திரையரங்குக்கு வந்ததைப் போல தெலங்கானா ராஷ்டிர சமிதி கட்சியினர் நடந்துகொள்கின்றனர்’என்று சில ஊடகங்கள் வர்ணித் திருந்ததாகச் சொல்லப்படுகிறது. ஏற்கெனவே, ஆந்திரத்தின் மீதும் ஆந்திர மக்கள் மீதும் வெறுப்பைக் கக்கிவரும் தெலங்கானா அரசியல் வாதிகளுக்குத் தூபம் போடுவதுபோலவே அந்த ஊடகங்கள் நடந்து கொண்டதை ஏற்றுக்கொள்ள முடியாதுதான். அதேபோல், சந்திரசேகர ராவ் ஆற்றிய எதிர்வினையையும் நாகரிகம் உள்ள யாரும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். அனுபவம் மிக்க அரசியல்வாதி, அதுவும் ஒரு மாநில முதல்வர், பொதுமேடையில் நின்றுகொண்டு கொலை மிரட்டலுக்கு ஒப்பான வார்த்தைகளைப் பேசுவது எந்த அரசியல் நாகரிகத்தின் எச்சம்?

கோபத்தில் வாய் தவறிப் பேசிவிட்டார் என்றோ, தெரியாமல்தான் பேசினார் என்றோ கூற முடியாதபடிக்கு சந்திரசேகர ராவ் தொடர்ந்து பேசிவருகிறார். தெலங்கானா மக்கள் அனைவரையும் மாபெரும் கணக்கெடுப்பு ஒன்றுக்கு உட்படுத்த அவர் ஆணையிட்டபோது, ஏன் இப்படிச் செய்கிறீர்கள் என்று நிருபர்கள் கேட்டார்கள். “தெலங்கானா மக்களுக்கான திட்டங்களையும் சலுகைகளையும் பயன்களையும் முறையின்றிப் பிறர் பயன்படுத்துவது அநீதி; அந்த அநீதியைத் தடுத்து நிறுத்த நான் ஹிட்லராகக்கூட மாறுவேன்” என்று அவர் கர்ஜித்தது அவர் செல்லவிருக்கும் திசையை நமக்கு நன்றாக உணர்த்துகிறது.

கடந்த காலங்களில் நாம் பார்த்திருக்கும் காட்சிகளைத் திரும்பவும் பார்ப்பது போன்ற உணர்வைத்தான் சந்திரசேகர ராவின் நடவடிக்கைகள் உணர்த்துகின்றன. மக்களுக்கான போராட்டங்களில் இவர்களைப் போன்ற அரசியல்வாதிகள் முழுமூச்சுடன் ஈடுபடும்போது மக்கள் மனதில் பெரிய நம்பிக்கையை விதைக்கிறார்கள். அந்த நம்பிக்கையை அடிப்படையாகக் கொண்டு ஆட்சிக்கு வரும்போது தங்கள் முன்னவர்களைப் போலவே இவர்களும் நடந்துகொள்வதுதான் நமது அரசியலின் அவலம்.

ஆந்திரத்தின் மீது தொடர்ந்து வெறுப்பைக் கக்குவதாலும், சர்வாதிகாரியைப் போல நடந்துகொள்வதாலும் தெலங்கானாவை எந்த வகையிலும் முன்னேற்றிவிட முடியாது. ஆண்டாண்டு காலமாக ஒடுக்கப்பட்டு, மோசமான பொருளாதாரச் சூழலில் வாழும் தெலங்கானா மக்களை மேலே கொண்டுவருவதற்காகச் செய்ய வேண்டிய பணிகள் ஏராளமாக இருக்கின்றன. எனவே, வெறுப்பு அரசியலை விட்டுவிட்டு வளர்ச்சிக்கான அரசியலை முன்னெடுங்கள், சந்திரசேகர ராவ்!

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE