நம் காலத்தின் வியாசர்

By செய்திப்பிரிவு

1927-ல் கொலம்பியாவில் கடலோரப் பகுதியில் உள்ள அரகதகா என்ற ஊரில் பிறந்தவர் மார்க்வெஸ். கடந்த 17-ம் தேதி அவர் இறக்கும்போது அனைத்து நாடுகளுக்கும் சொந்தமான ஒரு எழுத்தாளர் என்ற நிலையை அடைந்துவிட்டிருந்தார்.

மார்க்வெஸின் 'நூறாண்டுகாலத் தனிமை' (1967) என்ற நாவல் வெளிவந்தபோது வாசகர்கள், விமர்சகர்கள், எழுத்தாளர்கள் அனைவரையும் பரவசத்தில் அது கட்டிப்போட்டது. மார்க்வெஸ் காட்டிய மாய யதார்த்த உலகை மேற்குலகு அதிசயமாக வாய்பிளந்து பார்த்தது. ஆண்டுக் கணக்கில் பெய்யும் மழை, வானிலிருந்து வரும் கம்பளத்தில் ஏறி வானில் மறைந்துவிடும் பேரழகி, பன்றி வாலுடன் பிறக்கும் குழந்தை போன்ற மாய யதார்த்த அம்சங்கள் வாசகர்களை முதலில் ஸ்தம்பிக்க வைத்தன. ஆனால், கீழைநாட்டினரோ இதிகாசங்கள், புராணங்களின் நவீனத் தொடர்ச்சியாக மார்க்வெஸின் படைப்புகளைக் கண்டுகொண்டனர்.

யதார்த்தம் என்பது மக்களின் நம்பிக்கைகள், விசித்திரக் கனவுகள், தொன்மங்கள், சர்வாதிகாரிகளின் அடக்குமுறை ஆகிய எல்லாவற்றையும் உள்ளடக்கியதுதான். தர்க்கத்துக்கு உட்படக்கூடிய யதார்த்தம் என்பது லத்தீன் அமெரிக்க வாழ்க்கையைச் சொல்வதற்கு ஏதுவாக இல்லை என்பதால்தான் மாய யதார்த்த பாணியில் கதையைச் சொல்ல அவர் ஆரம்பித்தார்.

அவருடைய முக்கியமான இன்னொரு நாவல் 'காலரா காலத்தில் காதல்' (1985), ஐம்பது ஆண்டுகள் இடைவெளியில் தங்கள் காதலை மீண்டும் புதுப்பித்துக்கொள்ளும் காதலர்களின் கதையைச் சொல்கிறது. வாழ்க்கை முழுதும் ததும்பிக்கொண்டிருக்கும் காதல் முதுமையின்போது உடலின் எல்லைகளைக் கடப்பதை மார்க்வெஸ் அளவுக்குச் சொல்லியிருப்பவர்கள் மிகச் சிலரே.

இடதுசாரி ஆதரவாளரான மார்க்வெஸ், சிலேயின் இடதுசாரி ஆட்சி தூக்கியெறியப்பட்டு சர்வாதிகாரி பினோசெட் 1973-ல் ஆட்சிக்கு வந்தபோது, பினோசெட் ஆட்சியில் இருக்கும்வரை தான் இனிமேல் எழுதப்போவதில்லை என்று சபதமெடுத்தார். எனினும், சர்வாதிகாரத் தணிக்கைக்கு அடிபணிந்ததுபோல் ஆகிவிடக் கூடாது என்பதால், மறுபடியும் எழுத ஆரம்பித்தார். லத்தீன் அமெரிக்கச் சர்வாதிகாரிகளின் வரலாற்றை ஆராய்ந்து, மாய யதார்த்தப் பாணியில் ‘குலமூப்பனின் அந்திமக்காலம்' (1975) நாவலை வெளியிட்டார்.

மார்க்வெஸ், ஃபிடெல் காஸ்ட்ரோவின் நெருங்கிய நண்பர். க்யூபாவில் அறிவுஜீவிகள் ஒடுக்கப்பட்டுச் சிறையில் தள்ளப்பட்டபோது தனது செல்வாக்கைப் பயன்படுத்திப் பலருக்கும் விடுதலை வாங்கித்தந்திருக்கிறார். காஸ்ட்ரோவின் நண்பர் என்பதாலேயே அவருக்கு நோபல் பரிசு கிடைக்காது என்று கருதப்பட்டாலும்கூட 1982-ல் அவருக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டது. க்யூப ஆதரவு காரணமாகக் கிட்டத்தட்ட 30 ஆண்டுகளாக அவருக்கு அமெரிக்காவில் நுழைய அனுமதி வழங்கப்படவில்லை. மார்க்வெஸின் தீவிர வாசகரான பில் கிளிண்டன் அதிபரான பிறகுதான் அந்தத் தடை நீக்கப்பட்டது.

மகத்தான கலைஞர்களின் மரணங்கள் துக்கமாக அனுசரிக்கப்படுவதில்லை; கொண்டாடப்படுகின்றன. அந்தக் கலைஞர்களின் நினைவை மேலும் ஆழமாக்கிக்கொள்வதற்கு, அந்தக் கலைஞர்களுடன் சமூகம் கொண்டுள்ள உறவை மேலும் பிணைப்பதற்கு அவர்களுடைய மரணம் ஒரு சந்தர்ப்பத்தை ஏற்படுத்துகிறது. நம் காலத்து வியாசரின் நினைவுக்கு அஞ்சலி செலுத்துவோம்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE